Thursday 28 February 2013

கருட புராணம்

கருட புராணம்


யமதர்மராசன் அரண்மனை, சித்திரகுப்தன் மண்டபம், பாவ அவஸ்த்தைகள் பற்றிய விளக்கம் - ஸ்ரீ கருட புராணத்தில் திருமாலால் கருடனுக்கு கூறப்பெற்றவை 

கருடன் மணிவண்ணப் பெருமானைத் தொழுது, யமபுரி எங்குள்ளது? அங்கு செல்லும் மார்க்கம் எப்படிப்பட்டது என்பதை மீண்டும் எனக்கு விளக்கமாக கூற வேண்டும் என்று பிரார்த்தித்தார்.

திருமால் கருடனை நோக்கிக் கூறலானார்.
மீண்டும் அதைப் பற்றிக் கேட்டதால் எஞ்சியவற்றை இப்போது சொல்கிறேன் கேட்பாயாக.

யமபுரிக்கு செல்லும் வழியில் சிறிது தூரம் வரை செம்பை உருக்கி வார்த்தது போல் கனல் கரந்திக் கொண்டிருக்கும். அதற்கப்பால் சிறிது தூரம் இண்டை முட்களாலும் தீக் கொள்ளிகளாலும் நிறைந்திருக்கும். சிறிது தூரம் பொறுக்க முடியாத குளிர்ப்பிரதேசம் அமைந்திருக்கும். பூலோகத்திற்கும் எமலோகத்திற்க்கும் இடையே எண்பத்தாறாயிரம் காத வழி உள்ளது. அத்தனை காதவழியிலும் பாபஞ் செய்த ஜீவனுக்கு அந்த வழி நெடுகிலும் மரத்திநிழலும் பருகுவதர்க்குத் தண்ணீரும் கூடக் கிடைக்காது. பாபிகளும் யமலோகமும் அங்குச் செல்லும் மார்க்கமும் மிகவும் கொடுமையாக இருக்கும்


கருடாஇனி யம லோகத்தின் தன்மையைச் சொல்லுகிறேன், கேட்பாயாக!
தென் திசைக்கும் நிருதியின் திசைக்கும் நாடு மையத்தில் யமபுரியானது வஜ்ஜுர மயமாயும் தேவர்கள் அசுரர்கள் ஆகிய இருதரத்தாலும் சிதைக்கத் தகாததாயும் அமைந்திருக்கும். அந்தப் பட்டினத்திற்கு நடுவில் சதுரமாய் நூறு யோசனை உயரமுள்ளதாயும் அநேகஞ் சாளரங்களைக் கொண்டதாயும், துகிர்க் கொடிகள், முத்துக் கோவைகள், தூரங்கள் இவற்றால் அலங்கரிக்கப் பெற்றதாயும் சுவர்ணமயமாகவும் எமதர்மராஜனின் அரண்மனை அமைந்திருக்கும்.

அந்த அரண்மனையின் உள்ளே பத்து யோசனை அகல நீளமுள்ள அநேகமாயிரம் வைரத்தாலான தூண்கள் நிறுத்திய மண்டபமும் மாளிகையும் அமைந்திருக்கும். அங்கு சைத்திய சௌரப்பியமான மென்காற்று இயங்குவதாயும் எப்போதும் ஆடலும் பாடலும் இடைவிடாமல் புகழும் ஒரு திவ்விய மண்டபம் இருக்கும். அந்த மண்டபத்தில் யமதூதர்கள் கரங்குவித்த வண்ணம் ஒருபுறம் நின்று கொண்டிருப்பார்கள். ரோகங்கள் எல்லாம் கோர உருவத்துடன் நின்று கொண்டிருக்கும். அவர்களுக்கு நடுவில் கண்டவர்கள் அஞ்சும்படியான ரூபத்தோடு மகிழ்ச்சியாக யமதர்மன் வீற்றிருப்பான்.

அவன் வீற்றிருக்கும் மண்டபத்திற்கு அருகில் இருபத்தைந்து யோசனை அகல நீலமுள்ளதாகவும் பத்து யோசனை உயரமுள்ளதாகவும் பலவித அலங்காரங்களால் அழகு செய்யப்பட சித்திரகுப்தனுடைய அரண்மனை இருக்கிறது. அந்த அரண்மனையில் ஒரு திவ்விய மண்டப்பத்தில் சித்திர குப்தன் வீற்றிருப்பான். அவன் சகல ஜீவன்களும் செய்யும் பாவபுண்ணியங்களை ஒன்று விடாமல் கணக்கு எழுதிக் கொண்டிருப்பான். அவன் எழுதும் கணக்கில் ஒரு சிறு பிழையும் உண்டாகாது.

அந்த சித்திரகுப்தனுடைய அரண்மனைக்குக் கிழக்குத் திசையில் ஜுரத்துக்கும், தென்திசையில் சூலைநோயோடு வைசூரி நோய்க்கும், மேற்குப் பக்கத்தில் காலபாசத்தொடு கூடிய அஜீரணத்துக்கும் அருசிக்கும், வடக்குப் பக்கத்தில் வயிற்று வலிக்கும், தென் கிழக்கில் மயக்கத்துக்கும் தென் மேற்கில் அதிசார நோய்க்கும், வடமேற்கில் ஜென்னிக்கும் தனித்தனியே கிரகங்கள் அமைக்கப்பட்டிருக்கும். அவ்ரோகங்கள் யாவும் யமனுடைய உத்தரவை எதிர்பார்த்துக் கொண்டே அம்மனைகளில் வசித்திருக்கும்.

யமனுடைய அரண்மனைக்குத் தென்திசையில் பாபஞ் செய்த சேதனர்கள் யமகிங்கரர்கள் பற்பலவிதமாக ஹிம்சை செய்வார்கள். சிலஜீவர்களை உலக்கைகளால் நையப்புடைப்பார்கள். சிலரைக் கரிய கொடிய ஆயுதங்களால் சிதைக்கிறார்கள். சிலரைச் சூரிகையால் சீவுகிறார்கள். சிலரை செக்கிலிட்டு வதைக்கிறார்கள். சிலரை இரும்புச் சலாகையில் கோர்த்து பெருந்தணலில் வாட்டுகிறார்கள். இன்னுஞ் சிலரை அக்கினிக் குண்டத்தில் வேக வைக்கிறார்கள்.

அங்கு செம்பினால் செய்யப்பட ஆண்பாவைகளும் பெண்பாவைகளும் அக்கினியில்  சூடேற்றப்பட்டு தகத்தகாயமாய் தகித்துக்  கொண்டிருக்கினறன. பரஸ்திரிகளை கூடி மகிழ்ந்த ஜீவர்களை யமதூதர்கள் பார்த்து, பாவிகளே! தருமமும் மானமும் பாராமல் பிறன் மனைவியரைப் புணர்ந்த இன்பம் பூவுலகத்தில் இவ்வுலகத்தில் மாற்றான் பட்ட மனத்துன்பமே இப்போது நீங்கள் அனுபவக்க நேரிட்ட பயனாகும். அந்தப் பயன் இதுவேதான்! என்று அதட்டிச் சொல்லி, நெருப்பெனக் கொதிக்கும் பெண்பதுமையோடு, பாவிகளை ஒன்று சேர்ப்பார்கள். பரபுருஷோடு சேர்ந்த மங்கையரை தகிக்கின்ற ஆண் பதுமையோடு அங்ஙனமே ஒன்று சேர்ப்பார்கள்.

வினுதையின் மைந்தனே! புருஷனானவன் தன் மனைவியைத் தவிர பரஸ்திரியை கூடிக் கலந்ததிற்க்கும் ஸ்திரியானவள் தனது கணவரையன்றி பரபுருஷனைக் கூடியதற்கும் யமலோகத்தில் விதிக்கப்படும் தண்டனையைப் பார்!   இத்தகைய கொடிய தண்டனை உள்ளதாக இருந்தும் ஸ்திரி புருஷர்களில்  நல்லொழுக்கத்தில் நிற்ப்பவர்களை பூவுலகில் காண்பதற்கே அரிதாகி விடுகிறது. யமபுரியில் சில பாவிகளைக் கரும்புகளை கரும்பாலையில் சக்க வைத்து கசக்கி சாறு பிழிவதைப் போல ஆலையில் கொடுத்து வதைக்கிறார்கள். சிலரை நரகங்களில் தள்ளி அடியாளம் வரையிலும் அழுத்துகிறார்கள்.

கடன் வாங்கிக் கொண்டு திருப்பிக் கொடுக்காதவர்களை யமகிங்கரர்கள் அழைத்துச் சென்று கடன்கொடுத்தவனுக்கு அதை திருப்பிக் கொடுப்பதை விட்டு அவனிடம் வன்கண்மை பேசினீர்களே!    என்று முனிந்து நையப்புடைக்கிறார்கள். பாவிகள் படுகின்ற துயர்களை விளக்கிச் சொல்வதால் பயன் என்ன? இன்னவன் அறநெறியாளன், இன்னவன் அதகுமிஷ்டன், இன்னவன் சுவர்க்கம் புக வேண்டியவன், இன்னவன் நரகம் செல்ல வேண்டியவன் என்பதை அவரவர் ஒழுக்கத்தைக் கொண்டே உணரலாம். தர்மம் செய்தவனே சுவர்க்கம் புகுவான் என்பது நிச்சயம். ஆகையால் யாவரும் தர்மநெறியிலேயே வாழ்ந்து தருமஞ் செய்வதே வாழ்வுக்கும் பரலோக வாழ்வுக்கும் நல்லது.

சித்திரகுப்தன் கணக்கும் நரகங்களும்
சூதமா முனிவர் சௌனகாதி முனிவர்களுக்கு பன்னிரண்டு சிரவணரின்சரிதத்தைச் சொல்லிய பிறகு மேலும் தொடர்ந்து சொன்னார். முனிவர்களே! திருமால் கருடனை நோக்கி கூறலானார்.

கருடா! ஜீவர்கள் பூவுலகில் வாழ்ந்த காலத்தில் செய்த பாப புண்ணியங்களை எல்லாம் சித்திர குப்தன் என்ற யம லோக கணக்கன் சிரவணர்களின் மூலமாக அறிந்து யம தர்மராஜனுக்கு அறிவித்து அவனது உத்தரவுப்படியே அவரவரது பாவங்களின் தன்மைக்கேற்ற தண்டனை வாசித்துச் சொல்ல யமதர்மன் தன கிங்கர்களைக் கொண்டு அத்தண்டனைகளை அவ்வவ்போதே நிறைவேற்றிச் செய்து விடுவான்.

ஜீவனானவன் வாக்கால் செய்த பாவங்களை வாக்காலும், உடலால் செய்த பாவப் புண்ணியங்களை உடலாலும் மனத்தால் செய்த பாவப் புண்ணியங்களை மனத்தாலும் அனுபவிக்க வேண்டியிருக்கும்.

பெரியோரை இகழ்ந்து நீச மொழிகளால் ஏசிபேசினால்  பாவங்கள் உண்டாகி வாயிலிருந்து புழுக்களாக சொரியும். புண்ணியங்களை மட்டும் செய்தவர்கள் நல்ல சரீரத்தோடு நோய் இன்றி இன்பமாக வாழ்வார்கள். பிறவுயிர்களை ஊட்டி வதைத்தவர்கள் கொடூரமான சரீரத்தை அடைந்து துன்புறுவார்கள்.

பக்ஷி ராஜனான கருடன் திருமகள் கேள்வனைச் சிரம் வணங்கி கார்மேக வண்ணரே! நரகங்கள் என்பவை யாவை? அவை எவ்வாறு இருக்கின்றன? அவற்றில் யார் யார் எவ்வாறு தண்டிக்கப்படுகின்றார்கள்? அவற்றை அடியேனுக்கு விபரமாக தெரிவிக்க வேண்டும் என்று கேட்க, கார்மேக வண்ணன் கருடனை நோக்கி, காசிப் புத்திரனே காலதேவனால் நிச்சயிக்கப்பட்ட தீவாய் நரகங்கள் எண்பத்து நான்கு லட்சமிருக்கின்றன.
அவற்றில் கொடிய நரகங்கள் 28 இருகின்றன. அவை

28 கொடிய நரகங்கள்.
பக்ஷி ராஜனான கருடன் திருமகள் கேள்வனைச் சிரம் வணங்கி கார்மேக வண்ணரே! நரகங்கள் என்பவை யாவை? அவை எவ்வாறு இருக்கின்றன? அவற்றில் யார் யார் எவ்வாறு தண்டிக்கப்படுகின்றார்கள்? அவற்றை அடியேனுக்கு விபரமாக தெரிவிக்க வேண்டும் என்று கேட்க,

கார்மேக வண்ணன் கருடனை நோக்கி, காசிப் புத்திரனே காலதேவனால் நிச்சயிக்கப்பட்ட தீவாய் நரகங்கள் எண்பத்து நான்கு லட்சமிருக்கின்றன. அவற்றில் கொடிய நரகங்கள் 28 இருகின்றன. அவை

1 . பிறன்மனைவி, குழந்தை, பொருள் இவற்றை கொள்ளையடிப்போர் அடையுமிடம் தாமிரை நரகம்.

2 . கணவன் அல்லது மனைவியை வஞ்சித்து வாழ்வோர் கண்களில் இருள், கவ்விய மூர்ச்சித்து விழும் நரகம் அந்த தாமிஸ்ரம்.

3 .அக்கிரமமாகப் பிறருடைய குடும்பங்களை அழித்து பலவந்தமாகப் பொருள் பறிக்கும் சுயநலக்காரர்கள் அடையும் நரகம் ரௌரவமாகும்.

4. குரு என்ற ஒருவகையான அகோரமான மான்கள் பாவிகளைச் சூழ்ந்து துன்புறுத்தும் நரகம் மஹா ரௌரவமாகும்.

5. தன் சுவைக்காக ஜீவன்களை வதைத்தும் சித்திரவதை செய்தும் புவியில் வாழ்ந்து மரித்தவன் அடையும் நரகம் கும்பி பாகம்.

6. பெரியோரையும்பெற்றோரையும் துன்புறுத்திய வெறியர்கள் அடையும் நரகம் காலசூத்திரம்.

7. தன தெய்வத்தை நிந்தித்து தனக்குரிய தர்மங்களை விடுத்த அதர்மிகளடையும் நரகம் அசிபத்திரமாகும்.

8 .அநியாயமாகப் பிறரை தண்டித்து அகந்தையுடன் அநீதிகளும் பலவகைக் கொடுமைகளும் புரிந்தவர்கள் அடையும் நரகம் பன்றிமுகம்.

9. சித்திரவதை, துரோகம், கொலை செய்த கொடியவர்கள் அடையும் நரகம் அந்தகூபம்.

10.தான் மட்டும் உண்டு பிறரைத் துளைக்கும் கிருமிகள் போல வாழ்ந்து, பக்தியில்லாத பாவிகள் அடையும் நரகம் கிருமி போஜனம்.

11 .பிறர் உரிமைகளையும் உடமைகளையும் தனக்கிருக்கும் வலிமையால் அபகரித்துக் கொள்ளும் பலாத்காரம் பாவிகளைடையும் நரகம் அக்கினி குண்டம்.

12. கூடத் தகாத ஆண் அல்லது பெண்ணைக் கட்டித் தழுவிக் கூடி மகிழும் மோக வெறியர்கள் அடையும் நரகம் வக்ர கண்டகம்.

13. நன்மை, தீமை, உயர்வு, தாழ்வு இவற்றை பாராமல் தரங்கெட்டு எல்லோருடனும் கூடி மகிழும் மோகந்தகாரப் பாவிகள் அடையும் நரகம் சான்மலியாகும்.

14 .அதிகார வெறியாலோ, கபடவேசத்தாலோ, நயவஞ்சகத்தாலோ நல்வழிகளைக் கெடுக்கும் அதர்மிகள் அடையும் நரகம் வைதரணி.

15 .கூச்சமில்லாமல் இழிமகளைக் கூடி ஒழுங்கீனங்கள் புரிந்தும் தன வழியை விட்டு ஓர் இலட்சியமுமில்லாமல் மிருகங்களைப் போல் திரியும் கயவர்கள் அடையும் நரகம் பூயோதம்.

16 .பிராணிகளைத் துன்புறுத்திக் கொலை புரியும் கொடுமைக்காரர்கள் அடையும் நரகம் பிராணரோதம்.

17 . டம்பத்திற்க்காக பசு வதை புரிந்து யாகம் முதலியவற்றைச் செய்யும் பித்தலாட்டகாரர்கள் அடையும் நரகம் விசஸனம்.

18 .வாழ்க்கைத் துணைவியை வற்புறுத்தி  விபரீத மோக இச்சைக்கு ஆளாகிக் கெடுக்கும் தீயோர்கள் அடையும் நரகம் லாலா பக்ஷம்.

19 .வீடுகளுக்கு தீ வைப்பது, சூறையாடுவது, ஜீவா வதை புரிவது, விஷமூட்டுவது, கூட்டங் கூட்டமாகக் குடிமக்களைக் கொல்வது போன்ற செயல்களைச் செய்த பாவிகள் அடையும் நரகம் சாரமேயாதனம்.

20 .பொய்சாட்சி கூறுதல் முதலிய அகம்பாவச் செயல்புரியும் பாவிகள் அடையும் நரகம் அவீசி.

21 .எக்குலத்தினராயினும் மதுபோதைப் பொருள்களைக் கொடுத்தும் குடித்தும் குடிகளைக் கெடுக்கும் குடிகேடர்கள் அடையும் நரகம் பரிபாதனம்.

22 .தன்னை மட்டுமே பெரியதாய் மதித்து பெரியோரையும், நல்லோரையும் அவமதித்து தீச்செயல் புரிந்த பாவிகள் அடையும் நரகம் கஷாரகர்த்தமம்.

23 .நரமேத யாகம் புரிதல், ஆணாயினும் பெண்ணாயினும் மனித மாமிசம் புசித்தல், சாதுவான பிராணிகளை வதைத்தல் முதலான தீவினை புரிந்தோரை முன்னின்று வதைக்கு அவதிப்படும் நரகம் ரகோஷாகனம்.

24 .எவ்விதத் தீமையும் புரியோதாரைக் கொல்லுதல், நயவஞ்சகமாகக் கொல்லுதல், தற்கொலை செய்து கொள்ளுதல், நம்பிக்கைத் துரோகம் புரிதல் இவர்கள் அடையும் நரகம் சூலரோதம்.

25 .தீமையே புரிந்த துரோகிகளடையும் நரகம் தந்த சூகம்.

26 .பிராணிகளைக் கொடூரமாக வதைத்த கொடுமைக்காரர்கள் அடையும் நரகம் வடாரேவதம்.

27 .வீட்டுக்கு வந்த விருந்தினரை வெறுத்து நிந்தித்த லோபிகளும் பகிர்ந்துண்ண விரும்பாத சுயனலவாதிகாலும் அடையும் நரகம் பரியாவர்த்தனகம்.

28 .செல்வச் செருக்காலும், செல்வாக்கினாலும், பிறரைத் துன்புறுத்துகிறவர்களும் அநீதியாய்ப் பொருள் சம்பாதித்து, அறநெறிகளில் செலவிடாமல் பதுக்கி வைப்பவர்கள் அடையும் நரகம் சூசிமுகம் என்பதாகும்.

இத்தககைய இருபதெட்டு வகை நரகங்கள் ஒவ்வொரு வகையிலும் எராளமானவையாக மிகக் கொடியனவாக அமைந்திருக்கும்.

No comments:

Post a Comment

...Recently Published Post...

குளிக்கும் போது...

குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள். (கர்மம் செய்தபின்னும், மயானத்திற்க...