Thursday, 14 March 2013

சைவ சமயம் - வினாவிடை


திருச்சிற்றம்பலம்

முன்னுரை

    நமச்சிவாய என்பார் உளரேல் அவர் 
    தம் அச்ச நீங்கித் தவநெறி சார்தலால் 
    அமைத்துக் கொண்டதோர் வாழ்க்கையனாகிலும் 
    இமைத்து நிற்பது சால அரியதே.
உய்வார்கள் உய்யும் வகை:
“வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி. மதித்திடுமின்!” என்று அறைகூவினர் நாவினுக்கு அரசர். இப்பிறவி பாவமானது அல்ல. இது இறைவன் நமக்குக் கொடுத்த பெருங்கொடை. அரியதாகிய இந்த மனிதப் பிறவியை நாம் பயன்படுத்த முதற்கண் நாம் இதன் நோக்கத்தைப் புரிந்து கொள்ளவேண்டும்.
இவ்வுலக வாழ்வு காரணம் இன்றி இறைவனால் ஏற்படுத்தப்பட்டதன்று. இங்கு நமக்குக் கிடைக்கும் நல்லனவும் தீயனவும் யாவையும் காரணம் இன்றி ஏற்படுவதன்று. இறைவன் காரணம் இன்றி பலவிதமான துயரங்கள் நிலவும் இவ்வுலகில் நம்மை வைத்திருந்தால் அவரை நாம் எப்படிக் “கருணை வடிவானவர்” என்று அழைக்க முடியும்?
சைவ நன்னெறி இதற்குத் தகுந்த விடை கூறி நம்மை உய்விக்கிறது. ஆன்மாக்களாகிய நாம் யாராலும் படைக்கப்படவில்லை. (இறைவனால் படைத்தார் எனில், அவர் படைக்காமல் இருந்திருந்தால் நாம் துன்பத்திற்கு ஆளாயிருக்க மாட்டோம். எனவே அவர் செய்தது கருணை உடையவராகச் செய்ததாக இருக்க முடியாது.) தொன்று தொட்டே ஆணவம் என்ற மலம் ஒட்டுண்ணி போல அழுத்த அழுந்தி இருந்தோம். எப்போதும் பேரின்ப மயமாக உள்ள இறைவன் இவ்வாறு மலத்தால் துன்புறும் உயிர்களுக்கு இரங்கி அவை அம்மலத்தின் பற்றை விட்டு இன்பமயமான தன்னைப் பற்றுதல் பொருட்டு உடல், கருவிகள், உலகங்கள் மற்றும் போகங்களைப் படைத்தார். இறைவன் எல்லா வல்லமை¨யும் உடையவர் என்றாலும் அவரால் இன்பத்தை ஊட்ட முடியுமே அன்றி அவ்வின்பத்தை நாம் தான் நுகர்ந்து / சுவைத்து அனுபவிக்க வேண்டும். அந்த இன்பத்தைப் பருகுதலுக்கு நாம் நம்மை ஆயத்தப் படுத்திக் கொள்ளவேண்டும். (இனிப்பினைப் பிறர் தர வல்லவர் எனினும் நாமே அதன் சுவையை உணரவேண்டும். அச்சுவை பிறரால் நமக்குத் தரமுடியாதது.) அவ்வாறு நாம் சிறிது சிறிதாகப் பக்குவப் படுதல் பொருட்டே மேற்கூறிய உடல் முதலானவை படைக்கப்பட்டன. இவை நமக்குத் தண்ணீரில் தத்தளிக்கும் எறும்புக்கு நீட்டிய குச்சி போல இன்பக் கரை அடைய இறைவன் நமக்கு அளித்த பெருங்கொடைகள் ஆகும்.
இறைவன் இத்தகு கருணை செய்த போதும் நாம் அதன் பெருமை உணராது, குச்சியில் ஏறிய எறும்பு கரை சேரக் கருதாது ஆடி மீண்டும் நீரில் விழுவது போல், நாம் செல்ல வேண்டிய நெறியைப் பற்றாது, இவ்வுடலே நாமென்று மயங்கி, வேண்டிக் கொண்டுவந்த தோண்டியைக் கூத்தாடிப் போட்டுடைக்கின்றோம். இம்மயக்கத்தில் பலர் சேரவேண்டிய சிவகதிக்கும் முயல்வதில்லை, இவ்வுலக வாழ்வையும் அழியாத இன்பமாக்கிக் கொள்வதில்லை. இவ்வாறு நாம் எண்ணும் எண்ணங்களே, செய்யும் செயல்களே நல்வினை மற்றும் தீவினைகளாக இறைவனால் நமக்கு ஊட்டப்படுகின்றன. இறைவன் நமக்கு இவ்வினைகளை ஊட்டுவதன் காரணம் தண்டிப்பதல்ல, திருத்துவதே. (தவறுகளை எல்லாம் தண்டித்தால் அவர் எப்படி அருள் நிறைந்தவர் என்பது?) எவ்வாறு ஒரு தாய் தவறு செய்யும் குழந்தையைப் பழி வாங்கும் எண்ணமின்றித் திருத்தும் நோக்கத்தில் மட்டுமே கடிந்து கொள்கின்றாளோ அது போன்றே தாயினும் நல்ல சிவபெருமான் நம்முடைய பெரிய வினைக்கூட்டத்திலிருந்து சிறிது நமக்கு ஊட்டுகிறார்.
இதனை உணர்ந்து நமது உடல் மற்றும் நமக்குக் கிடைத்த எல்லாமும் நமது அன்று, சிவபெருமானுடையன என உணர்ந்து, அவர் நம் மேல் பொழிந்துள்ள கருணையை நினைந்து நினைந்து பெருகுகின்ற அன்பு என்னும் ஒட்டுப் பொருளினால் அவரைப் பற்றிக்கொண்டால் – இன்பமே எந்நாளும்; துன்பமில்லை. நாம் செய்ய வேண்டுவன அவ்வளவே.
 
 “இவ்வாறு இறைவனின் கதிரொளி போன்ற, இருள் கடந்த பெருமையினை அறிந்து, 
 இங்கு காணும் எல்லாவற்றையும் உண்மை உணர்ந்த உறுதியுடையவன், இறைவனின் 
 பல நாமங்களைக் (பெருமைகளை) கூறி வணங்குகிறான். அவ்வாறு அறிபவன் 
 அமுதத்தை இங்கேயே பெற்றவன் ஆகின்றான். வேறு வழியேதும் அறியப்படவில்லை.” 
       - யசுர் வேதம்.
இத்தகு பெருமக்கள் எப்போதும் இன்பமே வடிவான இறைவனின் தொடர்பிலேயே உள்ளதால் பிற துன்பங்கள் அவர்களால் நுகரப்படுவதில்லை. இவ்வுலக வாழ்விலே சிவ மயமாக - இன்ப மயமாகத் திகழ்ந்து, பின்னர் அவ்வின்பம் அடையத் தேவைப்பட்ட உடல் முதலியன வேண்டாது இன்பம் நீங்காத சிவகதி அடைகின்றனர்.
கரும்பு தின்னக் கூலியுமா வேண்டும்? சிவபெருமானின் தூல மந்திரமான, “நம:சிவாய” என்ற திருஐந்தெழுத்தை ஓதி அவர் மேல் அன்புற்று இன்புறுவோம்.
 தண்பொழில் சூழ் சண்பையர்கோன் தமிழ்ஞான சம்பந்தன்
 விண்பொலிவெண் பிறைச்சென்னி விகிர்தனுறை வெண்காட்டைப்
 பண்பொலி செந்தமிழ் மாலை பாடிய பத்திவை வல்லார் 
 மண்பொலிய வாழ்ந்தவர் போய் வான் பொலியப் புகுவாரே.
உலகம் முழுமையும் பரவியிருந்த - காலம் கடந்த சமயம் சைவமே. எல்லாம் கடந்தவரும் நம்மை உய்விக்கும் ஒளி வடிவானவரும் ஆன இறைவன் மேல் நம் அன்பை ஒருமுகப்படுத்தும் பொருட்டு சுடர்க்குறியாக (இலிங்கம்) இயல்பாக இறைவனைத் தந்தது இச்சைவம். இச்சைவத்தின் அடிப்படைக் கூறுகள் பலவாறாக - எடுப்போர் வண்ணத்திற்கேற்பவும், காலத்தால் திரிந்தும் உலகின் பலபல சமயங்களில் உள்ளதை ஆய்ந்து உணரலாம்.
இவ்வாறு முதன்மையானதும் தூய்மையானதுமான சைவத்தில் வழிவழியாக வந்தவர்கள் தங்களுக்குக் கிடைத்தது, தொட்டதெல்லாம் பொன்னாக்கும் மணியென்று உணராது, பழைய கல் என்று மயங்கி, பயன் பெரிதில்லாத கூழாங்கற்கள் பல தேடி அலைகின்றனர். அத்தகு நமக்கு, “மகிழ்தி மட நெஞ்சே! மானிடரில் நீயும் திகழ்தி!! பெருஞ் சேமம் சேர்ந்தாய்!!!” என்று சைவத்தின் பெரியோர்கள் நம்மைக் காலந்தோறும் இறைவனின் திருவருளால் உண்மை உணர்த்தி வழிப்படுத்தி வருகின்றனர். அத்தகு உண்மைகளைத் தொகுத்து அளித்த யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் அவர்களின் “சைவ வினா விடை”, தருமபுர ஆதீன வெளியீடான “சித்தாந்த சைவ வினா விடை” மற்றும், திருவாவடுதுறை ஆதீன வெளியீடான “சைவ சித்தாந்தத் தடைகளும் விடைகளும்” போன்ற நூல்களைச் சார்ந்து “சைவ சமயம்” பற்றிய வினா விடைகள் இங்கு இடம்பெறுகின்றன.


கடவுள் இயல்

  1. உலகத்திற்கு முதலாக இருப்பவர் யார்?
    இறைவன்.
  2. இறைவனை எப்பெயர் கொண்டு சிறப்பாக அழைக்கின்றோம்?
    சிவபெருமான்.
  3. சிவபெருமான் என்று ஏன் அழைக்கின்றோம்?
    சிவம் என்ற சொல்லுக்கு "செம்மை" (பூரணத்துவம்), "மங்களமானது" என்று பொருள். எல்லாவற்றிற்கும் மேலாக, முழுமையாக, தான் மங்களகரமாகவும் தன்னைச் சார்ந்தவர்களை மங்களகரமாக்குபவருமான இனிய இறைவனைச் சிவபெருமான் என்று அழைக்கின்றோம்.
  4. சிவபெருமான் எப்படிப் பட்டவர்?
    என்றும் உள்ளவர்; எங்கும் நிறைந்தவர்; எல்லாம் அறிபவர்; எல்லாம் வல்லவர்; தூயவர்; அழிவிலா இன்பம் உடையவர்; அன்பிலாதவர்க்கு ஆட்படாதவர்.
  5. சிவபெருமானை நாம் ஏன் தொழ வேண்டும்?
    சிவபெருமானைத் தொழுவதால் சிவபெருமானுக்கு எந்தப் பயனும் இல்லை. ஆனால், அழிவில்லாதவரும் இன்ப மயமானவருமான சிவபெருமான் தம்மைத் தொழுபவர்களுக்கு அந்த அழிவில்லாத இன்பத்தை அடைய அருள் புரிவார். உலகியலில் தோன்றும் இன்பங்கள் நிலையானவைகள் அல்ல. ஆனால் சிவபெருமான் அருளும் இன்பத்தைப் பெற்றவர்கள் என்றென்றும் இன்பத்தைப் பெற்று மகிழ்ந்திருப்பர். அதனால் இந்த உடல் எடுத்ததின் பயன் சிவ வழிபாடு செய்து அந்தப் பேரின்பத்தை அடைவதே.
  6. சிவபெருமான் ஆன்மாக்களுக்காகச் செய்யும் தொழில்கள் யாவை?
    படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐந்துமாம்.
  7. படைத்தலாவது யாது?
    ஆன்மாக்களுக்குத் தனு கரண புவன போகங்களை முதற் காரணத்தினின்றும் தோற்றுவித்தல்.
  8. காத்தலாவது யாது?
    தோற்றுவிக்கப்பட்ட தனு கரண புவன போகங்களை நிறுத்தல்.
  9. அழித்தலாவது யாது?
    தனு கரண புவன போகங்களை முதற்காரணத்தில் ஒடுக்குதல்.
  10. மறைத்தலாவது யாது?
    ஆன்மாக்களை இருவினைப் பயன்களாகிய போக்கியப் பொருள்களில் அமிழ்த்தல்.
  11. அருளலாவது யாது?
    ஆன்மாக்களுக்குப் பாசத்தை நீக்கிச் சிவதத்துவத்தை விளக்குதல்.
  12. தனு கரண புவன போகம் என்றது என்ன?
    தனு - உடம்பு, கரணம் - மன முதலிய கருவி, புவனம் - உடம்புக்கு ஆதாரமாகிய உலகம், போகம் - அனுபவிக்கப்படும் பொருள்.
  13. சிவபெருமான் இந்த ஐந்து தொழில்களையும் எதைக்கொண்டு செய்கிறார்?
    தமது சத்தியைக் கொண்டு செய்கிறார்.
  14. சத்தி என்னும் சொல்லுக்குப் பொருள் யாது?
    வல்லமை
  15. சிவபெருமானின் சத்தி யாவர்?
    உமாதேவியார்
  16. சிவபெருமான் உயிர்களுக்கு அருள் செய்யும் பொருட்டு உமையோடு எழுந்தருளியுள்ள முதன்மைஇடம் யாது?
    திருக்கயிலை மலை.
  17. சிவபெருமான் உயிர்களுக்கு எவ்வெவ்விடங்களில் நின்று அருள் புரிகின்றார்?
    சிவலிங்கம் முதலிய திருமேனிகளிடத்தும், சைவாசாரியாரிடத்திலும், சிவனடியாரிடத்திலும் நின்று அருள் செய்வார்.
  18. சிவபெருமானை முழுமுதற் பொருளாக வழிபடும் சமயத்திற்குப் பெயர் யாது?
    சைவம்
  19. சைவத்தில் தலையாய நூல்கள் யாவை?
    திருமறைகளும், ஆகமங்களும், திருமுறைகளும்.
  20. இவைகளில் விதிக்கப்பட்டன யாவை?
    சிவ புண்ணியமும் சீவ (உயிர்) புண்ணியமுமாம்.
  21. சிவ புண்ணியம் யாது?
    சிவமே முதல் எனக் கருதிச் செய்யப்படும் அனைத்தும் சிவ புண்ணியமாம்.
  22. உயிர்ப் புண்ணியம் (சீவ நன்மை) யாது?
    1. கடவுளை வழிபடல், 2. தாய், தந்தை, ஆசான் இவர்களைப் பேணுதல், 3. உயிர்க்கு இரங்குதல், 4. உண்மை பேசுதல், 5. செய்நன்றி அறிதல் போன்றன.
  23. புண்ணியங்களைச் செய்தவர் எதனை அனுபவிப்பர்?
    சிவ புண்ணியங்களைச் செய்தவர் சிவ இன்பத்தையும், சீவ ( உயிர் ) புண்ணியங்களைச் செய்தவர் சுவர்க்க இன்பத்தையும் அனுபவிப்பர்.
  24. பாவங்கள் ஆவன யாவை?
    கொலை, களவு, கள்ளுக் குடித்தல், ஊண் உண்ணல், பொய் பேசுதல், சூதாடுதல்.
  25. பாவங்கள் செய்தவர் எதனை அனுபவிப்பர்?
    நரகத்தில் விழுந்து அத்துன்பத்தை அனுபவிப்பர்.


    நாட்கடன் இயல்

  26. நாள் தோறும் முறையாக எந்த நேரத்திலே உறக்கம் நீங்கி எழ வேண்டும்?
    சூரியன் உதிக்க ஐந்து நாழிகைக்கு முன்னே உறக்கம் நீங்கி எழ வேண்டும். ( விடியல் 4.00 மணி )
  27. உறங்கி எழுந்தவுடன் யாது செய்தல் வேண்டும்?
    திருநீறு அணிந்து சிவபெருமானை நினைந்து திருப்பள்ளி எழுச்சி முதலிய திருமுறைப் பாடல்களை ஓத வேண்டும்.
  28. குளித்த பிறகு யாது செய்தல் வேண்டும்?
    தூய நீர் கொண்டு அனுட்டானம் செய்து திருவைந்தெழுத்தை எண்ணித் திருமறைகள், திருமுறைகள் ஓத வேண்டும்.


    திருநீற்று இயல்

  29. சைவ சமயத்தோர் உடம்பில் அணிய வேண்டிய அடையாளம் யாது?
    திருநீறு
  30. திருநீறாவது யாது?
    பசுவின் சாணத்தை நெருப்பில் சுடுதலால் உண்டாகிய திருநீறு.
  31. எந்த நிறத் திருநீறு பூசத்தக்கது?
    வெள்ளை நிறத் திருநீறு.
  32. திருநீற்றினை எதில் வைத்துக் கொண்டு அணிய வேண்டும்?
    பட்டுப் பையிலோ, சம்புடத்திலோ வைத்துக் கொண்டு அணிய வேண்டும்.
  33. திருநீற்றினை எத்திக்கு முகமாக இருந்து அணிதல் வேண்டும்?
    வடக்கு முகமாகவே, கிழக்கு முகமாகவே இருந்து அணியலாம்.
  34. திருநீற்றினை எப்படி அணிய வேண்டும்?
    நிலத்தில் சிந்தாத வண்ணம் அண்ணாந்து ‘சிவசிவ / நமசிவாய / சிவாயநம' என்று சொல்லி, வலக்கையின் நடு மூன்று விரலினாலும் நெற்றியில் அணிதல் வேண்டும்.
  35. திருநீறு நிலத்தில் சிந்திவிட்டால் என்ன செய்ய வேண்டும்?
    சிந்திய திருநீற்றினை உடனே எடுத்து விட்டு, மேலும் அந்த இடத்தில் துடைத்தெடுக்க வேண்டும்.
  36. திருநீற்றினை நடந்து கொண்டோ, படுத்துக்கொண்டோ பூசலாமா?
    கூடாது.
  37. திருநீற்றினைக் கட்டாயமாக அணிய வேண்டிய நேரங்கள் யாவை?
    தூங்கப் போகும் போதும், தூங்கி எழுந்த போதும், பல் துளக்கிய உடனும், குளித்த உடனும், உணவு உண்ணும் முன்னும், உண்ட பின்னும், சூரியன் தோன்றி மறையும் போதும் திருநீறு அணிய வேண்டும்.
  38. ஆசாரியார், சிவனடியார் திருநீறு தந்தால் எப்படி வாங்குதல் வேண்டும்?
    விழுந்து வணங்கி எழுந்து கும்பிட்டு இரண்டு கைகளையும் நீட்டி வாங்குதல் வேண்டும்.
  39. கடவுள் முன்னும், குரு முன்னும், அடியார் முன்னும் எப்படி நின்று திருநீறு அணிய வேண்டும்?
    முகத்தை திருப்பி நின்று அணிய வேண்டும்.
  40. திருநீறு அணிதல் எத்தனை வகைப்படும்?
    இரண்டு வகைப்படும், அவை : 1. நீர் கலவாது பொடியாக (உத்தூளனம்) அணிதல், 2. நீர் கலந்து முக்குறியாக ( திரி புண்டரம் ) அணிதல்.
  41. திரிபுண்டரமாகத் தரிப்பதன் அறிகுறி யென்ன?
    ஆணவம், கன்மம், மாயை யென்னும் மூன்று மலங்களையும் நீக்குமென்கிற குறிப்புத்தோன்றத் தரிப்பதாம்.
  42. முக்குறியாக அணியத்தக்க இடங்கள் யாவை?
    தலை, நெற்றி, மார்பு, கொப்பூழ், முழந்தாள்கள் இரண்டு, புயங்கள் இரண்டு, முழங்கைகள் இரண்டு, மணிக்கட்டுகள் இரண்டு, விலாப்புறம் இரண்டு, முதுகு, கழுத்து என்னும் பதினாறு இடங்களாம்.
  43. முக்குறியாக அணியும் போது நெற்றியில் எவ்வளவு நீளம் அணிய வேண்டும்?
    இரண்டு கடைப் புருவ எல்லை வரை அணிய வேண்டும். அதற்குக் கூடாமலும் குறையாமலும் அணிய வேண்டும்.
  44. மார்பிலும், புயங்களிலும் எவ்வளவு நீளம் அணிய வேண்டும்?
    அவ்வாறங்குல நீளம் அணிய வேண்டும்.
  45. மற்றைய இடங்களில் எவ்வளவு நீளம் அணிய வேண்டும்?
    ஒவ்வோர் அங்குல நீளம் அணிய வேண்டும்.
  46. முக்குறிகளின் இடைவெளி எவ்வளவினதாய் இருத்தல் வேண்டும்?
    ஒவ்வோர் அங்குல அளவினதாய் இருத்தல் வேண்டும். ஒன்றை ஒன்று தீண்டலாகாது.
  47. சைவ சமயத்துக்கு விபூதி ருத்திராக்ஷம் முக்கியமானதற்குக் காரணமென்ன?
    பரமசிவனுடைய திருமேனியிலும் திருநேத்திரத்திலும் உண்டானமையால் முக்கியமாயின.
  48. அவைக ளுண்டான வகை எப்படி?
    பரமசிவனுடைய அக்கினிபோன்ற திருமேனிமேல் இயல்பாகப் பூத்ததுவே அனாதியான விபூதி. பின்பு தேவர் முதலிய சராசரங்களையெல்லாம் இறுதிக்காலத்தில் நீறாக்கித் தம்முடைய திருமேனியில் தரித்தருளினாரே அது ஆதி விபூதி. நெருப்பின்மேல் நீறுபூத்திருப்பதை இப்போதும் திருஷ்டாந்தமாகக் காணலாம்.
  49. அதனை அணிவதனால் பயன் என்ன?
    மாபாதகங்களெல்லாம் நீங்குமென்றும் அப்படிக்கொண்ட விபூதியை பசுவின் சாணத்தினால் விளைக்க வேண்டுமென்றும் அப்படி விளைப்பதில் கற்பம், அநுகற்பம், உபகற்பமென மூன்று விதியுண்டென்றும் அவற்றுள் ஒரு விதிப்படி விளைவித்துத் தரித்துகொள்ள வேண்டுமென்றும் ஆகமங்கள் சொல்லுகின்றன.
  50. கற்பவிதி யாவ தெப்படிக்கொத்தது?
    பங்குனிமாதத்தில் ஈசானத்தில் மேய்ந்துவந்து நல்லபசுக்களைப் பரிசுத்தமுள்ள தொழுவத்திற் சேர்த்து அவைகளிடுகிற சாணத்தைப் பூமியில் விழவிடாமல் தாமரையிலையி லெடுத்துக் கொண்டு மேலுள்ள வழுவை நீக்கிவிட்டு உண்டையாக்கி முன் விளைத்திருக்கிற சிவாக்கினியிலிட்டுப் பக்குவமாக வெந்த பிற்பாடு எடுத்துப் புதுப்பானையிலிட்டு வேண்டியமட்டில் விபூதிக் கோவிலில் வைத்துக் கொண்டு பூமியில் சிந்தாமல் தரித்துக்கொண்டால் செனன மரணதுக்கம் நீங்கி மோக்ஷமடையலாம். இவ்வாறு விளைவிப்பதுதான் கற்பவிதி. சாணத்தை யேந்தும்போதும் அக்கினியி விடும் போதும் வெந்தபின்பு எடுக்கும்போதும் புதுப்பானையில் வைக்கும்போதும் மந்திரஞ் சொல்லவேண்டும். அதனைச் குருபாலறிக.
  51. அனுகற்பவிதி எப்படி விளைவிப்பது?
    காட்டிலுலர்ந்த பசுவின் சாணத்தை யுதிர்த்துக்கோசலம் விட்டுப் பிசைந்து சிவாக்கினியி லிட்டுப் பக்குவப்படுத்துவதாம்.
  52. உபகற்ப விபூதியாவது யாது?
    இயல்பாக வெந்த காட்டுச்சாம்பல் சிவாலய மடைப்பள்ளிச் சாம்பல் இவைகளையெடுத்துக் கோசலம்விட்டுப் பிசைந்து உண்டாக்கி சிவாக்கினியிலிட்டுப் பக்குவப்படுத்தி முன்போல் எடுத்து வைத்துக்கொண்டு தரித்துக்கொள்ளுவதாம்.
  53. விபூதிக்கோவில் எதனாலமைக்கப்பட்டது?
    வஸ்திரம், புலித்தோல், மான்தோல் இவைகளால் அமைக்கவேண்டும். இவையேயன்றி வேறுமுண்டு.
  54. எல்லாச் செந்துக்களிலும் பசு சிரேஷ்டமான தென்னை?
    புண்ணியநதி, தீர்த்தங்கள், முனிவர்கள், மேலானதேவர்கள், வாசமாகும்படியான அங்கங்களுடன் உற்பவமானதினாலும் தெய்வலோகத்திலிருக்கின்ற காமதேனுவின் குலமானதாலும் சிரேஷ்டமானது. அன்றி, பசு மலநீக்கத்துக்குக் சூரணமான திருநீற்றினுக்கு முதற்காரணமான கோமயத்தை விளைவித்தலாலுமென வுணர்க.


    உருத்திராக்க இயல்

  55. விபூதி தரித்துக்கொண்டாலே போதுமே, உருத்திராக்ஷமுந் தரித்துக்கொள்ள வேண்டிய தென்ன?
    விபூதி உருத்திராக்ஷமும் சிவ சின்னமாகையால் அவ்விரண்டுமே தரிக்கவேண்டும். இதுவுமின்றி விபூதியானது சிலவேளை வியர்வை மழை முதலியவற்றால் மறைந்துபோனாலும் உருத்திராக்ஷமிருந்தால் தோஷமில்லை. ராக்ஷதரால் பீடிக்கப்படுகிற பாபம் அணுகாது.
  56. உருத்திராக்ஷம் எவ்விடத்தில் எவ்வாறு உண்டாயது?
    தேவர்கள் திரிபுரத்து அசுரர்களாலே தங்களுக்கு நிகழ்ந்த துன்பத்தை விண்ணப்பம் செய்துகொண்ட பொழுது, திருக்கயிலை உடையாரின் மூன்று திருக்கண்களினின்றும் பொழிந்த நீரில் தோன்றிய மணியாம். இந்தக் காரணத்தினால் அதற்கு உருத்திராக்ஷம் என்கிற பெயருண்டாயது. (உருத்திரன் - சிவன், அக்ஷம் - நேத்திரம். ) அதற்குச் சிவ கண்மணியென்றும் பெயர். சிவபூசை செய்கிறவர்கள் கழுத்தில் உருத்திராக்ஷ மில்லாமல் பூசித்தால் அந்தப் பூசையைப் பரமசிவன் அங்கீகரித்துக் கொள்ளமாட்டார். ஆதலால் சிவபூசை செய்கிறவர்கள் உருத்திராக்ஷ கண்டிகை அவசியம் தரித்துக்கொள்ள வேண்டும்.
  57. எத்தனை உருத்திராக்ஷம் தரித்துக்கொள்ள வேண்டும்?
    உச்சியி லொருமணி, காதொன்றுக்கு ஆறுமணியாக இரண்டு காதுக்கும் பன்னிரண்டு மணி, சிரசில் நாற்பது, கழுத்தில் முப்பத்திரண்டு, மார்பில் நூற்றெட்டு, புயத்தில் முப்பத்திரண்டு, கைகளில் இருபத்துநாலு, இவ்வாறு தரிக்க வேண்டும்.
  58. உருத்திராக்ஷங்களி னிடைகளில் ஏதாவது மணிகள் கோக்கலாமா?
    இடையிடை பவளம், ஸ்படிகமணி, பொன்மணி யிவைகளைக் கோத்து அணியவேண்டும். இவைகளுமின்றி வில்வப்பழ வோட்டையுஞ் சேர்க்கலாம். இவ்வாறு சேர்க்காமல் உருத்திராக்ஷங்களை மாத்திரம் கோத்துத் தரித்துக்கொண்டால் எத்தனை மணி சேர்த்தாலும் ஒருமணி யணிந்ததா லுண்டாகும் பலனே கிடைக்கும். இந்த உருத்திராக்ஷங்களில் ஒருமுகம், பதினொருமுகம், பதினான்கு முகமுள்ள மணிகளை வைத்துப் பூசித்தாலும் சிவார்ச்சனை செய்ததா லுண்டாகும் பலன் கிடைக்கும்.
  59. உருத்திராக்கம் அணிவதற்கு தகுதியானவர் யார்?
    மதுபானமும், மாமிச உண்டியும் இல்லாதவராய், ஆசாரம் உடையவராய் உள்ளவர்.
  60. உருத்திராக்கம் தரித்துக்கொண்டு மதுபானம், மாமிச உண்டி முதலியவை செய்தவர் யாது பெறுவர்?
    நரகத்தில் வீழ்ந்து, துன்பத்தை அனுபவிப்பர்.
  61. குளிக்கும் காலத்தில் உருத்திராக்ஷசத்தை அணியக் கூடாதா?
    அணியலாம், குளிக்கும் பொழுது உருத்திராட்ச மணியில் பட்டு வடியும் நீர் கங்கை நீருக்குச் சமமாகும்.
  62. உருத்திராட்சத்தில் எத்தனை முகமணி முதல் எத்தனை முகமணி வரையும் உண்டு?
    ஒருமுக மணி முதல் பதினாறு முக மணி வரையும் உண்டு.
  63. உருத்திராட்ச மணியை எப்படிக் கோத்துத் தரித்தல் வேண்டும்?
    பொன்னிலாயினும், வெள்ளியிலாயினும், தாமிரத்தாலாயினும், முத்தாயினும், பவளமாயினும், பளிங்காயினும் இடையிடையே இட்டு முகத்தோடு முகமும், அடியோடு அடியும் பொருந்தக் கோத்துத் தரித்தல் வேண்டும்.
  64. உருத்திராக்கம் தரிக்கத் தக்க இடங்கள் யாவை?
    குடுமி, தலை, காதுகள், கழுத்து, மார்பு, புயங்கள், கைகள், என்பவைகளாம்.
  65. இன்ன இன்ன இடங்களில் இத்தனை இத்தனை மணி தரித்தல் வேண்டும் என்னும் முறை உண்டோ?
    ஆம். தலையிலே இருபத்தி இரண்டு மணியும், காதுகளிலே ஒவ்வொரு மணியும், கழுத்திலே முப்பத்தி இரண்டு மணியும், புயங்களிலே தனித்தனி பதினாறு மணியும், கைகளிலே தனித்தனி பன்னிரண்டு மணியும், மார்பிலே நூற்றெட்டு மணியும் தரித்தல் வேண்டும்.
  66. இந்த இடங்கள் எல்லாவற்றிலும் எப்போதும் உருத்திராக்கம் தரித்துக் கொள்ளலாமா?
    காதுகளிலும், கண்டத்திலும் எப்போதும் தரித்துக் கொள்ளலாம், மற்றை இடங்களில் எனில், தூக்கத்திலும் மலசல மோசனத்திலும் அணிந்து கொள்ளலாகாது.
  67. உருத்திராக்கம் அணிவது எதற்கு அறிகுறி?
    சிவபெருமானுடைய திருக்கண்ணில் தோன்றும் திருவருட் பேற்றிற்கு அறிகுறி.


    சிவ மூலமந்திர இயல்

  68. சைவ சமயிகள் முறையாக எண்ண வேண்டிய மூல மந்திரம் யாது?
    திருஐந்தெழுத்து
  69. திருவைந்தெழுத்தாவது யாது?
    நமசிவாய என்ற திருவைந்தெழுத்து மந்திரம் வேதத்தின் நடுவனதாகவும், நால்வர் பெருமக்களால் துதிக்கப்பட்டதாகவும் எல்லோரும் எப்போதும் எண்ணத்தக்கதாகவும் உய்தி தருவதாகவும் உள்ள திருவைந்தெழுத்து மந்திரம் ஆகும். இது தூல பஞ்சாக்கரம் எனப்படும். சூக்குமம், காரணம் என்று சிறப்புப் பஞ்சாக்கரங்கள் உண்டு. குருநாதர் மூலம் திருவைந்தெழுத்து உள்ளிருத்தப் பெற்றவர்கள் அந்த திருவைந்தெழுத்து மந்திரத்தை ஓதுவது சாலச் சிறந்தது.
  70. திருவைந்தெழுத்தைக் எண்ணத் தகுதி உடையவர் யாவர்?
    எந்தப் பாகுபாடும் இன்றி எல்லோரும் மனதில் அன்புடன் திருவைந்தெழுத்தை எண்ணி இருக்க வேண்டும். குறிப்பு: கீழ் வரும் விடைகள் மந்திர ஜபம் செய்யும் முறையைச் சொல்லுகின்றன. மற்றபடி எங்கும் எப்போதும் எல்லோரும் திருவைந்தெழுத்தை எண்ணி இருத்தலே சிறப்பு. துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும் நெஞ்சகம் நைந்து நினைமின் - சம்பந்தர்.
  71. திருவைந்தெழுத்திலே எத்தனை உரு முறையாகக் கணிக்க வேண்டும்?
    நூற்றெட்டு உருவாயினும், பத்து உருவாயினும் முறையாகக் கணிக்க வேண்டும்.
  72. எப்படி இருந்து கணிக்க வேண்டும்?
    முழந்தாள் இரண்டையும் மடக்கிக் காலோடு காலை அடக்கி, இடத்தொடையின் உள்ளே வலப்புறங் காலை வைத்து, இரண்டு கண்களும் மூக்கு நுனியைப் பொருந்த நிமிர்ந்திருந்து கொண்டு கணிக்க வேண்டும்.
  73. திருவைந்தெழுததைக் கணிக்கும் போது மனம் எவ்வாறு இருக்க வேண்டும்?
    மனம் சிவபெருமானிடத்தில் அழுந்திக் கிடக்க வேண்டும்.
  74. நிற்கும் போதும், நடக்கும் போதும், இருக்கும் போதும், கிடக்கும் போதும், மற்றை எத்தொழிலைச் செய்யும் போதும் மனதை எதில் பதித்தல் வேண்டும்?
    உயிருக்கு உயிராகிய சிவபெருமானுடைய திருவடிகளில் மனதைப் பதித்தல் வேண்டும்.
  75. மந்திர உபதேசம் பெற்றவர் குருவுக்கு யாது செய்து கொண்டு செபித்தல் வேண்டும்?
    குருவை வழிபட்டு அவருக்கு வருடந்தோறும் இயன்ற தட்சணை கொடுத்து கொண்டே செபித்தல் வேண்டும்.
  76. திருவைந்தெழுத்தை முறையாக ஒரு காலத்துக்கு எத்தனை உருச் செபித்தல் வேண்டும்?
    நூற்றெட்டு உருவாயினும், ஐம்பது உருவாயினும், இருபத்தைந்து உருவாயினும், பத்து உருவாயினும் நியமமாகச் செபித்தல் வேண்டும்.
  77. கணித்தற்கு எதைக் கொண்டு உரு எண்ணல் வேண்டும்?
    செபமாலையைக் கொண்டாயினும், வலக்கை விரலிறையைக் கொண்டாயினும் உரு எண்ணல் வேண்டும். ( விரலிறை - கட்டைவிரல் ).
  78. செபமாலையை என்ன மணி கொண்டு செய்வது உத்தமம்?
    உருத்திராக்க மணி கொண்டு செய்வது உத்தமம்.
  79. செபமாலைக்கு எத்தனை மணி கொள்ளத் தகும்?
    இல்வாழ்வான் இருபத்தேழு மணியும், துறவி இருபத்தைந்து மணியும் கொள்ளத் தக்கதாகும். இல்வாழ்வான் நூற்றெட்டு மணி, ஐம்பத்து நான்கு மணிகளாலும் செபமாலை செய்து கொள்ளலாம்.
  80. செபமாலைக்கு எல்லா முகமணியும் ஆகுமா?
    இரண்டு முக மணியும், மூன்று முக மணியும், பன்னிரண்டு முக மணியும், பதின்மூன்று முக மணியும் செபமாலைக்கு ஆகாவாம். அன்றியும் எல்லா மணியும் ஒரே விதமாகிய முகங்களை உடையனவாகவே கொள்ளல் வேண்டும். பல விதமாகிய முகமணிகளையுங் கலந்து கோத்த செபமாலை ஆகாது.
  81. செபமணிகளை எதினாலே கோத்தல் வேண்டும்?
    வெண்பட்டிலேனும், பருத்தியிலேனும் இருபத்து ஏழிழையினால் ஆக்கிய கயிற்றினாலேனும் கோத்தல் வேண்டும்.
  82. செபமாலையை எப்படி செய்தல் வேண்டும்?
    முகத்தோடு முகமும் அடியோடு அடியும் பொருந்தக் கோத்து, ஒன்றை ஒன்று தீண்டா வண்ணம் இடையிடையே நாகபாசம், பிரமக்கிரந்தி, சாவித்திரி என்பவைகளுள் இயன்றதொரு முடிச்சை இட்டு, வடநுனி இரண்டையும் ஒன்றாகக் கூட்டி, அதிலே நாயகமணியை ஏறிட்டுக் கோத்து, முடிந்து கொள்ளல் வேண்டும். நாயகமணிக்கு மேரு மணி என்று பெயர்.
  83. செபமாவது யாது?
    தியானிக்கப்படும் பொருளை எதிர்முகமாக்கும் பொருட்டு அதனை உணர்த்தும் மந்திரத்தை உச்சரித்தலாம்.
  84. மந்திரம் என்பதற்கு பொருள் யாது?
    நினைப்பவனைக் காப்பது என்பது பொருள். ஆகவே மந்திரம் என்னும் பெயர் நினைப்பவனைக் காக்கும் இயல்புடைய வாச்சியமாகிய சிவத்துக்கும் சிவ சத்திக்குமே செல்லும். ஆயினும் வாக்கியத்துக்கும், வாசகத்துக்கும் செல்லும். எனவே மந்திரம், வாச்சிய மந்திரம், வாசக மந்திரம் என இரு திறப்படும் என்றபடியாயிற்று. ( மந் - நினைப்பவன்; திர - காப்பது ).
  85. மானசமாவது யாது?
    நா நுனி உதட்டைத் தீண்டாமல், ஒருமை பொருந்தி மனசினாலே செபித்தலாம்.
  86. உபாஞ்சுவாவது யாது?
    தன் செவிக்கு மாத்திரம் கேட்கும்படி, நா நுனி உதட்டைத் தீண்ட மெல்லச் செபித்தலாம். இதற்கு மந்தம் என்று பெயர்.
  87. வாசகமாவது யாது?
    அருகிலிருக்கும் பிறர் செவிக்கும் கேட்கும்படி செபித்தலாம். இதற்குப் பாஷ்யம் என்றும் பெயர்.
  88. இம்மூவகைச் செபமும் பலத்தினால் ஏற்றக்குறைவு உடையனவா?
    ஆம். வாசகம் நூறு மடங்கு பலமும், உபாஞ்சு பதினாயிர மடங்கு பலமும், மானசம் கோடி மடங்கு பலமும் தரும்.
  89. எந்தத் திக்கு முகமாக எப்படி இருந்து செபித்தல் வேண்டும்?
    வடக்கு முகமாகவேனும், கிழக்கு முகமாகவேனும், மரப்பலகை, துணி, இரத்தினக் கம்பளம், மான்தோல், புலித்தோல், தருப்பை என்னும் ஆசனங்களுள் இயன்றதொன்றிலே முழந்தாள் இரண்டையும் மடக்கி, காலோடு காலை அடக்கி, இடத்தொடையினுள்ளே வலப்புறங்காலை வைத்து, இரண்டு கண்களும் மூக்கு நுனியைப் பொருந்த, நிமிர்ந்திருந்து கொண்டு செபித்தல் வேண்டும்.
  90. எப்படி இருந்து செபித்தல் ஆகாது?
    சட்டையிட்டுக் கொண்டும், சிரசில் வேட்டிக் கட்டிக் கொண்டும், போர்த்துக் கொண்டும், குடுமியை விரித்துக் கொண்டும், கௌபீனம் தரியாதும், வேட்டி தரியாதும், விரலிலே பவித்திரம் தரியாதும், பேசிக்கொண்டும், இருளில் இருந்து கொண்டும், நாய், கழுதை, பன்றி முதலியவற்றை பார்த்துக் கொண்டும் செபிக்கலாகாது. செபம் செய்யும்போது, கோபம், களிப்பு, கொட்டாவி, தும்மல், நித்திரை, சோம்பல், வாதம் ஆகியவை ஆகாவாம்.
  91. செபமாலை கொண்டு எப்படி செபித்தல் வேண்டும்?
    பிறர் கண்ணுக்கு புலப்படா வண்ணம் பரிவட்டத்தினால் மூடப்பட்ட செபமாலையை, வாசகமாகச் செபிக்கில் சுட்டுவிரலிலும், மந்தமாகச் செபிக்கின் நடுவிரலிலும், மானசமாகச் செபிக்கின் ஆழிவிரலிலும் வைத்து, சிவபெருமானுடைய திருவடிகளை மனதிலே தியானித்துக் கொண்டு, பெருவிரலினாலே நாயகமணி அடுத்த, முகம் மேனோக்கிய மணியை முதலாகத் தொட்டு, ஒவ்வொரு மணியாகப் போகத்தின் பொருட்டுக் கீழ்நோக்கித் தள்ளியும், முத்தியின் பொருட்டு மேல் நோக்கித் தள்ளியும் செபித்து, பின்பு நாயகமணி கைபபட்டதாயின், அதனைக் கடவாது திரும்ப மறித்து வாங்கி, அதனைத் திரும்பக் கையில் ஏறிட்டுச் செபித்தல் வேண்டும். செபிக்கும்போது, செபமாலையின் மணிகள் ஒன்றோடொன்று ஓசைப்படலாகாது.
  92. திருவைந்தெழுத்து செபத்தால் பயன் என்ன?
    திருவைந்தெழுத்தின் பொருளை அறிந்து, சிவபெருமான் ஆண்டவன், தான் அடிமையென்னும் முறைமையை மனத்தகத்தே வழுவாமல் இருத்தி, அதனை விதிப்படி மெய்யன்போடு செபித்துக் கொண்டுவரின் விறகினிடத்தே அக்கினி பிரகாசித்தல் போல் ஆன்மாவிடத்தே சிவபெருமான் பிரகாசித்து, மும்மலங்களும் நீங்கும்படி எப்போதும் இன்புற்றிருக்கும் ஞானானந்தத்தைப் பிரசாதித்து அருளுவார்.


    சிவலிங்க இயல்

  93. ஆன்மாக்களாலே பூசித்து வழிபடப்படும் சதாசிவ வடிவம் எது?
    பீடமும் இலிங்கமுமாகிய கன்மசாதாக்கிய வடிவமாம். பீடம் சிவசக்தி, இலிங்கம் சிவம்.
  94. இலிங்கம் என்பதற்குப் பொருள் என்ன?
    இதற்குக் குறி என்று பொருள். முகம் கை கால் போன்ற அவயவங்கள் இல்லாமல் இறைவனைக் குறிப்பாக உணர்த்துவதால் இத்திருமேனிக்கு இலிங்கம் எனப் பெயர்.
  95. இலிங்கம் எவ்வாறு தோன்றியது?
    பிரமனும், திருமாலும் தம்மிடையே பெரியவர் யார் எனச் சச்சரவிட அவர்கள் முன் சிவபெருமான் சோதி வடிவாகத் தோன்றினார். அவ்விருவரும் அச்சோதியின் முதலும் முடிவும் காணாது வருந்த, அச்சோதி வழிபாட்டிற்கு ஏற்ற சிவலிங்கமாகத் திடமானது. அச்சிவலிங்கத்தை வழிபட்டு அவர்கள் பேறு பெற்றனர். தன்னிலையில் அருவமான பரசிவம் உயிர்களுக்கு இரங்கித் தன் கருணையால் அருவுருவத் திருமேனி கொண்டதே சிவலிங்கத் திருமேனி என்பதை உய்த்துணர்க.
  96. சிவபெருமானை ஆன்மாக்கள் வழிபடும் இடங்கள் எவை?
    சிவபெருமான், புறத்தே சிவலிங்கம் முதலிய திருமேனிகளும், குருவும் சங்கமமும் ஆதாரமாகக் கொண்டு நின்றும், அகத்தே உயிர் இடமாகக் கொண்டு நின்றும், ஆன்மாக்கள் செய்யும் வழிபாட்டைக் கொண்டருளுவர். ஆதலால், ஆன்மாக்கள் அவரை வழிபடும் இடங்கள் இவைகளேயாம். சிவத்துக்குப் பெயராகிய இலிங்கம் என்னும் பதம், உபசாரத்தால், அச்சிவம் விளங்கப் பெறும் ஆதாரமாகிய சைல முதலியவற்றிற்கும் வழங்கும்.
  97. சிவபெருமான் இவ்விடங்களில் நிற்பர் என்றது அவர், எங்கும் வியாபகர் என்றதனோடு மாறுபடுமன்றோ?
    மாறுபடாது. சிவபெருமான், எங்கும் வியாபகமாய் நிற்பினும், இவ்விடங்களில் மாத்திரமே தயிரில் நெய் போல விளங்கி நிற்பர். மற்றை இடங்களில் எல்லாம் பாலில் நெய் போல வெளிப்படாது நிற்பர்.
  98. சிவலிங்கம் எத்தனை வகைப்படும்?
    பரார்த்த லிங்கம், இட்ட லிங்கம் என இருவகைப்படும்.
  99. பரார்த்த லிங்கமாவது யாது?
    சிவபெருமான் சங்கார காலம் வரையும் சாந்நித்தியராய் இருந்து ஆன்மாக்களுக்கு அனுக்கிரகிக்கும் போது இலிங்கமாம். இது, தாவரலிங்கம் எனவும் பெயர் பெறும். சாந்நித்யம் - அண்மை, அடுத்தல், வெளிப்படுத்தல். தாவரம் எனினும், ஸ்திரம் எனினும் நிலையியல் பொருள் எனினும் பொருந்தும்.
  100. பரார்த்த லிங்கம் எத்தனை வகைப்படும்?
    சுயம்பு லிங்கயம், காண லிங்கம், தைவிக லிங்கம், ஆரிட லிங்கம், மானுட லிங்கம் என ஐவகைப்படும். இவைகளுள்ளே, சுயம்பு லிங்கம் தானே தோன்றியது. காண லிங்கம் விநாயகர், சுப்பிரமணியர் முதலிய கணர்களாலே தாபிக்கப்பட்டது. தைவித லிங்கம் விட்டுணு முதலிய தேவர்களாலே தாபிக்கப்பட்டது. ஆரிட லிங்கம் இருடிகளால் தாபிக்கப்பட்டது. அசுரர், இராக்கதர் முதலாயினரால் தாபிக்கப்பட்டதும், அது மானுட லிங்கம் மனிதரால் தாபிக்கப்பட்டது.
  101. ஆனால் தரிசனத்தினா லுண்டாகும் பலன் சமமா யிருக்குமா?
    ஒன்றுக்கொன்று அதிகமாயிருக்கும். மனிதர்களால் ஸ்தாபிக்கப்படும் சிவலிங்கத்தையும் மற்றச் சிவலிங்கங்களுடன் சேர்த்துச் சொல்லியிருப்பதனால் அவர்களைச் சாமானியமாக நினைக்கப்படாது. சேர, சோழ, பாண்டிய ராஜாக்கள் முதலானோர், சிவநேசமும் ராஜநீதி முதலான தருமமும் விசேஷமாயிருந்ததனால் இவர்களுக்குப் பரமசிவனுடைய திருவருள் பூரணமாகக் கிடைத்திருந்தது. இவர்களுக்கும் சாபானுக்கிரகமுண்டு.
  102. மற்றமனிதர்களால் ஸ்தாபிக்கப்படாதோ?
    சிவதரிசனத்துக்குச் சமீபத்தில் ஆலயமில்லாத கிராமங்களாயிருந்தால் சிவப்பிரதிஷ்டை செய்ய வேண்டியதுதான். கிலமாக ஆலயங்களிருக்குமானால் அதைத் தள்ளிப் புதிதாகப் பிரதிஷ்டை செய்விக்கலாகாது. நூதனமாக ஆலயமேற்படுத்தி சிவலிங்கம் ஸ்தாபிப்பவர்கள் பக்கத்தில் ஒருலிங்கம் பூசையில்லாமலிருந்தால் அதைக் கொண்டுவந்து ஸ்தாபிக்கலாம். கிரியா லிங்கமாயிருந்தால் ஸ்தாபிக்கலாகாது. சுயம்பு லிங்கமானதாயிருந்தால் கொண்டுவந்து ஸ்தாபிக்கலாம்.
  103. சுயம்பு லிங்கம் பூமியில் தானேயுண்டான தாயிருந்தால் அதையெப்படிக் கொண்டுவரலாம்?
    இவ்விடத்தில் சுயம்புலிங்கமென்றது கிரியா லிங்கம்போற் செய்யப்டாமல் உண்டாயிருக்கும். அது காசிலிங்கமென்றும் பாணலிங்கமென்றுஞ் சொல்லப்படும்.
  104. திருக்கோயிலுள் இருக்கும் சிவலிங்கம் முதலிய திருமேனிகள் எல்லோராலும் வழிபடற் பாலனவா?
    ஆம். சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு மார்க்கத்தாராலும் வழிபடற்பாலனவே ஆகும். ஆயினும் அவ்வழிபாடு அவரவர் கருத்து வகையால் வேறுபடும். படவே, அவருக்குச் சிவபெருமான் அருள் செய்யும் முறைமையும் வேறுபடும்.
  105. சிவலிங்கம் முதலிய திருமேனிகளைச் சரியையாளர்கள் எக்கருத்துப் பற்றி வழிபடுவார்கள்? அவர்களுக்குச் சிவபெருமான் எப்படி நின்று அருள் செய்வார்?
    சரியையாளர்கள் பகுத்தறிதல் இல்லாது சிவலிங்கம் முதலிய திருமேனியே சிவமெனக் கண்டு வழிபடுவார்கள். அவர்களுக்குச் சிவபெருமான் அங்கே வெளிப்படாது நின்று அருள் செய்வார்.
  106. கிரியையாளர்கள் எக்கருத்துப் பற்றி வழிபடுவார்கள்? அவர்களுக்குச் சிவபெருமான் எப்படி நின்று அருள்செய்வர்?
    கிரியையாளர்கள் அருவப் பொருளாகிய சிவபிரான் ஈசானம் முதலிய மந்திரங்களினாலே சிவலிங்க முதலிய திருவுருக் கொண்டார் என்று தெளிந்து, மந்திர நியாசத்தினால் வழிபடுவார்கள். அவர்களுக்குச் சிவபெருமான், கடைந்த பொழுது தோன்றும் அக்கினி போல, அவ்வம்மந்திரங்களினாலும், அவ்வவர் விரும்பிய வடிவமாய், அவ்வத் திருமேனிகளில் அவ்வப்பொழுது தோன்றி நின்று, அருள் செய்வர்.
  107. யோகிகள் எக்கருத்துப் பற்றி வழிபடுவார்கள்?
    யோகிகள், தம் இருதயமெங்கும் இருக்கும் சிவபெருமான் இந்தத் திருமேனியிலும் இருந்து பூசை கொண்டருளுவர் என்று தெளிந்து, சாத்திய மந்திரங்களினால் வழிபடுவார்கள்.. அவர்களுக்குச் சிவபெருமான், கறந்த பொழுது தோன்றும் பால் போல, அவ்வம்மந்திரங்களினால் அவ்வவர் விரும்பிய வடிவமாய், அவ்வத் திருமேனிகளில் அவ்வப்பொழுது தோன்றி நின்று, அருள் செய்வர்.
  108. ஞானிகள் எக்கருத்துப் பற்றி வழிபடுவார்கள்? அவர்களுக்குச் சிவபெருமான் எப்படி நின்று அருள் செய்வர்?
    ஞானிகள் மேலே சொல்லப்பட்ட முத்திறத்தாரும் போல ஓரிடமாகக் குறியாது, அன்பு மாத்திரத்தால் அங்கே வழிபடுவார்கள். அவர்களுக்குச் சிவபெருமான், கன்றை நினைந்த தலையீற்றுப் பசுவின் முலைப்பால் போலக் கருணை மிகுதியால் அவ்வன்பே தாமாகி, எப்பொழுதும் வெளிப்பட்டு நின்று அங்கே அருள் செய்வர்.
  109. இட்டலிங்கமாவது யாது?
    ஆசாரியார் விசேட தீக்கை செய்து, சீடனைப் பார்த்து, “நீ உள்ள அளவும் கைவிடாது இவரை நாள்தோறும் பூசி" என்று அனுமதி செய்து, “அடியேன் இவ்வுடல் உள்ளவரையும் சிவபூசை செய்தன்றி ஒன்றும் உட்கொள்ளே" என்று ஆணை செய்வித்துக் கொண்டு கொடுக்க, அவன் வாங்கிப் பூசிக்கும் இலிங்கமாம் இது. ஆன்மார்த்த லிங்கம் எனவும், சல லிங்கம் பெயர் பெறும்.
  110. இட்டலிங்கம் எத்தனை வகைப்படும்?
    வாண லிங்கம், படிக லிங்கம், இரத்தின லிங்கம், சைல லிங்கம், சணிக லிங்கம் எனப் பலவகைப்படும்.
  111. சணிக லிங்கமாவது யாது?
    பூசித்தவுடன் விடப்படும் இலிங்கமாகும்.
  112. சணிக லிங்கம் எத்தனை வகைப்படும்?
    மண், அரிசி, அன்னம், ஆற்று மணல், கோமயம், வெண்ணெய், உருத்திராக்கம், சந்தனம், கூர்ச்சம், பூ மாலை, சருக்கரை, மா எனப் பன்னிரண்டு வகைப்படும்.
  113. சிவபூசை எழுந்தருளப் பண்ணிக் கொண்டவர் பூசை பண்ணாது புசிக்கின் என்னை?
    பூசை பண்ணாது புசிப்பது பெருங் கொடும் பாவம். அப்படிப் புசிக்கும் அன்னம் புழுவுக்கும், பிணத்துக்கும், மலத்துக்கும் சமம். அப்படிப் புசித்தவனைத் தீண்டலோ காண்டலோ பாவம். ஆதலால் ஓரோவிடத்துப் பூசை பண்ணாது புசித்தவர், ஆசாரியாரை அடைந்து அதற்குப் பிராயசித்தஞ் செய்து கொள்ளல் வேண்டும்.
  114. வியாதியினாலே தம் கைகால்கள் தம் வசமாகாதிருப்பின் யாது செய்தல் வேண்டும்?
    தம்முடைய ஆசாரியாரைக் கொண்டாயினும், தம்மோடொத்தாரைக் கொண்டாயினும், தம் பூசையைச் செய்வித்துத் தாம் அந்தரியாகஞ் செய்தல் வேண்டும்.
  115. சிவபூசை எழுந்தருளப் பண்ணிக் கொண்ட பெண்கள் பூப்பு வந்தபோது யாது செய்தல் வேண்டும்?
    மூன்று நாளும் பிறர் தண்ணீர் தர குளித்து விட்டு, அந்தரியாகம் செய்தல் வேண்டும். நான்காம் நாள் குளித்து விட்டு, ஆனைந்தேனும், பாலேனும் உட்கொண்டு, மீண்டும் குளித்துவிட்டு, சிவபூசை செய்தல் வேண்டும். அம்மூன்று நாளும் அந்தர் யாகம் செய்யாதொழியின், அக்குற்றம் போம்படி அகோரத்தை ஆயிரம் உருச் செபித்தல் வேண்டும்.
  116. பெண்கள், தாம் பிரசவித்த சூதகம் தமக்குரியார் இறந்த ஆசௌசம், வியாதி இவைகள்வரின், யாது செய்தல் வேண்டும்?
    தீக்கையால் தம்மோடு ஒத்தவரைக் கொண்டு பூசை செய்வித்தல் வேண்டும்.
  117. ஆசௌசம், வியாதி முதலியவை வந்தபோது பிறரைக் கொண்டு பூசை செய்வித்தர் யாவரும், அசௌச முதலியவை நீங்கியபின் யாது செய்தல் வேண்டும்?
    பிராயசித்தத்தின் பொருட்டு அகோரத்தை முந்நூறு உருச் செபித்துத் தாம் பூசை செய்தல் வேண்டும்.
  118. சிவலிங்கம் காணாவிடத்து யாது செய்தல் வேண்டும்?
    அந்தரிகயாக பூசை செய்து, பால், பழம் முதலியவற்றை உண்டு, நாற்பது நாள் இருத்தல் வேண்டும். அவ்விலிங்கம் வாராதொழியின் வேறொரு இலிங்கத்தை ஆசாரியார் பிரதிட்டை செய்துதரக் கைக்கொண்டு, பூசை செய்தல் வேண்டும். அதன்பின் வந்ததாயின் அவ்விலிங்கத்தையும் விடாது பூசை செய்தல் வேண்டும்.
  119. சிவலிங்கப் பெருமானுக்கு விசேட பூசை செய்யத்தக்க காலங்கள் எவை?
    திருவைந்தெழுத்து இயலிலே சொல்லப்பட்டவை முதலிய புண்ணிய காலங்களும், சென்மத்திரயங்களுமாம். இன்னும் மார்கழி மாச முழுதினும் நாள்தோறும், நித்திய பூசையேயன்றி அதற்குமுன் உசத் கால (விடியற்காலை) பூசையும் பண்ணல் வேண்டும். சிவராத்திரி தினத்திலே பகலில் நித்திய பூசையேயன்றி, இராத்திரியில் நான்கு யாம பூசையும் பண்ணல் வேண்டும். ( சென்மத் திரயங்கள் - பிறந்த நட்சத்திரமும் அதற்குப் பத்தாம் நட்சத்திரமும் அதற்குப் பத்தாம் நட்சத்திரமுமாம் ).
  120. இத்தனை முயற்சி செய்து சிவலிங்க வழிபாடு ஏன் செய்ய வேண்டும்?
    இந்த உடல் எடுத்ததின் பயனே முற்றிலும் இன்ப மயமான சிவபெருமானை வணங்கி அவர் திருவருளால் கிடைக்கும் முடிவே இல்லாத அளவில்லாத இன்பத்தை அடைவது தான். அதனால் சிவ வழிபாடு செய்யாமல் இருப்பது உடலை வீணே வளர்த்துக் காக்கைக்கும் மண்ணிற்கும் பலியாக்குவதற்கே ஆகும். கல்வி கற்றவர் அக்கல்வியைத் தொழிற்படுத்தாது, தொழில் செய்யின் கட்டுப்பாடுகள் உண்டே என வீணே இருப்பராகின் அவர் எத்தகு மூடரோ அவர் போன்றவரே சிவ வழிபாடு செய்யாதவர்.
  121. சிவபூஜை செய்யத்தக்க மூர்த்தங்ளெவை?
    மானதம், மண்டலம், பலகையிலும் படத்திலும் சுவரிலுமெழுதிய சித்திரங்கள், விக்கிரக சொரூபங்கள், படிகலிங்கம், பாணலிங்கம், க்ஷணிகலிங்கம் இவை முதலியவும் பூசிக்கத் தக்க மூர்த்தங்களாம்.
  122. மானத பூசையாவ தென்ன?
    மனதினாலே அபிஷேகமுதலிய பூசையைப் பாவனையாகச் செய்தலாம்.
  123. மண்டல பூசையாவ தென்ன?
    மண்டலேசுரரைப் பூசித்தலாம்.
  124. க்ஷணிகலிங்க பூசையாவதென்ன?
    பார்த்திபலிங்க பூசையாம்.
  125. மேற்கூறிய பூசைகளிற் சிறந்தது எது?
    படிகலிங்க பூசையும் பாணலிங்க பூசையும் சிறந்தது.
  126. பாணலிங்கங்களென்பன யாவை?
    பாணனென்னு மொரு அன்பனாலே பூசிக்கப்பட்டவையாம்.
  127. இவ்விலிங்கங்கள் எவ்விடத்தில் இருக்கின்றன?
    நர்மதை என்னும் நதியில் இருக்கின்றன.
  128. இந்தப் பூசைகளால் அடையும் பலன் என்ன?
    சோடச தானபலனும், இருபத்தொரு யாகபலனும், மகா பாதகவிமோசனமும், ஸ்தலங்கள்தோறுஞ் சென்று தரிசிக்கும் பலனும், கங்கை முதலிய புண்ணிய நதிகளில் ஸ்நானஞ் செய்த பலனும் கிடைக்கும்.
  129. சோடச தானம் என்பன எவை?
    அன்னதானம், வஸ்திரதானம், கன்னிகாதானம், பூதானம், இரணியதானம், கோதானம், உபயமுகி தானம், மகிஷதானம், அஸ்வதானம், சுவேதாஸ்வதானம், காலதானம், காளமுகி தானம், மகமேருதானம், கற்பகவிருக்ஷ தானம், வித்தியாதானம், மகாதானம் என்னும் பதினாறுமாம்.
  130. யாகம் இருபத்தொன்றாவது யாது?
    அக்கினிட்டோமம், அத்தியக்கினிட்டோமம், உத்தியம், சோடசம், வாசபேயம், அத்திசாத்திரம், அப்தோரியாமம், அக்கினியாதேயம், அக்கினிதோத்திரம், தரிசுபூரணமாசம், சாதூர்மாசியம், நிரூடபசுபந்தம், ஆக்கிரணம், சௌத்திராமணி, அட்டகை, பார்வணம், சிரார்த்தம், சிரவேணி, ஆக்கிரகாயணி, சைத்திரி, ஆசுவயசு என்னும் இருபத்தொன்றுமாம்.
  131. மகாபாதகஙகள் என்பன எவை?
    கொலை, களவு, பொய், கள்ளருந்தல், குருநிந்தை என்னும் ஐந்துமாம். இந்தப் பாதகங்களால் நரகவேதனை உண்டாகும். பிறர் மாதரை இச்சித்தல், பிறர் செய்வதைக் கண்டு பொறாமை கொள்ளுதல், அப்பொருளை அபகரிக்க எண்ணுதல், கோபம், கொடுஞ்சொல், மூர்க்கம், வஞ்சகம், ஒருவர் தனக்குச்செய்த உபகாரத்தை மறத்தல், சிநேகத்தைப் பரித்தல், இரக்கமில்லாமை இவைகளாலும் நரகவேதனை உண்டாகும்.


    ஆசாரியவியல்

  132. ஆசாரியராவர் யாவர்?
    பெத்தான்மாக்களாகிய நாம் இருவினை யொப்பு மலபரிபாகம் பெற்று, தானென்னும் போதம் நீங்கித், தன்சொரூபம் பரமேசுவர னடியார்களி னடியார்களுக்கு அடிமைத்திறம் பூண்டு மகிழ்வதே யென்றறிந்து, பிறவிப்பிணி தீர்ந்து, அஞ்ஞானம் நீங்க ஞானமாகிய விளக்கினைக்கொண்டு அருட்பெருஞ்சோதி எம்மையன் நம்மிருதயமாகிய புண்டரீக வீட்டினுள் ஆநந்தத்தாண்டவம் புரிந்தருளும் முறைமையைக் காட்டி, அவ்வாறு ஆடும் நம்பேரருளாளன் ஸ்ரீ குஞ்சிதபாதத்தின் கண்ணே நம்மான்மாக்க ளொடுங்கிச் சதாசிவானுபவத்தை அனுபவிக்கச் செய்யும் பரம கருணாசாலியராம்.
  133. அவரெப்படிப்பட்டவர்?
    ஆன்மகோடிகளிலும் ஈசுவரனிலு மதிகனென்றுகொள்ளல் வேண்டும். ஆசாரியன் ஈசுவர ரூபியானாலும் அயப்பிண்டத்துக்கு அக்கினி சம்பந்தத்தாலே அக்கினியைவிட உஷ்ணாதிக்யம் அந்த அயப்பிண்டத்தில் விளங்குவதுபோலும், கதிரவன் வெப்பத்திலும் அவன் கிரணங்கள் காய்ந்த மணலில் வெப்பம் அதிகமா யிருத்தல்போலும் சிவபெருமானிலும் சிவபெருமானா லதிட்டிக்கப்பட்ட ஆசாரியன் அதிகன். இதனால் நம்போலிகளுக்குக் காரிய சித்தியும் அதிகம். கேவலம் பகவத்சொரூபனாம்போது சுவாதந்தரியப் பிரகாசனாகின்றான். அதிட்டிக்குமளவிலே அடியார்கட்கெளிவரும் சுலபனாகின்றான். ஆசாரிய விஷயத்தில் சர்வசித்திகளும் திண்ணமாகையால், ஆசாரியன் பகவத்சொரூபத்திலும் அதிகனென்பது இரகசியபோதகமாயுள்ளது.
  134. ஆசாரியன் ஈசுவரரூபி யாவ தெப்படி?
    ஆன்மகோடிகளனைத்தும் அறிவித்தலன்றி அறியாவுளங்கள் என்றமையினாலே ஏனையோர்க்கறிவிக்கும் சக்தியில்லாமை தானே போதரும். அவ்வாறு அறிவிக்கும் சித்து சிற்றம்பலவன் சிற்சபேசன் என்னும் சப்தவாச்சியனாகிய அம்பலவாணர் ஒருவரேயாதலால் அம்மூர்த்தியே தனது காளகண்டம் திரிநேத்திரம் முதலியவற்றை மறைத்து மானைக்காட்டி மானைப்பிடிக்கும் வழக்கம்போல் மானிடச் சட்டை சாத்தி அறிவிக்கப்படும் சித்தாகிய ஆன்மா தன்னையும் தலைவனையும் உணருமாறு அருட்கோலங்கொண்டு எழுந்தருளிய அவதரம் குருமூர்த்தமாதலால் அவர் ஈசுவர ரூபியேயாம்.
  135. ஆசாரியனுக் கிருக்கவேண்டிய முக்கிய இலக்கணங்களென்ன?
    சிவபெருமானுடைய அதிசயப் பிரபாவங்களை ஆன்ம கோடிகளுக்கு அற்புதவாயிலாய் நடததிக்காட்டலும், தான் வேறொரு ஆசாரியனை அபேக்ஷியாதிருத்தலுமாம். இன்றேல் முக்காலத்தும் ஆசாரியனாகான்.
  136. அவ்வாசிரியன் எவ்வாறு ஆன்மகோடிகளை இரக்ஷிக்கின்றான்?
    சமதமாதி ஆன்மகுணங்க ளுண்டான பின்னும், தானுடைமை அவனுடையவன், உடைமை உடையவளிட்டவழக்காயிருக்கும் என்ற சொரூபஞானமுண்டாய்ச் சொத்தினுடைய லாப நஷ்டம் சொத்துக்காரனுக்கே யென்னு மகாவிசுவாச முண்டானபின்னும் இரக்ஷிக்கிறவன் ஈசுவரன். இவ்விதமான சேதன கிருத்தியத்தைப் பாராது தன்னுடைய நிர்ஹேதுகமான அபிமானத்தினாலேயே மருந்து அருந்தாத சிசுவுக்குச் சங்கிலிட்டு வார்க்கும் தாய்போல இரக்ஷிப்பவன் ஆசாரியன்.
  137. ஆசாரியன் ஆன்மகோடிகளின் அஞ்ஞானத்தை எவ்வாறு அகல்விப்பான்?
    ஆசாரியன் உபகாரகாசரியனாம் போது தீக்ஷாக்கிரமத்தினால் தத்துவ நியதிசெய்து ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தை யுபதேசித்து, பதி, பசு, பாச, பதார்த்த த்ரயஞானத்தையும் ஆன்மசொரூபம், பிரமசொரூபம், பிரமத்தையடையும் உபாயத்தின் சொரூபம், பிரமத்தை யடையவொட்டாதபடிச் செய்யும் திரோதையின் சொரூபம், ஆன்மாக்களடையும் புருஷார்த்தத்தின் சொரூபம் ஆகிய அர்த்த பஞ்சக ஞானத்தையும் உண்டாக்கி ஈசுவரனே உபாய உபேயமென்று காட்டி யகல்விப்பன். அவன் உத்தாரகாசாரியனாம் போது தன்னுடைய விசேஷாபிமானத்தாலே அவனுக்குச் சொரூபயாதாத்மய ஞானத்தை விளங்கச் செய்து தானேயுபாய உபேயமாகின்றான்.
  138. தீக்ஷையாவதென்ன?
    பாசத்தைக் கெடுத்து ஞானத்தைக் கொடுத்தல் என்பது பொருள்.
  139. தீக்ஷை யெத்தனை வகைப்படும்?
    சக்ஷுதீக்ஷை, ஸ்பரிசதீக்ஷை, வாசகதீக்ஷை, மானசதீக்ஷை, சாஸ்திரதீக்ஷையென அறுவகையாம்.
  140. மேற்கூறிய அறுவகை தீக்ஷைகளையும் விளக்குக?
    (1) அத்துவா மார்க்கம் குறியாது குறித்துச் சுருக்கிப் பாசம் கழலப் பார்த்தல் சக்ஷுதீக்ஷையாம்.
    (2) அப்படிக் குறித்துச் சிவஅத்தம் வைத்தல் ஸ்பரிச தீக்ஷையாம்.
    (3) பதினொரு மந்திரத்தோடு ஸ்ரீ பஞ்சாக்ஷரத்தை உபதேசித்தல் வாசகதீக்ஷையாம்.
    (4) யோகமார்க்கத்தால் சீஷனது இருதயம் பிரவேசித்துச் சிந்தித்தல் மானசதீக்ஷையாம்.
    (5) ஆகமப்பொருளைச் சுருக்கி உபதேசித்தல் சாஸ்திரதீக்ஷையாம்.
    (6) யோக மார்க்கத்தால் சீஷனிருதயம் பிரவேசித்து நக்ஷத்திரம் போலிருக்கின்ற சீவனை விட்டுப் பாசம் நீங்கப் பார்த்துத் துவாதசாந்தத்தில் சிவனிடத்தில் யோசித்தல் யோகதீக்ஷையாம்.
  141. இத்தீக்ஷைகளிற் பேதமுண்டோ?
    நிர்ப்பீஜம், சபீஜம் என இருவகைத்தாம்.
  142. இவை முறையே எவ்வெவருக்கு அருகமாம்?
    பாலர், சத்தினிபாத லக்ஷணம் காண்பிவிக்கும் சாமர்த்தியமுடையராய ஆசாரமனுஷ்டிக்கும் சாமர்த்தியமிலராய் நிரம்பவோதி உணராதவர்களாய், பதினாறு வயதுட்பட்டவர்களாய் அனுஷ்டானத்தில் அசக்தராய் உள்ளவர்கள். எழுபது வயதுக்குமேற்பட்டார், சத்தினிபாதத்து மகளிர்கள், யோக வாஞ்சையுள்ளவர்கள், வியாதியாளர்கள், இவர்களுக்குச் செய்யுந்தீக்ஷை நிர்ப்பீஜமாம். ஓதியுணர்ந்து ஒழுக்கம் குறைவுபடாதிருக்கும் உத்தமர்களுக்குச் செய்வது சபீசதீக்ஷையாம்.
  143. தீக்ஷையில் பேதமுண்டோ?
    சமயதீக்ஷை, விசேஷதீக்ஷை, நிர்வாணதீக்ஷை எனமூன்று வகை. அவைகளில் சமயதீக்ஷை எவ்வகைப்பட்டவர்களுக்கும் செய்யப்படுவது. மற்ற இரண்டு வகை தீக்ஷையும் சீஷனுடைய பக்குவமறிந்து செய்யத்தக்கது.
  144. முதல் தீக்ஷைக்குக் சமயதீக்ஷை என்கிற பெயர் எதனா லுண்டாயது?
    இந்த தீக்ஷை செய்துகொண்டாலே சைவ சமயத்துக்கு உரியவனாகிறான். அதனால் சமயதீக்ஷை என்று பெயர். இந்த சமயதீக்ஷையினுஞ் சிறப்புள்ள தாகையால் விசேஷதீக்ஷை யென்றும், மோக்ஷந் தரத்தக்கதாகையால் நிர்வாண தீக்ஷை யென்றும் மற்ற இரண்டு தீக்ஷைக்கும் பெயருண்டாயது. (நிருவாணமென்பது மோக்ஷத்துக்கொருபெயர்.)
  145. விபூதி ருத்திராக்ஷம் தரித்துக் கொள்ளவும் சிவதரிசனம் சிவார்ச்சனை செய்யவும் விவேகமில்லாத மிருக முதலான செந்துக்களுக்குச் சிவபுண்ணிய மெவ்வாறு சித்திக்கும்?
    பரமேசுவரன் அநாதி கேவலத்திற் கிடந்த ஆன்மாக்களை அநாதி சிருஷ்டிசெய்கிற காலத்திலே தான் தலமாகவும் தீர்த்தமாகவும் மூர்த்தியாவும் திருமேனி கொண்டெழுந்தருளிச் சிவஸ்தலங்களிலே புழு முதலானவை சனித்தாலும் நசித்தாலும் சிவபுண்ணியம் உண்டாகவும் தீர்த்தத்திலே மீன் முதலானவை சனித்தாலும் வசித்தாலும் நசித்தாலும், நாற்கால் மிருகங்கள் மனிதர் முதலானவர்கள் பக்ஷிகள் முதலானவைகள் தீர்த்தத்தைக் குடித்தாலும் முழுகினாலும் திவலைகள் தெறிக்கப்பட்டாலும் சிவபுண்ணிய முண்டாகவும் அருளினார். மறு பிறவியில் சிவலிங்கப் பெருமானுக்குச் செய்யும் அபிஷேகம் அருச்சனை நிவேதனம் முதலானவைகளுக்குரிய விருக்ஷ சாதிகளாகவும் நெல் முதலிய பயிர்களாகவும் பசு முதலாகிய மிருக சாதிகளாகவும் சனிப்பித்துச் சிவபுண்ணிய முண்டாக்குவர்.
  146. பசு முதலான சில மிருகங்கள் சிவலிங்கப் பெருமானுக்குச் செய்யும் அபிஷேக முதலானவைகளுக்கு எவ்வாறு உதவுகின்றன?
    பசு தன்னிடத்திலுண்டாகும் பஞ்சகவ்வியம் கோரோசனை யிவைகளாலுதவுகின்றது. பச்கவ்வியமாவது, பால், நெய், தயிர், கோமயம், கோசலம் என்பவைகளாம். இவ்வாறு அபிஷேகத்துக் குதவுதலமன்றிப் பால், தயிர், நெய், நிவேதனத்துக்கும் உதவுகின்றது.
  147. பஞ்சகவ்வியம் என்பது யாது?
    பஞ்சகவ்வியம் என்பது பசும்பால், பசுந்தயிர், பசுநெய், பசுவின் சாணம், பசுவின் சிறுநீர் ஆகிய ஐந்துமாம். பசுவின் சாணம் மற்றும் சிறுநீர் ஆகிய இரண்டையும் நீக்கிச் சிலர் வெண்ணெய் திரட்டுப் பால் என்பது ஆகமங்கட்கும் உலக வழக்குக்கும் கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள திருக்கோயில் வழக்குக்கும் முரணாகும். உதாரணமாக தெஇக.8-66 என்ற திருவண்ணாமலைக் கல்வெட்டில் "திருவண்ணாமலை உடையார்க்குப் பஞ்சகவ்வியம் ஆடியருள நித்தமும் சிறுகாலை சந்தியில் திருவண்னாமலை என்னும் நாழியால் கோமூத்ரம் உழக்கும் கோமயம் ஆழாக்கும் பால் நாழி உழக்கும் தயிர் நாழி உரியும் நெய் நாழியும் ஆக இப்படி நித்தமும்..." என்றிருத்தல் காண்க. இதில் கோமூத்ரம் கோமயம் அளவுகளையும் நோக்குக.
    (கருப்பக் கிரகத்தில் சூரிய வெப்பமும் காற்றோட்டமும் இல்லாத நிலையில் கிருமிகள் விளைநிலமாதலைத் தடுத்தற்குக் கிருமிக் கொல்லிகளாகிய (Germicides) கோமூத்ரமும் கோமயமும் நிறைய உபயோகிக்கப் படுதல் அவசியம்.)
  148. பஞ்சகவ்வியம் (ஆன் ஐந்து) சிவ வழிபாட்டிற் குகந்தது என்பதற்கு ஏதேனும் ஆதாரம் உண்டோ?
     உண்டு. 
     
     "ஆன் அஞ்சாடும் முடியான்" - 2.6.5
     "ஆனிலங் கிளரைந்து மாடுவர்" - 2.91.2
     "ஆனில் நல்ஐந்துகந்தாடுவர்" - 3.92.5
     "ஆவினுக் கருங்கலம் அரன் அஞ்சாடுதல்" - 4.11.2
     "அஞ்சுகொலாம் அவர் ஆடினதாமே" - 4.18.5
     "ஆன் அஞ்சும் ஆடும் அமரர்கள் தம் பெருமானை" - 7.40.7
     "பாலொடான் அஞ்சும் ஆடவல்லானை" - 7.68.2
    
    இவ்வாறு நிறைய கூறலாம்.
    
  149. இன்னும் எதற்கு உதவுகின்றது?
    பசுவும் அதனினமாகிய எருதும் பேரி மத்தள முதலான தோற்கருவி மூலமாகவும் யாழ் முதலான நரம்புக்கருவி மூலமாகவும் உதவுகின்றது.
  150. மற்ற எந்த மிருகம் இவ்வாறு உதவுகின்றது?
    புனுகுபூனை கஸ்தூரிமிருகம் இவைகளும் உதவுகின்றன. மயில் விசிறிரூபமா யுதவுகின்றது.
  151. விருக்ஷசாதிகளெவ்வாறு உதவுகின்றன?
    வாழை, பலா, மா, தெங்கு முதலிய சில விருக்ஷங்கள் அபிஷேகத்துக்கும் நிவேதனத்துக்கும் உரிய கனிவர்க்க மூலமாகவும் எலுமிச்சை, நாரத்தை முதலாகிய மரங்கள் அபிஷேகத்துக்கும் நிவேதனத்துக்கும் கனிமூலமாகவுமுதவுகின்றன. இதவுமின்றி திருமஞ்சனத்திரவிய மூலமாக உதவுகின்ற விருக்ஷங்கள் செடிகள் கொடிகள் சிவார்ச்சனைக்குரிய திருப்பள்ளித்தாம மூலமாக உதவுகின்றன. (திருப்பள்ளித்தாமமாவது பத்திர புஷ்பம். இந்தப் புஷ்பங்கள் கோட்டுப்பூ, சொடிப்பூ, நீர்ப்பூ, புகர்ப்பூ என நாலுவகையாயிருக்கின்றன.)
  152. இதற்கு உதாரணமாகச் சரித்திரங்களுண்டோ?
    பல விசேஷத்தினால் கரிக்குரவி நாரையென்னும் பக்ஷிகளும் பன்றியும் மோக்ஷமடைந்தன. இதுவுமின்றி யானை, நாகம், சிலந்தி, வானரம், தவளை, அணில், எறும்பு முதலியவைகள் மோக்ஷமடைந்தன. திருஞானசம்பந்த சுவாமிகள் ஆண்பனை பெண்பனையாகும்படிப் பதிக மருளிச்செய்த போது அந்தப்பனைக்கு மோக்ஷங்கிடைத்தது. சந்தானாசாரியர்களிலொருவராகிய உமாபதிசிவாசாரியார் சிதம்பரத்தில் ஒரு முள்ளிச்செடிக்குத் தீக்ஷைசெய்ய அச்செடி அப்போதே தீய்ந்து மோக்ஷமடைந்தது.
  153. வீடுபேறாகிய முத்தியைப் பெறுவதற்கு நேர்வழி யாது?
    (1) ஞானத்தை உயிர்க்கு ஏற்படுத்தும் பன்னிரு திருமுறைகளையும் பதினான்கு சாத்திரங்களையும் முதலில் தான் கற்க வேண்டும்; (2) பின்பு பிறர்க்கு கற்பிக்க வேண்டும்; (3) அவற்றில் உள்ள சிறந்த பொருள் நுட்பங்களை நல்லாசிரியரிடம்தான் கேட்க வேண்டும்; (4) பின்பு பிறர்க்கு எளிமையாக எடுத்துரைக்க வேண்டும்; (5) அத்தகு அரிய பெரிய பொருள்களைப்பற்றிய சிந்தனையுடன் இருக்க வேண்டும். இந்த ஐந்து வழிகளும் இறைவன் திருவடியாகிய முத்திப்பேற்றினை அடைவதற்கு உரிய மேலான நேர்வழிகளாகும்.
    இதற்குப் பிரமாணம் வருமாறு :-
    “ஞானநூல் தனைஓதல்; ஓதுவித்தல்;
     நற்பொருளைக் கேட்பித்தல்; தான் கேட்டல், நன்றாய்
     ஈனமிலாப் பொருளதனைச் சிந்தித்தல் ஐந்தும்
     இறைவன் அடி அடைவிக்கும் எழில் ஞானபூசை" - சித்தியார் (275)
    
  154. இத்தகு ஞானம் உயிர்க்கு எப்போது கிட்டும்?
    முதலில், ஞானத்தைப் பெறவேண்டும் என்னும் வேட்கையைப் பெருக்கும் (வேணவா) உயிர்க்கு ஏற்பட வேண்டும். அந்த வேட்கை பெருகப் பெருக, உயிர்கள் பல சிவப்பணிகளில் ஈடுபடும். அத்தகைய ஈடுபாடு, உயிர்க்கு மலபரிபாகம், இருவினை ஒப்பு, சத்திநிபாதம் ஆகியவற்றை நிகழ்த்தும். அப்போது உயிர்க்கு ஞானம் கிட்டும்.
  155. மலபரிபாகம் என்பது யாது?
    ஆணவமலத்தின் ஆற்றல், ஆன்மாவின் அறிவு இச்சை செயல்களை மறைக்க இயலாமல், நிற்கும் நிலையே, “மலபரிபாகம்" எனப்படும். (மலம் - ஆணவமலம், பரி - உபசர்க்கம்; பாகம் - திரிவு; பக்குவம்) அ•தாவது ஆணவமலத்தின் காரியங்கள் ஆகிய மோகம், மதம், இராகம், கவலை, தாபம், வாட்டம், விசித்திரம், என்னும் கெட்ட குணங்கள் ஆன்ம அறிவை விட்டு நீங்குதல். மலபரிபாகத்தின் பயன் இருவினை ஒப்பு.
  156. இருவினை ஒப்பு என்பது யாது?
    ஒருவன் தான் செய்த நல்வினைப் பயன் ஆகிய இன்பத்தில் விருப்பும், தீவினைப் பயன் ஆகிய துன்பத்தில் வெறுப்பும் கொள்ளாமல் இரண்டு பயன்களையும் சமமாகக் கருதும் நிலையை எய்துவதே, ‘இருவினை ஒப்பு' எனப்படும். இருவினை ஒப்பின் பயனாகச் சத்திநிபாதம் நிகழும்.
  157. சத்திநிபாதம் என்பது யாது?
    சத்தி - இறையருள்; நிபாதம் - வீழ்ச்சி உயிரின் அறிவு இச்சை செயல்களைத் திரோதானமாய் நின்று, மறைப்பைச் செய்து வந்த இறைவனது அருளாற்றல், மலபரிபாகமும் இருவினை ஒப்பும் எய்தப்பெற்ற உயிரின் மீது பதிதல், “சத்திநிபாதம்" எனப்படும். அதன் பயன், சிவபுண்ணியம் ஆகிய தவம் ஆகும்.
  158. புண்ணியம் எத்தனை வகைப்படும்?
    புண்ணியம், பதிபுண்ணியம், பசுபுண்ணியம் என இருவகைப்படும். பதி புண்ணியம் சிவபுண்ணியம் எனவும்படும். பசு புண்ணியம் உயிர்புண்ணியம் எனவும் படும்.
  159. இருவகைப் புண்ணியங்களின் இயல்பு யாது?
    பதி புண்ணியம், சிவபெருமானை நோக்கிச் செய்யப்படும் நற்செயல்கள் ஆகும். சிவபெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் நோக்கிச் செய்யும் நற்செயல்கள் அனைத்தும் பசுபுண்ணியம் ஆகும். பதி புண்ணியங்கள் ஒருபோதும் அழிவில்லாமல் என்றும் நின்று முத்தியைக் கொடுக்கும். பசு புண்ணியங்களுக்கும் பயன் உண்டு; ஆனால், அப்பயன் அனுபவித்து முடிந்ததும் அழிந்துவிடும். பதி புண்ணியப்பயன் சிவபெருமானால் அனுபவிக்கப் படாததால், அழிவதில்லை. அதன் பயன், உயிர்களுக்கு நிலையான இன்பத்தைத் தருவதே ஆகும்.
    பசு புண்ணியம் பயன் அழிந்துவிடுவதற்கு ஓர் எடுத்துக் காட்டு வருமாறு :-
    பசியோடு இருக்கும் ஒருவனுக்கு உணவு கொடுப்பது பசு புண்ணியம்; அவ்வுணவின் பயனாக, அவனுக்குள்ள பசி ஆறுகிறது. அவனுக்கு மீண்டும் பசி வரும்போது, முன்புண்ட உணவின் பயன் அனுபவிக்கப்பட்டுவிட்டதால், அவனுக்குச் செய்த பசு புண்ணியமும் அத்தோடு அழிந்துவிடுகிறது.
    இவ்வுண்மையைச் சிவஞானபோதம் எட்டாம் சூத்திரம் முதல் அதிகரணத்தில் உள்ள வெண்பாவில்,
    “பசித்து உண்டு, பின்னும் புசிப்பானை ஒக்கும்
     இசைத்து வருவினையில் இன்பம்."
    என்று மெய்கண்டார் தெளிவுற அருளிச்செய்துள்ளார்.
    உயிர்களுக்கு செய்யும் நல்வினைகள், இறைவனை நினைந்து, அவனருளால் செய்யப்படுவதாகக் கருதிச் செய்வோமானால், அவை பதி புண்ணியங்களாகும்.
  160. இத்தகு சிவப்புண்ணியங்களில் ஈடுபடுதற்கு வழியாது?
    இத்தகு சிவ புண்ணியங்களில் ஈடுபடுவதற்கு நற்குருவை நாட வேண்டுவது முதற்கண் செய்யவேண்டியது ஆகும். அத்தகு குருவருளில் நின்று ஒழுகினால், தவ முயற்சியாகிய சிவ புண்ணியத்தில் ஈடுபாடு ஏற்படும்.
  161. நற்குரு என்பவர் யார்?
    சரியை, கிரியை, யோகம் ஆகிய நெறிமுறைகளை உணர்த்துபவர் ‘கிரியாகுரு' எனப்படுவார்; ஞானத்தை உணர்த்துபவர் ‘ஞானகுரு' எனப்படுவார். ஞானத்தைச் சிவபெருமான் ஒருவனே உணர்த்துவான். எனவே, அவனே “ஞானகுரு" ஆவான்.
  162. கிரியா குரு, சரியை முதலியவற்றை எவ்வாறு உணர்த்துவார்?
    சமய தீக்கை, விசேட தீக்கை முதலியவற்றைத் தவமுயற்சியில் ஈடுபடும் மாணவர்க்கு அளித்து, சரியை முதலியவற்றை உணர்த்துவார்.
  163. தீக்கை என்பது யாது? அது எத்தனை வகைப்படும்?
    தீட்சை (தீக்ஷை) என்ற வடசொல் திரிந்து தீக்கை ஆயிற்று. தீ - கெடுத்தல்; க்ஷை - கொடுத்தல். அ•தாவது பாசத்தைக் கெடுத்து மோட்சத்தைத் தரும்பொருட்டு குருவிடமிருந்து பெறும் மந்திர உபதேசம் பொதுவாகத் ‘தீக்கை' எனப்படும்.
    தீக்கையில் பல வகைகள் உள்ளன.அவற்றுள் மூன்று முக்கியமானவை. அவை வருமாறு :-
    1. சமயத்தீக்கை:- ‘உபநயனம்' எனப்படும் பூணூல் போடுவது எவ்வளவு இன்றியமையாததோ அதுபோல ‘சைவசமயி' என்பவருக்குச் சமயத்தீக்கை அவசியமாகும். பூணூல் அணியாதவர், வேதியர் ஆகார்; அவ்வாறே “சமயதீக்கைபெறாதவர் சைவசமய ஆகார்." இது சமய நுழைவுக்கு அனுமதி பெறுவதாகும்.(It is just like an entrance to the saivism)
    2. விசேட தீக்கை:- கிரியாபாத யோகபாத முறைகளில் செய்யப்படுவது. இந்தத் தீக்கை பெற்றவரே சிவலிங்க மூர்த்தியையோ, மகேசுவர மூர்த்தியையோ எழுந்தருளச் செய்து குருவிடம் பெற்றுச் ‘சிவபூசை' செய்வதற்குரிய தகுதி உடையவர் ஆவார். இந்த தீக்கையினைப் பெற்ற பின்னர் செய்யப்படும் புறப்பூசை மற்றும் அகப்பூசைகளில், சிவபெருமான் முனைந்து நின்று அருளை வழங்குகிறான் என்று சிவாகமங்கள் கூறுகின்றன.
    3. நிருவாண தீக்கை:- பாசபந்தம் அனைத்தையும நீக்கிச் சிவபெருமான் திருவடியை அடையும்படி செய்யும் தீக்கை நிருவாண தீக்கையாகும். இந்தத் தீக்கையில் குருநாதர், சீடனது மலத்தை நீக்கும் பொருட்டு, ஆறு அத்துவாக்களிலும் சஞ்சிதமாயிருக்கும் கன்மங்களை எல்லாம் போக்குவார். கன்மம் நீங்கவே மாயாகாரியங்களும் ஆணவத்தடையும் அறவே நீங்கும்; அப்போது திரோதான சத்தி அருட்சத்தியாக மாறி, ஞானத்தை வழங்கும். இவற்றைப் பற்றிய விரிவான விளக்கங்களை சிவஞானபாடியத்தில் காணலாம்.
  164. தீக்கையின்போது, உச்சரிக்கும் பொருட்டு மந்திரங்கள் உள்ளனவா?
    சமயத்தீக்கையின்போது, அணிந்துகொள்ள வேண்டிய ஒவ்வொரு அங்கத்திலும் உரிய மந்திரம் சொல்லி, திருநீற்றைத் தண்ணீரில் குழைத்து இட்டுக்கொள்ள வேண்டும். பின்பு உருத்திராட்சிரமாலையைக் கொண்டு, குருநாதர் உபதேசித்தபடி அஞ்செழுத்து மந்திரத்தை மனத்தில் நூற்றெட்டுமுறை எண்ணவேண்டும். இவ்வாறு ஒவ்வொரு தீக்கைக்கும் ஒவ்வொரு வகை மந்திரம் உண்டு. தீக்கைகளின்போது, கைவிரல்களால் செய்யப்படும் பல்வேறு முத்திரைகளும் உண்டு. இவற்றை எல்லாம் சற்று முயன்று கற்க வேண்டும்.
  165. இதனைப் படிக்கும்போதே தலைசுற்றுகிறதே! சிவபுண்ணியத்தில் ஈடுபடுவதற்கு இவ்வளவு சிரமம் மேற்கொள்ள வேண்டுவது அவசியமா?
    சிவபுண்ணியம் என்பது சிவனை நினைந்து செய்யும் நற்செயல்கள் என்று முன்பே கூறப்பட்டது நினைவிருக்கலாம். தீக்கை முறைகள் அனைத்தும் நமது உள்ளத்தைப் பக்குவப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட சடங்குகளே ஆகும். பலர் சடங்கு மாத்திரையாக இவற்றை எல்லாம் செய்வார்கள். ஆனால் சிவனை நினைந்து நற்கருமம் செய்தல் என்னும் முதன்மையான விதியை மட்டும் கடைப்பிக்காமல் ஒழுகுவர். தாம் கற்ற சாத்திர அறிவைப் பற்றிப் பெருமை அடித்துக் கொண்டிருப்பார்கள். அந்த அறிவே சிவனருனால் நமக்குக் கிடைத்தது என்ற உணர்வு மறந்து திரிவர்.
    எனவே சடங்குகளை நினைந்து திகைப்படைய வேண்டா. சமய தீக்கை மட்டுமோ அல்லது விசேட தீக்கையுமோ பெற்று அளவோடு மந்திரங்களையும் முத்திரைகயும் கற்றுக்கொண்டு, இறையுணர்வோடு எப்போதும் ஒழுகி வந்தால் போதும். அதுவே தவம் ஆகும். தன்முனைப்பு சிறிது சிறிதாக அடங்கவேண்டும் ‘எல்லாம் அவன் செயல்; சிவன் செயல்' என்ற உணர்வு தலைப்பட வேண்டும். அஞ்செழுத்தை சதா எண்ணிக்கொண்டே இருக்கவேண்டும். அதுவே போதும்.
    சமயத்தீக்கை அஞ்செழுத்தை விதிப்படி எண்ணும் பழக்கத்தை நமக்கு ஏற்படுத்துகிறது. விசேட தீக்கை நம்மை அன்றாடம் சிவபூசையில் பழக்குகிறது. எனவே இவ்விரு தீக்கைகளும் இன்றியமையாதனவே ஆகும். இவ்விரண்டிற்கும் நாள் ஒன்றுக்கு ஒருமணி நேரம் ஆகும். அ•தாவது நாம் செய்யலாம் அல்லவா? நம் உள்ளத்தில் சிவநினைவு ஒன்றே எப்போதும் வேண்டற்பாலது. பிற சடங்குகளில் எல்லாம் அவ்வளவு நாட்டம் தேவை இல்லை என்னும் உண்மையைச்,
     “சாத்தி ரம்பல பேசும் குழக்கர்காள்
      கோத்தி ரமும் சலமும்கொண்டு என்செய்வீர்?
      பாத்தி ரம்சிவம் என்று பணிதிரேல்
      மாத்தி ரைக்குள் அருளும்மாற் பேறரே" (5-60-3)
    
    என்று அப்பரடிகள் நமக்கு அருளிச்செய்துள்ள திருவாக்கிலிருந்து உணரலாம். அவரே,
    “இருந்து சொல்லுவன் கேண்மின்கள் - அஞ்செழுத்து ஓதினால் அருந்தவம் தரும்" (5-60-4) என்று குருநாதராக அமர்ந்து கூறியதால் அதுவே நமக்குப் பரமப் பிரமாணமாக உள்ளது.
  166. சரியை கிரியை யோகம் ஆகியவற்றைச் செய்தால் முத்தி கிடைக்குமா? அல்லது ஞானம் பெற்றால்தான் முத்தியைப் பெற முடியுமா?
    ‘ஞானம்' என்பது சரியை முதலிய தவங்களின் விளைவே ஆகும். சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பன முறையே அரும்பு, மலர், காய், கனி போன்றவை என்பதைத் தெளிவுபடுத்தி,
    “விரும்பும் சரியைமுதல் மெய்ஞ்ஞானம் நான்கும்
     அரும்பு மலர் காய் கனிபோல அன்றோ பராபரமே"
    
    என்று ‘தவராஜசிங்கம்' தாயுமானவர் அருளிச் செய்துள்ளார்.
    சில நோய்களுக்கு அரும்பை மட்டும் உண்டால் அந்நோய் நீங்குவதைக் காண்கிறோம்.வேறு சில நோய்களுக்கு மலரை மட்டுமோ காயை மட்டுமோ உண்டாலே நோய் நீங்குகின்றது. அவ்வாறே சரியை நெறியில் நின்றாலும் மலநீக்கம் பெற்று வீடுபேறு எய்தலாம். கிரியை யோகம் ஆகிய நெறிகளில் நின்றாலும் முத்தி பெறலாம். ஞானம் கனி எனப் போற்றப்பட்டிருப்பதற்குக் காரணம் இறைவனை நினைந்து கலந்த அன்பாகிக் கசிந்து உள்ளுருகும் நிலைக்கு அது நம்மை இட்டுச் செல்வதாலேயே ஆகும்.
    அந்நிலை ஞானத்தில் சரியை முதலியன உடையவருக்கும் உண்டு எனவேதான், “ஞானம் ஈசன்பால் அன்பே" (சம்பந்தர் புராணம் - பெ.பு) என்று சேக்கிழார் அருளிச் செய்தார்.
    சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு நெறிகளில் ஏதேனும் ஒரு நெறியில் உறைப்போடு நின்றால் வீடுவேறு பெறமுடியும் என்பதை மெய்ப்படுத்தும் பொருட்டே அப்பர், சம்பந்தர், சுந்தரர், மணிவாசகர் ஆகிய நால்வர் பெருமக்களையும் நம் முன்பு தோன்றச் செய்து இறைவன் நமக்கு வழிகாட்டியுள்ளான். இந்நான்கும் சிவனை அடைவிக்கும் சிவநெறிகள் எனவே, இவற்றைக் கடைப்பிடிப்பவர்கள் சிவனடியார்கள் எனப்படுகிறார்கள்.
    இவ்வுண்மையைச் சிவஞானசித்தியாரில்,
     “ஞானம், யோகம், கிரியை, சரியை நாலும்
      நாதன்தன் பணி ஞான நாலினுக்கும் உரியன்."
    
    என்று அருணந்திசிவம் அருளிச்செய்துள்ளார்.
    


    வழிபடும் முறை (சாதனஇயல்)

  167. இறைவனை வழிபடுவதற்கான வழிமுறைகள் யாவை?
    சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்குமே இறைவனை வழிபடுவதற்கான நெறிகள் ஆகும்.
    இவற்றுள் சரியை என்பது, உடலால் வழிபடுவது. அ•தாவது திருக்கோயிலை வலம் வருவது, திருக்கோயிலுக்குப் பூ மாலைகொடுப்பது, திருக்கோயிலில் துப்புரவுப் பணி செய்வது முதலியன உடலால் வழிபடுவது ஆகும்.
    கிரியை என்பது வாயினால் வழிபடுவது. அதாவது அஞ்செழுத்து மந்திரங்களை ஓதுவது, திருமுறைகளை நாள்தவறாமல் படனம் செய்வது, சாத்திர தோத்திரக் கருத்துக்களைப் பிறர்க்கு எடுத்துரைப்பது முதலியன வாயினால் செய்யும் வழிபாடு ஆகும்.
    யோகம் என்பது மனத்தினால் வழிபடுவது. அதாவது வழிபடு தெய்வத்தின் வடிவத்தை மனத்தில் வைத்து தியானிப்பது. அந்தரியாக பூசை செய்வது, அஞ்செழுத்து மந்திரத்தை உள்ளத்தால் அக்குமாலை கொண்டு எண்ணுவது முதலியன மனத்தினால் செய்யும் வழிபாடு ஆகும்.
    இம்மூவகை வழிபாடுகளையும் தவறாமல் செய்து வந்தல், இறைவன் நமக்கு ஞானத்தை உணர்த்துவான். அவ்வாறு உணர்த்தும்போது, சீவன்முத்தர்களை அதிட்டித்து நின்றோ, குருநாதனாக வந்தோ, மானுடச் சட்டை போத்தியோ வந்து உணர்த்துவான். எனவே, குருபீடத்தில் அமர்ந்துள்ள ஞானிகளை வழிபடுவது ஞானநெறியில் செய்யும் வழிபாடாகும்.
    மனம், வாக்கு, காயங்களால் சிவபெருமானை வழிபட வேண்டும் என்பதற்காகவே இந்த மனிதப் பிறவி நமக்கு வழங்கப்பட்டது. இவ்வுண்மையைத் தெளிவுபடுத்திச் சிவஞானசித்தியாரில்,
    “மானுடப்பிறவி தானும் வகுத்தது மனம் வாக்குக் காயம்
     ஆன இடத்து ஐந்து ஆகும் அரன்பணிக் காக அன்றோ" (182)
    
    என்று அருணந்திசிவம் அருளிச்செய்துள்ளார்.
  168. தெய்வ வழிபாடு என்பது யாது?
    ஒவ்வொருவரும் தாம் வழிபடுவதற்கு என ஒரு தெய்வவடிவத்தை மேற்கொள்ள வேண்டும். அத்தகு தெய்வ வடிவம், மகேசுவர மூர்த்தங்கள் இருபத்தைந்தனுள் ஒன்றாகவோ, சதாசிவ வடிவமாகிய சிவலிங்க வடிவாகவோ இருக்க வேண்டும். அந்த வடிவத்தையே மனத்தினால் எப்போதும் நினைக்க வேண்டும். அந்த தெய்வத்தைக் குறித்த பாடல்களை வாயினால் ஓத வேண்டும். அத்தெய்வத்திற்குரிய மந்திரங்களை உச்சரிக்க வேண்டும். அவ்வாறு வழிபட்டு வருவோமானால், சிவபெருமான் அத்தெய்வவடிவில் நின்று, நமக்கு வேண்டுவன யாவற்றையும் செய்தருள்வான்.
    இவ்வுண்மையைச் சிவஞானசித்தியார்,
    ‘‘மனமது  நினைய வாக்கு வழுத்த மந்திரங்கள் சொல்ல
      இனமலர் கையில் கொண்டு அங்கு, இச்சித்த தெய்வம் போற்றிச்
      சினம் முதல் அகற்றி வாழும் செயல் அறம் ஆனால் யார்க்கும்
      மனம் ஒரு தெய்வம் எங்கும் செய்தற்கு முன் நிலையாம் அன்றே"(114)
    
    என்று தெளிவுபடுத்தியுள்ளது.
    ‘இச்சித்த தெய்வம்' என்பது வழிபடுவதற்குத் தேர்ந்து எடுத்துக்கொண்ட வடிவம் என்பதாகும். ‘செயல் அறம்' என்பது, (122) ஆம் தடைக்குள்ள விடையில் கூறியுள்ள பதினாறு சைவ ஒழுக்கங்கள் ஆகும்.
  169. மகேசுவர வடிவங்கள் இருபத்தைந்தையும் சிவலிங்க வடிவத்தையும் மட்டுமே, வழிபடு தெய்வமாகக் கொள்ள வேண்டும் என்பதற்கு என்ன காரணம்?
    இறைவன் பிறப்பு இறப்பு இல்லாதவன்; உயிர்கள் அனைத்தும் பிறப்புக்கு உட்படுவன. பிறவித் துன்பத்தைப் போக்கிக் கொள்ளும் பொருட்டு வழிபடுகின்ற நாம், பிறப்பு இறப்புக்கு உட்படாத இறைவனின் வடிவங்களையே வழிபடவேண்டும். அவ்வடிவங்களில் மட்டுமே இறைவன் முனைந்து நின்று நமக்கு அருள் பாலிக்கிறான். இவற்றைத்தவிர, பிற தெய்வ வடிவங்கள் வழிபாட்டுக்கு உரியனவல்ல. இதற்குக் காரணம், அவ்வடிவங்களை உடைய தெய்வங்கள் உயிர் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள், ஒவ்வொரு பிறப்பிலும் துன்பப்படுகிறார்கள்; அடுத்துப் பிறப்பதற்குரிய வினைகளைச் செய்கிறார்கள். எனவே அத்தெய்வங்களால் நமக்கு அருளை வழங்க முடியாது. எனவே மகேசுவர வடிவங்கள் இருபத்தைந்தையும் சதாசிவ வடிவத்தையும் மட்டுமே வழிபட வேண்டும் என்பது தெளிவாகிறது.
    இவ்வுண்மையைச் சிவஞானசித்தியாரில்,
    “யாதொரு தெய்வம் கொண்டிர் அத்தெய்வம் ஆகி ஆங்கே
      மாதொரு பாகனார்தாம் வருவர்; மற்றத் தெய்வங்கள்
      வேதனைப்படும்; பிறக்கும்; மேல்வினையும் செய்யும்;
      ஆதலால் இவை இலாதான் அறிந்து அருள் செய்வன் அன்றே"(115)
    
    என்று அருணந்திசிவம் அருளிச் செய்துள்ளார்.
    இன்னும், அந்தத் தெய்வங்கள் அவரவர் நிலையில் நின்று பயன் தருவார்களே அல்லாமல், நமக்கு வேண்டுவனவற்றை எல்லாம் வழங்க, அவற்றால், இயலாது. இதற்கு, “அத்தெய்வம் அத்தனைக் காண்" என்னும் பிரமாணம் தெளிவாக உள்ளது.
  170. அறநூல்களில் சொல்லப்பட்ட விதிகளின்படி நடந்துகொண்டால் போதாதா? இறைவழிபாடு வேறு செய்ய வேண்டுமா?
    அறநூல்களில் சொல்லப்பட்ட விதிகள் அனைத்தும் இறைவனால் வேதாகமங்களில் கூறப்பட்டவையே ஆகும். அவ்விதிகளின்படி ஒழுகுபவர்களுக்கு உள்ள பயன்களை இறைவனே வழங்க வேண்டியுள்ளது. அறச் செயல்களில் சிறந்தது, இறைவன் கருணையை நினைந்து அவனை வழிபடுவதே ஆகும். எனவே, இறைவன் திருவருளை மறந்துவிட்டுச் செய்யும் அறச்செயல்கள் அனைத்தும் பயனற்றவையே ஆகும். அறநூல்களில் சொல்லப்பட்ட விதிகளின்படி ஒழுகுவதோடு, இறைவழிபாடு செய்வதும் இன்றியமையாதது என்பது இதனால் பெறப்பட்டது.
    இவ்வுண்மையைத் தெளிவுபடுத்திச் சிவஞானசித்தியாரில்,
    “காண்பவன் சிவனேயானால், அவனடிக்கு அன்பு செய்கை,
     மாண்புஅறம்; அரன்தன் பாதம் மறந்துசெய் அறங்கள் எல்லாம்
     வீண்செயல்; இறைவன் சொன்ன விதி அறம்; விருப்பு ஒன்று இல்லான்;
     பூண்டனன் வேண்டல் செய்யும் பூசனை புரிந்து கொள்ளே"
    
    என்று அருளிச் செய்துள்ளார்.
  171. சிவபெருமானை எவ்வாறு வழிபட வேண்டும்?
    சிவலிங்கம், சிவனடியார் என்னும் இரு திருமேனிகளையும் ஆதாரமாகக் கொண்டு, சிவபெருமான் உயிர்களின் புறப்பூசையினையும் அகப்பூசையினையும் ஏற்று உயிர்களுக்கு அருள் செய்வான்.
    இவ்விரு பூசைகளுள் அகப்பூசையினைப் பரிபூரண பூசையாக ஏற்று; உயிர்களின் அகத்தே முன் நின்று அருள் செய்வான். இவ்வாறு, சிவபெருமானை வழிபட வேண்டும்.
    இவ்வுண்மையைச் சிவஞானசித்தியாரில்,
    “தாபர சங்கமங்கள் என்று இரண்டு உருவில் நின்று
     மாபரன் பூசைகொண்டு மன்உணிர்க்கு அருளை வைப்பன்;
     நீ, பரன்தன்னை நெஞ்சில் நினைவையேல், நிறைந்த பூசை
    ஆய், பரம்பொருளை நாளும் அர்ச்சி; நீ அன்பு செய்தே"
    
  172. அகப்பூசை செய்யும் முறையும் அதனால் பெறும் பயனும் யாவை?
    அகப்பூசை செய்யும் முறை வருமாறு :-
    நமது இதயத்தை அதற்குரிய இடமாகக் கொள்க. நமது கொப்பூழிலிருந்து எட்டு அங்குல நீளமுள் ஒரு தண்டு இருப்பதாகக் கருதுக. அத்தண்டின் முடிச்சில் எட்டு இதழ்கள் இருப்பதாகக் கொள்க. அந்நிலையில் ஒரு தாமரை மலர் இருப்பதாகக் கருதுக. அந்தத் தாமரை மலரின் நடுவே, வழிபடு தெய்வத்தின் வடிவத்தை நிலைபெறச்செய்க.
    அந்த வழிபடு வடிவத்திற்கு வாசனைத் திரவியங்கள், பால், தயிர், நெய், கோசலம், கோமயம், ஆகிய பஞ்சகவ்வியங்களால் திருமுழுக்குச் செய்க. பின்னர், உயர்ந்த ஆடை ஆபரணங்களால் அழகு செய்க. அதன் பிறகு மலர்மாலைகள் சூட்டுக, பின்பு விடுமலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்க. அதன்பிறகு திருவமுது படைத்து ஊட்டுக; பின்பு தூபம் காட்டுக. இவற்றை எல்லாம் மனத்தினாலே கருதிக்கொண்டு செய்ய வேண்டும். இவ்வாறு செய்வது ‘அந்தரியாக பூசை' எனப்படும். இ•தே அகப்பூசை செய்யும் முறையாகும்.
    இதனால் பெறும் பயன் வருமாறு :-
    கண்ணாடியை விளக்க விளக்க, மாசு நீங்கி மேலிட்டு வரும் ஒளி போன்று ஆன்மா சுத்தி அடைவதால் சிவபெருமான் நம் வழிபடு தெய்வ வடிவில் நின்று விளங்கித் தோன்றுவான். அதன் பயனாக மும்மலங்களும் நீங்கி ஞானம் தோன்றும். இதுவே ஆன்ம முத்திக்குரிய உயர்ந்த சாதனமாகும்.
    இதற்குப் பிரமாணம் :-
    சிவஞானசித்தியார் (300) மற்றும் (301).
  173. சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நான்கு நெறிகளில் இறைவனுக்கும் நமக்கும் உள்ள உறவுமுறை எத்தகையதாக இருக்கும்?
    சரியை நெறியில், இறைவனுக்கும் நமக்கும் உள்ள உளவு முறை, ஆண்டானுக்கும் அடிமைக்கும் உள்ளது போன்றது. கிரியை நெறியில், தந்தைக்கும் மகனுக்கும் உள்ள உறவு முறை போன்றது. யோக நெறியில், தோழனுக்கும் தோழனுக்கும் உள்ள உறவு முறை போன்றது. ஞானநெறியில், குருவுக்கும் சீடனுக்கும் உள்ள உறவுமுறை போன்றது. இந்நெறியில் உள்ள உறவு முறை நாயகனுக்கும் நாயகிக்கும் உள்ளது போன்றதென சிலர் கூறுகிறார்கள்.
    இந்நால்வகை நெறிகளில் உள்ள உறவுமுறை பற்றிய உண்மையைச் சிவஞானசித்தியாரில்,
    “சன்மார்க்கம், சகமார்க்கம், சற்புத்திர மார்க்கம்,
     தாதமார்க்கம் என்றும் சங்கரனை அடையும்
     நன்மார்க்கம் நால், அவைதாம் ஞான யோக
     நற்கிரியா சரியை என நவிற்றுவதும் செய்வர்"
    
    என்று அருணந்திசிவம் தெளிவுறுத்தியுள்ளார்.
  174. சரியை நெறியாகிய உடலால் செய்யும் வழிபாட்டில் என்னென்ன சிவப்பணிகள் செய்ய வேண்டும்?
    உடலால் செய்யும் வழிபாடு வருமாறு :-
    1. திருக்கோயில்களில் உள்ளும் புறமும் பெருக்கித் துப்புரவு செய்தல்
    2. திருக்கோயிலில் உள்ள தரையைச் சுத்தமான பசுவின் சாணம் கொண்டு மெழுகுதல்.
    3. அதிகாலையில் எழுந்து, குளித்து, வண்டுகள் மொய்வதற்கு முன், கைநகம் படாமல் மலர்களை கொய்து திருக்கோயிலில் கொடுத்தல்.
    4. பூமாலை தொடுக்கத் தெரியுமானால், இண்டை, தொடை, கண்ணி, பந்து, தண்டிற் கட்டுமாலை முதலிய பூமாலைகளைத் தொடுத்துத் திருக்கோயிலில் சேர்ப்பித்தல்.
    5. பன்னிரு திருமுறைப் பாடல்களை வாயினால் பத்தி பரவசத்துடன் பாடுதல்.
    6. பசுவின் நெய், எள் எண்ணெய் முதலியவற்றால் தீபம் ஏற்றுதல்.
    7. மலர்தரும் மரங்களை கொண்ட திருநந்தவனம் அமைத்தல்.
    8. சிவவேடப் பொலிவு உடையவரைச் சிவனாகவே நினைந்து வழிபடுதல். இதற்குப் பிரமாணம், சிவஞானசித்தியார் (271) ஆகும்.
  175. கிரியைநெறி ஆகிய மனமும் உடலும் கொண்டு செய்யும் வழிபாட்டில் (பெரும்பாலும் வாயினால் செய்வது) என்னென்ன சிவப்பணிகள் செய்ய வேண்டும்?
    இஃது, ஏறத்தாழ நமது இல்லங்களில் செய்யும் வழிபாடு ஆகும். வீட்டிலுள்ளவர்களது உதவியோடு வேண்டிய உபகரணங்களை அமைத்துக்கொண்டு, வழிபடு தெய்வத்தை (உபாசன மூர்த்தம்) வீட்டில் நிறுவி வழிபடுவது. அப்போது திருமுறைகளைக் கலந்த அன்பாகிக் கசிந்துருகிப் பாடவேண்டும்.
    வீட்டில் என்னென்ன முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்பதை சிவஞான சித்தியாரில் (272) அருணந்திசிவம் அழகுற அருளிச்செய்துள்ளார்.
  176. யோகநெறி ஆகிய மனத்தினால் செய்யும் வழிபாட்டில் என்னென்ன சிவப்பணிகள் செய்ய வேண்டும்?
    இது சிவயோகம் ஆகும். பொறி புலன்களை ஒடுக்கி, சுவாசத்தை ஒருவழிப்படுத்தி, ஏறத்தாழ அகப்பூசை செய்யும் முறையில் சிவபெருமானோடு ஒன்றிய உணர்வோடு மனத்தைப் பழக்குவதே, யோக நெறியில் செய்யும் பணியாகும். இதற்குப் பிரமாணம் சிவஞானசித்தியார் - (272)
  177. ஞானநெறியில் செய்ய வேண்டுவது யாது?
    இது சைவம் கூறும் சன்மார்க்கம். இந்நெறியில் நிற்பவர்கள், சிவாகமங்களில் கூறப்பட்ட பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள்களின் உண்மையையம் இயல்பையும் தெளிவாக அறிதல் வேண்டும். அவ்வறிவின் பயனால், ஞானம் ஏற்படும். அப்போது சிவபெருமானை அறியும் உணர்வு தலைப்படும். அந்நிலையிலும், ஆன்மா தன்னையோ, தனது அறிவையோ, தன்னால் அறியப்படும் சிவனையோ வேறுபடுத்தி உணராமல், சிவனருளில் அழுந்தி நிற்கும் பயிற்சினை மேற்கொள்ள வேண்டும். இதற்குப் பிரமாணம் சிவஞானசித்தியாரி - (274)


    வழிபாட்டின் பயன்

  178. சரியை முதலிய வழிபாடுகளின் பயன் யாது?
    சரியை நெறியில் நின்று வழிபாடுகள் செய்தவர்கள் சிவலோகத்திற்குச் சென்று அவ்வுலகத்தில் உள்ள போகங்களை அனுபவிப்பர்.
    கிரியை நெறியில் நின்றவர்கள் சிவலோக போகத்தை அனுபவிப்பதோடு, சிவபெருமானுக்கு அருகில் இருக்கும் பேற்றைப் பெறுவர்.
    யோக நெறியாளர்கள் சிவபெருமான் கொண்டுள்ள திருமேனிகளில் ஒன்றைப் பெற்று சிவலோகத்தில் சிவபோக அனுபவம் உடையவராய் வாழ்வர்.
    ஞான நெறியில் நின்றவர்கள் சிவபெருமான் திருவடியில் இரண்டறக் கலந்து நின்று நித்தியானந்தத்தை அனுபவித்து வாழ்வர்.
    இந்நான்கு பயன்களையும் முறையே சாலோக, சாமீப, சாரூப, சாயுச்சிய முத்திகள் எனக் கூறுவர்.
  179. இந்த ஒரு பிறப்பிலேயே முத்தியைப் பெற்றிவிட முடியுமா?
    சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய சிவபுண்ணிய நெறிகளில் உள்ளன்போடு ஒழுகி வருபவர்கள் இந்தப் பிறப்பிலேயே முத்தியைப் பெற்றுவிட முடியும் என்று சைவசித்தாந்தத்தில் கூறப்பட்டுள்ளது. அவ்வாறு ஒழுகி வருபவர்களின் மும்மல அழுக்கை நீக்கி அவர்களை ஞானசாகரத்தில் மூழ்குவித்துச் சிவானந்தம் மேலிடச் செய்து மேல் வரும் பிறப்பை ஒழித்து இறைவன் முத்தியைத் தந்தருள்வான் என்று சிவாகமங்கள் ஆகிய சித்தாந்தத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.எனவே சிவாகம நெறியின் படி நடப்பவர்கள் இப்பிறப்பிலேயே முத்தியைப் பெறலாம் என்பது தெளிவு.
  180. சரியை முதலிய நெறிகளில் நின்று எவ்வாறு ஒழுகினால் இப்பிறப்பிலேயே முத்திகிட்டும்?
    சரியையில் சரியை, சரியையில் கிரியை முதலிய பதினாறு வகைகளில், ஞானத்தில் சரியை ஞானத்தில் கிரியை முதலிய நான்கு வழிகளில் நின்று ஒழுகினால் இப்பிறப்பிலேயே முத்தி கிட்டும்.
    அந் நான்கு வழிகள் வருமாறு :-
    ‘ஞானத்தில் சரியை' என்பது, திருமுறைகள் மற்றும் சைவசித்தாந்தப் பொருள்களைப்பற்றித் தக்கவர்களிடம் ‘கேட்டல்' ஆகும்.
    ‘ஞானத்தில் கிரியை' என்பது, அவற்றைக் காரண காரிய இயைபுபடுத்தி எடுத்துக்காட்டுக்களையும் கருத்தில் கொண்டு ‘சிந்தித்தல்' ஆகும்.
    ‘ஞானத்தில் யோகம்' என்பது அவற்றைச் சந்தேகமோ விபரீதமோ இன்றித் தெளிதல் ஆகும்.
    ‘ஞானத்தில் ஞானம்' என்பது, அவ்வாறு தெளிவடைந்த பிறகு, சிவபெருமானின் திருவருளையன்றி நமக்கு எந்தவிதச் செயலும் இல்லை; அறிவும் இல்லை; என்று நினைந்த ‘சிவபெருமானையே சதாகாலமும் நினைந்திருத்தல்' ஆகும். இதனை ‘நிட்டை கூடுதல்' என்று சாத்திரங்கள் பேசும்.
    சாத்திரங்களைக் கற்றலும், பதி, பசு, பாச உண்மைகளை ஆராய்தலும் பர ஞானம் எனப்படும். சரியை முதலிய நான்கனுள் ஈற்றில் உள்ள ஞானத்தை இருவகையாகப் புரிந்து கொள்ளவேண்டும். ஒன்று அபரஞானம்; மற்றொன்று பரஞானம்.
    அபர ஞானம், பரஞானத்தைக் கூடுவிக்கும்; சாத்திரங்களைக் கற்பதோடு அமையக் கூடாது; சரியை, கிரியை, யோகங்களுக்கு அங்கமாகத்தான் சாத்திரங்களை ஓத வேண்டும். சரியை, கிரியை, யோகங்களின் மூலமும் சாத்திர ஞானத்தின் மூலமும் நாம் இறைவனிடத்து, பத்தியை (அன்பை) மிகுவித்துக் கொள்ள வேண்டும். அன்பின் முதிர்வில் இறைவன் குருநாதனாக வந்து ‘பரஞானம்' ஆகிய வியாபக உணர்வை நமக்கு உணர்த்துவான். வியாபக உணர்வின் மூலந்தான், இறைவனோடு இரண்டறக் கலந்து, பேரின்பத்தை அனுபவிக்க முடியும். எனவே பரஞானத்திற்கு பத்தி மிகவும் இன்றியமையாதது என்பதை நாம் நன்றாக உணரவேண்டும்.
    இந்நால்வழிகளும் உயிர்கள் முத்தி பெறும்பொருட்டே உள்ளமையால் சைவசித்தாந்த சாத்திரங்களைக் கற்க வேண்டுவது இன்றியமையாததாகும்.
    இவ்வுண்மையைத் தெளிவுபடுத்திச் சிவஞானசித்தியாரில்,
    “கேட்டலுடன் சிந்தித்தல் தெளிதல் நிட்டை
     கிளத்தல் என ஈர் இரண்டாம்; கிளக்கின் ஞானம்
     வீட்டை அடைந்திடுவர்" (276)
    
    என்று அருணந்திசிவம் அருளிச் செய்துள்ளார்.
    ‘ஞானம் கிளக்கின்' என்பது ஞானத்தில் சரியை என விரித்துக் சுறுமிடத்து என்பது பொருள். ‘நிட்டை கிளத்தல்' என்பது, ‘நிட்டை கூடுதல்' ஆகும்.


    திருக்கோயில் வழிபாட்டு இயல்

  181. திருக்கோயிலுக்கு எப்படிப் போதல் வேண்டும்?
    குளித்துத் தூய்மையான ஆடை அணிந்து, திருநீறு அணிந்து, திருமுறைகளை ஓதிச் சிவ சிந்தனையுடன் செல்லல் வேண்டும்.
  182. திருக்கோயிலுக்கு அண்மையில் சென்றவுடன் யாது செய்தல் வேண்டும்?
    தூல இலிங்கமாகிய திருக்கோபுரத்தை வழிபட்டு, இரண்டு கைகளையும் தலைமேல் குவித்து இறைவன் புகழ்பாடிக் கொண்டு உள்ளே புகுதல் வேண்டும்.
  183. திருக்கோயிலுக்கு உள்ளே போனவுடன் யாது செய்தல் வேண்டும்?
    பலி பீடத்துக்கு முன் வீழ்ந்து வணங்க வேண்டும்.
  184. கிழக்கு நோக்கிய திருக்கோயிலிலும் மேற்கு நோக்கிய திருக்கோயிலிலும் எந்தத் திக்கிலே தலை வைத்து வணங்க வேண்டும்?
    வடக்கே தலை வைத்து வணங்க வேண்டும்.
  185. தெற்கு நோக்கிய திருக்கோயிலிலும் வடக்கு நோக்கிய திருக்கோயிலிலும் எந்தத் திக்கிலே தலை வைத்து வணங்க வேண்டும்?
    கிழக்கே தலை வைத்து வணங்க வேண்டும்.
  186. எந்தத் திக்குகளில் கால் நீட்டி வணங்கக் கூடாது?
    கிழக்கிலும் வடக்கிலும் கால் நீட்டி வணங்கல் ஆகாது.
  187. ஆடவர்கள் எப்படி வணங்க வேண்டும்?
    எட்டு உறுப்புக்கள் நிலம் தோய வணங்க வேண்டும்.
  188. எட்டு உறுப்பு வணக்கமாவது யாது?
    தலை, கை இரண்டு, செவி இரண்டு, மோவாய், புயங்கள் இரண்டு என்னும் எட்டு உறுப்புக்களும் நிலத்தில் பொருந்தும்படி வணங்குதல்.
  189. பெண்டிர் எப்படி வணங்க வேண்டும்?
    ஐந்து உறுப்புகள் நிலம் தோய வணங்க வேண்டும்.
  190. ஐந்து உறுப்பு வணக்கமாவது யாது?
    தலை, கை இரண்டு, முழந்தாள் இரண்டு என்னும் ஐந்து உறுப்புக்களும் நிலத்தில் பொருந்தும்படி வணங்குதல்.
  191. எத்தனை முறை விழுந்து வணங்க வேண்டும்?
    மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது முறை விழுந்து வணங்க வேண்டும். ஒரு முறை, இருமுறை வணங்கலாகாது.
  192. விழுந்து வணங்கிய பின் யாது செய்தல் வேண்டும்?
    திருக்கோயில் திருச்சுற்றினை வலம் வரல் வேண்டும்.
  193. எவ்வாறு வலம் வரல் வேண்டும்?
    இரண்டு கைகளையும் தலையிலாவது, மார்பிலாவது குவித்து வைத்து சிவப் பெயர்களை உச்சரித்துக் கொண்டு, கால்களை மெல்ல வைத்து வலம் வரல் வேண்டும்
  194. எத்தனை முறை வலம் வரல் வேண்டும்?
    மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது முறை வலம் வர வேண்டும்.
  195. திருக்கோயிலில் எந்த முறையாக வழிபாடு செய்ய வேண்டும்?
    முதலில் விநாயகரை வழிபட்டுப் பின் பெருமானையும் உமையம்மையையும் வழிபாடு செய்து, திருநீறு வாங்கிக் கொண்டு அதன்பின் அம்பலவாணர், தென்முகப் பரமன் (தக்ஷிணாமூர்த்தி), சேயிடைச் செல்வர், பிறைமுடிப் பெருமான், முருகப் பெருமான் முதலிய திருமேனிகளை வழிபட வேண்டும்.
  196. விநாயகரை எவ்வாறு வழிபட வேண்டும்?
    முட்டியாகப் பிடித்த இரண்டு கைகளினாலும் நெற்றியிலே மூன்று முறை குட்டி, வலக்காதை இடக்கையினாலும், இடக் காதை வலக்கையினாலும் பிடித்துக்கொண்டு, மூன்று முறை தாழ்ந்தெழுந்து கும்பிடல் வேண்டும்.
  197. திருக்கோயிலில் வழிபாடு செய்யும்போது என்ன செய்ய வேண்டும்?
    இரண்டு கைகளையும் தலையிலோ, மார்பிலோ குவித்துக் கொண்டு மனம் கசிந்துருக வழிபாடு செய்தல் வேண்டும்.
  198. எந்தக் காலத்தில் வழிபாடு செய்தல் கூடாது?
    திருமஞ்சனம், அமுது செய்வித்தல் காலங்களில் வழிபாடு செய்தல் கூடாது.
  199. திருமஞ்சன( அபிடேக ) நேரத்தில் திருச்சுற்றினை வலம் வரலாமா?
    உள் திருச்சுற்றினை வலம் வரல் ஆகாது. வந்தால் இறைவர் திருமஞ்சன நீர் செல்லும் பாதையைக் கடவாமல் அப்புனித நீரை மிதியாமல் முழுதாகாத பிறை வட்டம் போன்று வலம் வர வேண்டும்.
  200. வழிபாடு முடிந்தவுடன் யாது செய்தல் வேண்டும்?
    சண்டேசுரர் கோயிலை அடைந்து கும்பிட்டு, இறைவர் பிரசாதம் கோயிலிலிருந்து எடுத்துச் செல்ல இருப்பின் அவர் அனுமதி பெற வேண்டும். அவ்வாறு இல்லையெனின் கைகளைத் தடவி ஏதும் கொண்டு செல்லவில்லையெனத் தெரிவித்துச் சிவவழிபாட்டுப் பலனைத் தரும்படி வேண்ட வேண்டும்.
  201. ஏன் சண்டேசர் வழிபாட்டில் இவ்வாறு செய்யல் வேண்டும்?
    சண்டேசரே இறைவனுடைய உண்டதும் உடுப்பதுமான அனைத்து பிரசாதங்களுக்கும் அதிபதி. எனவே அவரது அனுமதி இன்றி எந்தப் பிரசாதத்தையும் சிவாலயத்திலிருந்து எடுத்து வருதல் குற்றம்.
  202. சண்டேசர் வழிபாட்டின் பின் யாது செய்தல் வேண்டும்?
    கொடிமரம் முன்னர்ச் சென்று விழுந்து வணங்கி திருவைந்தெழுத்தை இயன்றவரை கணித்து எழுந்து வீட்டுக்குச் செல்ல வேண்டும்.
  203. திருக்கோயிலில் செய்யத் தகாதன யாவை?
    ஒழுக்கம் இல்லாது போதல், கால் கழுவாது போதல், எச்சில் உமிழ்தல், மலசலங் கடித்தல், மூக்கு நீர் சிந்துதல், ஆசனத்து இருத்தல், மயிர் போதி முடித்தல், சூதாடல், பாக்கு வெற்றிலை கொள்ளல், தலையில் ஆடை தரித்துக் கொள்ளுதல், தோளிலே துண்டு இட்டுக் கொள்ளுதல், சட்டை இட்டுக் கொள்ளுதல், காலணி இட்டுக் கொள்ளுதல், பூசித்து கழித்த பொருள்களைக் கடத்தல், பூசித்து கழித்த பொருள்களை மிதித்தல், கொடி மரம், பலி பீடம், திருமேனி என்னும் இவைகளின் நிழலை மித்தல், வீண் வார்த்தை பேசுதல், இறைவருக்கும் பலி பீடத்துக்கும் குறுக்கே போதல் முதலியவைகளாம்.
  204. சிவஸ்தலங்களைத் தரிசனஞ் செய்ய வேண்டிய முறைமை யெப்படி?
    விநாயகமூர்த்தி, மூலலிங்கம், சபாபதிமூர்த்தம், சோமாஸ்கந்தமூர்த்தம், பரிவார தேவர்கள், மூலஸ்தானம், அம்மையார், சண்டேசுரர், பயிரவர் என்னும் மூர்த்தங்களைக் கிரமமாகத் தரிசிக்கவேண்டும். முதல் விநாயகமூர்த்தியைத் தரிசித்தவுடன் நந்திதேவரிடத்தில் விடைபெற்றுக்கொண்டு மூலலிங்க முதலாகத் தரிசிக்க வேண்டும்.
  205. பரிவார தேவர்கள் யார்?
    இருபத்தைந்து மூர்த்தங்களில் சபாபதியும் சோமாஸ்கந்தமூர்த்தமுந் தவிரச் சந்திரசேகரர் முதலிய இருபத்து மூன்று மூர்த்தமுமாம். பிரமதேவன், விஷ்ணு, துர்க்கை, சுப்பிரமணியர், வீரபத்திரர், நவக்கிரகங்கள், வாமாதி அஷ்ட சத்திகள் பரமேசுவரர்களுமாம்.
  206. எந்தப்புறத்திலிருந்து தரிசிக்க வேண்டும்?
    கிழக்கு நோக்கிய சந்நிதியானால் சிவபெருமானுடைய வலப்பக்கமாகத் தென்புறத்தில் நின்று தரிசிக்க வேண்டும். தெற்கு நோக்கிய சந்நிதியானால் சிவபெருமானுக்கு வலப்பாகமாக மேற்புறத்தில் நின்றும், மேற்கு நோக்கிய சந்நிதியானால் சிவபெருமானுக்கு இடப்பாகமாகத் தென்புறத்தில் நின்றும், வடக்குநோக்கிய சந்நிதியானால் சிவபெருமானுக்கு இடப்பாகமாக மேற்புறத்தில் நின்றும் தரிசிக்கவேண்டும்.
  207. துவஜஸ்தம்பத்தில் பணியவேண்டிய கிரமமெப்படி?
    கிழக்கு நோக்கிய சந்நிதியானால் பலிபீடத்தின் அக்கினி மூலைக்கு எதிராகச் சமீபத்தில் சிரசுவைத்து மார்பு பூமியிலேபடும்படி இரண்டு கைகளையும் வடக்காக நேரே நீட்டிப் பின்பு தோள்களிலே மண்படும்படி இரண்டு கைகளையும் தெற்கே நீட்டி இரண்டு காதுகளையும் பூமியிலே பொருந்தச் செய்து அஷ்டாங்கவந்தனஞ் செய்யவேண்டும். கைகளைத் தெற்கே நீட்டும்போது முன்னதாக வலக்கை நீட்டிப் பின்பு இடக்கை நீட்டவேண்டும். காது மண்ணில் பொருந்தச் செய்யும்போது முந்தி வலக்காதும் பின்பு இடக்காதும் பொருந்தவேண்டும். தெற்கு நோக்கிய சந்நிதியானாலும் மேற்கு நோக்கிய சந்நிதியானாலும் பலிபீடத்தின் நிருதிமூலையில் முன்சொன்ன முறைமைப்படியே சிரசுவைத்து நமஸ்காரம் செய்தல்வேண்டும். வடக்கு நோக்கிய சந்நிதியானால் பலிபீடத்தின் வாயுமூலையில் சிரசுவைத்துக் காலை மேற்காக நீட்டி முன்சொன்னப்படிப் பணியவேண்டும். ஆனால் பகல் பதினைந்து நாழிகைக்கு மேற்பட்ட காலத்தில் தரிசிக்கப்போனால் மேற்கே காலை நீட்டக்கூடாமையினாலே அஷ்டாங்க பஞ்சாங்கத்துடன் பணியாமல் நின்றபடி இரண்டு கைகளையுங்குவித்து உச்சியின் மேல் வைததுக்கொண்டு தரிசிக்க வேண்டும்.
  208. பகல் பதினைந்து நாழிகைக்குமேல் தரிசனம் செய்வதற்குக் காரணமென்ன?
    சூரியகிரகணம், மகரசங்கராந்தி முதலாகிய புண்ணிய காலங்கள் பகல் பதினைந்து நாழிகைக்குமேல் வருமானால் தரிசிக்கப்போக வேண்டும்.
  209. சூரிய அஸ்தமனத்தின்பின் தரிசிக்கப்போனால் எப்படிப் பணியவேண்டும்.
    பகல் பதினைந்து நாழிகைக்குமேல் சூரிய அஸ்தமனமாவதற்கு முன்வரையில், அஷ்டாங்கத்துடன் பணியலாகாதேயன்றி மற்றக் காலங்களிலே யெல்லாம் அஷ்டாங்கத்துடனே தான் பணியவேண்டும்.
  210. அஷ்டாங்க பஞ்சாங்க மென்பதை யல்லாமல் வேறு விதமான நமஸ்காரங்களுமுண்டோ?
    ஏகாங்கம், துவிதாங்கம், திரிவிதாங்கம் என மூன்றுமாம்.
  211. மேற்கூறிய நமஸ்காரங்களை முறையே விளக்குக?
    சிரசினால் மாத்திரம் வணங்குவது ஏகாங்கமாம். சிரசின் மேல் வலக்கரத்தைக் குவித்து வணங்குவது துவிதாங்கமாம். இரண்டு கைகளையும் சிரசின்மேல் குவித்து வணங்குவது திரிவிதாங்கமாம். பஞ்சாங்கமாவது சிரமும், இரண்டு வைகளும், இரண்டு முழந்தாள்களும் பூமியின்மேல் படும்படி வணங்குதலாம். அஷ்டாங்கமாவது சிரம், இரண்டு கைகள், இரண்டு முழந்தாள்கள், இரண்டு காதுகள், நெற்றி இவைகள் பூமியிற்படிய வணங்குதலாம்.
  212. பிரதக்ஷணம் செய்யவேண்டிய முறைமை யெப்படி?
    காமியத்தை விரும்பினர்வள் வலமாகவும், மோக்ஷத்தை விரும்பினவர்கள் இடமாகவும், காமியத்தையும், மோக்ஷத்தையும் விரும்பினவர்கள் வலமிடமாகவும் பூரணகர்பபவதி எண்ணெய் நிறைந்த குடத்தைச் சிரசின்மேல் வைத்துக்கொண்டு காலில் விலங்கு பூட்டப்பட்டவளாய் நடப்பதுபோல அதிக மெதுவாய்ப் பிரதக்ஷணஞ் செய்யவேண்டும். அப்போது பரமசிவனது பாதங்களைச் சிந்தித்துக்கொண்டும செபவடங் கையிலே வைத்துக்கொண்டும் பஞ்சாக்ஷரசெபஞ் செய்து கொண்டும் இரண்டு கைகளையும் மார்புக்குச்சரியாக வைத்துக்கொண்டும் வரவேண்டும்.
  213. சிவசந்நிதியில் எத்தனை பிரதக்ஷணம் செய்ய வேண்டும்?
    மூன்று அல்லது ஏழு பிரதக்ஷணஞ் செய்ய வேண்டும். இந்தத் தொகைக்கு மேற்படவும் செய்யலாம்.
  214. எந்தக் காலங்களில் ஆலயத்துக்குப் போக வேண்டும்?
    காலை, உச்சி, அந்தி யென்னும் திரிசந்தி காலங்களிலும் போகலாம்.
  215. இந்த மூன்று கால மல்லாத காலத்தில் தரிசனஞ்செய்ய ஆலயத்துக்குப் போகலாகாதோ?
    கிரகண புண்ணியகாலம், சங்கராந்தி புண்ணியகாலம் நேரிடுமானால் தரிசனஞ்செய்யப் போகலாம்.
  216. எந்த ஆவரணங்களில் பிரதக்ஷணம் செய்ய வேண்டும்?
    முதலாவரணந் (கருவறை) தவிர மற்ற ஆவணங்களில் பிரதக்ஷணஞ் செய்யலாம்.
  217. ஆவரணங்களின் முறைமை யெப்படி?
    சிவலிங்கப் பெருமானைக் கெர்ப்பக்கிரகத்தில் சூழ்ந்து வரத்தக்கதாக இருப்பதே முதலாவரணம். மற்றைய ஒன்றின்பின்னொன்றாய் இரண்டு முதல் ஐந்து ஆவரணங்களாம். அதற்கப்பால் ஊரின்புலமே ஆறா மாவரணம்.
    இப்படி வரும் ஆவரணங்களில் ஸ்தூபி நிழலாவது துவஜஸ்தம்ப நிழலாவது நேரிடுவதாயிருந்தால் அந்த ஆவரணத்தைவிட்டு அப்புறத்திலிருக்கும் ஆவரணத்தில் பிரதக்ஷணஞ் செய்யவேண்டும். சுவாமி உத்சவங்கொண்டருளுகின்ற காலத்தில் சுவாமியின் பின்வரும்போது மேற்சொன்ன நிழலிருக்குமானாலும் குற்றமில்லை.
  218. பிரதக்ஷணம் இத்தனை நாழிகை செய்ய வேண்டு மென்கிற நியதியுண்டோ?
    ஒரு ஜாமப் பொழுதளவு செய்யவேண்டும்; அவ்வாறு செய்தால் ஜெனனமரணம் நீங்கிச் சிவலோகம் அடைவார்கள்.
  219. சோமசூக்தப் பிரதக்ஷணமென்பது யாது?
    அதாவது பிரதக்ஷணஞ்செய்யத் தொடங்கும்போது நந்திதேவரைத் தரிசித்துக்கொண்டு அங்கிருந்தபடியே யிடமாகச் சென்று சண்டேச நாயனாரைத் தரிசித்துச் சென்ற வழியே திரும்பிவந்து மறுபடியும் நந்திதேவரைத் தரிசித்து அங்கிருந்து வலமாகச் சென்று சண்டேச நாயனாரைத் தரிசித்துத் திரும்பிவந்து நந்திதேவரைத் தரிசித்துப் பின்பு சிவலிங்க தரிசனஞ் செய்து பணியவேண்டும். இவ்வாறு ஒரு பிரதக்ஷணஞ் செய்தால் அனந்தம் பலனுண்டு. பிரிந்து வருகின்றபடியே பிரதக்ஷணஞ் செய்யவேண்டும். இந்தப் பிரதக்ஷணம் பிரதோஷ காலத்திற் செய்தால் விசேஷமான பலனுண்டு.
  220. பிரதோஷ காலமாவது எது?
    பகல் இருபத்தாறேகால் நாழிகைக்கு மேற்பட்ட மூன்றே முக்கால் நாழிகையளவும் சூரியாஸ்தமனமான மூன்றே முக்கால் நாழிகைக்கு உட்பட்டதுமான காலம் பிரதோஷகாலம். இக்காலத்திற் சிவதரிசனஞ் செய்வது முக்கிய மானதால் சிவனடியார்களாயுள்ளாரியவரும் அவசியம் சிவதரிசனம் செய்யவேண்டும்.
  221. பிரதோஷமென்பதற்குப் பொருளென்ன?
    இராத்திரியின் முன் என்பதாகும். சம்ஸ்கிருதத்தில் ரசனி முகமென்று சொல்லப்படுகின்றது. இவ்வாறு சொல்லப்படுகின்ற பிரதோஷகாலம் திரியோதசி திதியிற் சிறந்தது. பிரதோஷ விரதமும் இந்தத் திதியிலனுஷ்டிக்க வேண்டும்.
  222. திரயோதசி திதியிற் சிறந்ததற்குக் காரணமென்ன?
    கங்காதர மூர்த்தியாகிய பரமசிவம் ஆலகால விஷமுண்டருளியபோது ஒரு க்ஷணநேரம் சும்மாவிருந்தார். அன்று ஏகாதசிதிதி. அப்போது தேவாகள் பரமசிவனை அருச்சித்துக் கொண்டிருந்து மறுநாள் துவாதசி திதியில் பாரணஞ்செய்து பூர்த்தியடைந்தார்கள். அன்று மறுநாள் திரயோதசி திதி பிரதோஷகாலத்தில் பரமசிவன் பராசத்தி யெதிரில் சூலஞ் சுழற்றிக்கொண்டு கயிலாசகிரியில் ஒரு ஜாமம் நடனஞ்செய்தருளினார். இந்தக் காரணத்தினால் திரயோதசி திதி பிரதோஷகாலத்தில் சிவதரிசனஞ் செய்கின்றவர்கள் நந்திதேவரைப் பரிசித்து நந்திதேவருடைய இரண்டு கொம்பு மத்தியில் பிரணவ சகிதமாக அரகரவென்று சொல்லிக்கொண்டு சிவலிங்க தரிசனஞ் செய்யவேண்டும். இவ்வாறு தரிசிக்கும் சிவனடியார்கள் சிவசாரூபம் பெறுவார்கள். சனிப்பிரதோஷம் மிகுந்த சிறப்புள்ளதாக ஆகமம் சொல்லுகின்றது. சிவலிங்க தரிசனஞ் செய்கின்றவர்கள் வில்வத்தினால் சிவார்ச்சனை செய்விக்கவேண்டும். பிரதோஷவிரத மனுஷ்டிப்பவர்கள் சிவனடியார்களுக்கு அமுது படைத்துப் பின்பு புசிப்பது உத்தமம்.
  223. பிரதோஷ விரத மனுஷ்டித்துப் பேறு பெற்றவர்கள் யாவர்?
    உஜ்ஜயினி மாகாளமென்னும் நகரத்துக்கு அரசனாகிய சந்திரசேன மகாராஜன் சனிப்பிரதோஷ விரத மனுஷ்டித்து இம்மையில் அரசர்களெல்லாம் தன்னை வணங்கும்படி செங்கோல் செலுத்திச் சிவபதம் பெற்றான். இந்த ராஜன் பூஜை செய்ததைப்பார்த்த ஒரு இடைப்பிள்ளைக்குப் பக்தியுண்டாகி வீதியில் மணலினால் ஆலயமுதலானவைகளும் அமைத்துக்கொண்டு ஒரு சிலையை நாடிச் சிவலிங்கமாகப் பாவித்துப் பூசைசெய்து பேறுபெற்றான். இன்னும் பலர் இவ்விரத மனுஷ்டித்துப் பேறுபெற்றார்கள்.
  224. இவ்விரதம் நிறுத்திவிடுவதானால் யாது செய்தல் வேண்டும்?
    பிரதோஷவிரத மிருப்பவர்கள் தேக அசக்தியினால் நிறுத்திவிடுகிறதாயிருந்தாலும், மேலுமிடைவிடாமல் அனுஷ்டிப்பதாயிருந்தாலும் உடனுக்குடன் உத்தியாபனஞ் செய்ய செய்யவேண்டும். அப்படிச் செய்யாமலிருந்து தேகம் நழுவிவிடுமானால் விரத பலன் சித்தியில்லையாம். ஆதலினால் ஆகம விசாரணையுள்ளவர்களால் தெரிந்துகொண்டு நடக்கவேண்டும்.
  225. சிவதரிசனஞ் செய்யும்போது நந்திதேவருக்கும் சிவலிங்கப் பெருமானுக்கும் மத்தியில் ஏன் போகலாகாது?
    அப்படிப்போவது முப்பத்திரண்டு குற்றங்களிலொன்றாம். ஆதலால் போகலாகாது.
  226. மேற்கூறிய முப்பத்திரண்டு குற்றங்கள் யாவை?
    நந்திதேவருக்கும் சிவலிங்கப்பெருமானுக்கும் மத்தியிற் போதல், தரிசனை செய்தபின் புறங்காட்டிவருதல், ஒருகை குவித்து தரிசித்தல், ஒரு பிரதக்ஷணஞ் செய்தல், மேலே யுத்தரீயம் போட்டுக்கொண்டு தரிசித்தல், கோபுரச்சாயையைக் கடத்தல், கோயிலிலுண்ணுதல், நித்திரைசெய்தல், நின்மாலியத்தைத் தாண்டுதல், அதனைத் தீண்டுதல், கையினால் விக்கிரகங்களைத் தீண்டுதல், ருத்திரகணிகையரைக் கையினால் தீண்டுதல், அவர்களோடு பேசுதல், நோக்குதல், வீணான வார்த்தைகள் பேசுதல், கோயிற்காரிய மல்லாத சொல்லைச் சொல்லுதல், தான் சொல்லாவிட்டாலும் ஒருவர் சொல்லுவதைக் கேட்டல், உத்தமர்களை யவமதித்தல், அற்பர்களை மதித்துப்பேசுதல், அவ்விடத்திலிருக்கும் சிவசொத்தாகிய பொருளையபேக்ஷித்துப் பார்த்தல், வேதங்களால் சொல்லப்படாத சிறுதெய்வங்களைப் பணிதல், வேதமுதலான கலைகள் பாடமோதுதல், உன்னதஸ்தானத்திலிருத்தல், ஆசனத்திலிருத்தல், ஒருவரைப் பார்த்து நகைத்தல், பிணங்குதல் முதலான துர்க்குணங்களைப் பாராட்டுதல், அருட்பாக்களையன்றி மற்றப்பாடலை மதித்துக்கேட்டல், சண்டேசுரரிடத்தில் வஸ்திரத்தின் நூல் கிழித்துவைத்தல், பலிபீடத்துக்கும் சந்நிதானத்துக்கும் மத்தியில் மற்றவரை வணங்குதல், திருக்கோயிலினுள் பொடிமுதலிய போடுதல், திரிசந்தியல்லாத காலங்களில் ஆலயத்திற் செல்லுதல், இரண்டொரு பிரதக்ஷணஞ்செய்தல், சிரேஷ்டமல்லாத கீர்ததனங்கள் பாடுதல் என்னுமிவையாம்.
  227. அன்றி சிவதீர்த்தத்திலும் நந்தன வனத்திலும் செய்யத்தகாத காரியமென்ன?
    சிவ தீர்த்தத்தில் உமிழ்நீர் துப்பலாகாது. மூக்குச் சிந்தலாகாது. மற்றுமுள்ள அசுசியான காரியஞ் செய்யலாகாது. நந்தனவனத்தும் இப்படியே.
  228. நந்தனவனம் சிரேஷ்டமானதற்குக் காரணமென்ன?
    சிவார்ச்சனைக்கு யோக்கியமான பூச்செடிகளையுடையதாகையால் சிரேஷ்டமாயது. இதுவுமன்றிப் பரமசிவம் சில மலர்களிலும் பராசக்தி சில மலர்களிலும் வாசமாயிருப்பதனாலும் சிரேஷ்டமாயது. இதன் விபரம் புட்பவிதியில் கண்டு கொள்க.
  229. பாடல்பெற்ற ஸ்தலங்களிலிருக்கும் ஆலயங்களுக்கு அபாயம் நேரிடுவதாயிருந்தால் என்செய்வது?
    அக்காலங்களி லங்கிருக்கும் சுயம்புமூர்த்தி சலனப்படுத்தத் தக்கதாயிருந்தால் வேறே ஆலயமேற்படுத்தி, அந்தச் சிவலிங்கத்தைக் கொண்டுவந்து ஸ்தாபிக்கலாம். சலனப்படுத்தக் கூடாததாயிருந்தால் வேறே லிங்கம் ஸ்தாபிக்கப்பட்டாலும் சுயம்பு மூர்த்தியேயாம்.
  230. பரமசிவன் எந்தச்சிவலிங்கத்தினிடத்தில விசேஷமாய் மூர்த்திகரித்திருக்கிறார்?
    சுயம்புலிங்கத்தில் சர்வதா காலமும் மூர்த்திகரித்திருக்கிறார்.
  231. பரமசிவன் எங்கும் பரிபூரணமாயிருக்க சிவாலயத்தில் சிவலிங்கத்தினிடமாக மூர்த்திகரித் திருருக்கிறாரென்பதற்குத் திருஷ்டாந்த மென்ன?
    பசுவின் சரீரமெங்கும் பாலானது வியாபித்திருந்தாலும், அதன்முலைக் காம்பினாலேயேயன்றி அப்பாலையடைவது கூடாததுபோல சிவலிங்கத்தினிடத்திலே யன்றி அப்பெருமானையடைவது கூடாது.
  232. திரிசந்தி காலங்களில் சிவதரிசனஞ் செய்வதில் இன்னகால தரிசனத்தினால் இன்ன பலன் சித்தியாமென்கிறது உண்டா?
    காலையில் சந்தியில் தரிசித்தால் அன்று நேரிடும் பாவம் நிவர்த்தியென்றும், உச்சிக்கால தரிசனத்தால் அந்தச் சென்மத்தில் நேரிடும் பாவம் நிவர்த்தியென்றும், சாயங்கால தரிசனத்தால் செனனங்கள்தோறும் நேரிட்டபாவங்கள் நிவர்த்தியென்றும் அறிந்துகொள்க.


    திருவிழாத் தத்துவங்கள்

  233. திருவிழாவாவது யாது?
    ஆலயங்களில் பத்து அல்லது பன்னிரண்டு நாட்கள் மிகச் சிறப்பாகப் பூசைகள் நடத்தி அங்குள்ள மூர்த்திகளின் திருவுருவங்களைப் பலவித வாகனங்களின் மேல் எழுந்தருளச் செய்து நடத்துவிக்கும் விழாவுக்கு திருவிழா என்று பெயர். இதனை மகோத்ஸவம் எனவும் கூறுவர்.
  234. மகோத்ஸவம் என்பதன் பொருள் என்ன?
    மஹா - பெரிய
    உத் - உயர்வான
    ஸவ - படைத்தல் முதலிய காரியங்கள். உயர்ந்த படைத்தல் முதலிய ஐந்தொழில்களைக் குறிக்கும் குறி என்பதாம்.
  235. திருவிழா ஆரம்பிப்பதற்கு முந்திய நாள் மண் எடுப்பதும், முளை இடுவதும் எதைக் குறிக்கின்றன?
    மண்ணைப் பதம் பண்ணி வித்திடுவது படைத்தலைக் குறிக்கின்றது.
  236. கொடியேற்று எவ்வாறு நடைபெறுகிறது?
    நந்தி உருவத்தை ஒரு துணியில் எழுதி அதற்குப் பூசைகள் செய்து கயிற்றில் கட்டிக் கொடி மரத்தின் உச்சிக்கு ஏற்றுவது கொடியேற்றமாம்.
  237. கொடியேற்றத்தின் தத்துவம் யாது?
    ( அ ) சமம், விசாரம், சந்தோசம், சாதுசங்கமாகிய நான்கு குணங்களையும் கால்களாக உடையது நந்தி. அது வெள்ளை நிறம் பொருந்திய பரிசுத்த தர்ம தேவதை. அதனை ஒப்ப ஆன்மாக்கள் தூய்மை உடையவர்களாகி, அந்நான்கு குணங்களையும் உடையவர்களானால், அவர்களை இறைவன் அவர்களிருக்கும் நிலையிலிருந்து மிக உயர்த்திவிடுவான் என்பதை இது குறிக்கிறது.
    ( ஆ ) திருவிழாவின் முதல்நாளில் இக்கொடி ஏற்றுதலின் நோக்கமாவது, திருவிழாவிற்கு வரும் அடியார்களை உயர்பதம் அடையச் செய்வதற்காக இறைவன் இவ்விழா நாட்களில் சிறப்பாக எழுந்தருளி அருள் செய்யப் போகின்றான் என்பதாம்.
  238. மர வாகனத் தத்துவம் யாது?
    இதை ‘விருத்திக் கிரம சிருஷ்டி கோலம்' என்பர். மரத்தின் இலைகள், கிளைகள் முதலியன போல தத்துவங்களாகவும், எண்ணிறந்த சீவராசிகளாகவும் கடவுள் விளங்குகிறார் என்பதை இது குறிக்கின்றது. மரத்தின் வேரில் பீடமிட்டு அதில் அம்மையப்பராகக் கடவுள் விளங்குகிறார். அ•தாவது, இத்தகைய படைப்புக்கெல்லாம் வேராக இருப்பது அருள் என்ற சக்தியோடு கூடிய அறிவு என்ற சிவமே என்பதாம்.
  239. சூரியப் பிரபை, சந்திரப் பிரபைகளில் இறைவன் எழுந்தருளி வருவது எதைக் குறிக்கின்றது?
    இது “விருத்திக் கிரம ஸ்திதிக் கோலம்" உலகத்திலுள்ள உயிர்கள் பிழைத்து இருப்பதற்குக் காரணம் சூரிய வெப்பம். அவ்வெப்பம் இல்லாவிடில் புசிப்பதற்கு புல்லும் கிடைக்காது. அவ்வெப்பமே கடலில் நீரையுண்டு மேகங்கள் மூலமாய் மழையைத் தருவிக்கின்றது. இன்னும் எல்லாவகையான தொழில்களுக்கும் அது மூலசக்தியாய் விளங்குகின்றது. எனவே உலகத்தைக் காப்பாற்றுவது சூரியனது தொழில். சந்திரன் இன்பத்தை தருபவன். ஆகையால் சூரியப் பிரபையிலும், சந்திரப் பிரபையிலும் இறைவனை வைத்து வணங்குதல் காத்தல் தொழிலுக்கு அறிகுறியாகும்.
  240. நந்தியின் மேலும் பூத வாகனத்தின் மேலும் இறைவன் எழுந்தருளி வருவது எதைக் குறிக்கின்றது?
    மான், மழு, நாற்தோள், முக்கண் முதலிய அடையாளங்களையுடைய சிவனுருவப் பதவி பெற்ற விஞ்ஞான கலர் என்ற ஆன்மவர்க்கத்துள் சிறந்தவர் அதிகார நந்தி என்பவர். பூதகணங்களோ எனின், இறந்தவுடன் ஆன்மாக்களைக் கொண்டு போகும் தொழிலுடையன. இவ்விரண்டு வாகனங்களின் மேலும் இறைவன் ஏறிவருவது சங்காரத்திற்கு அறிகுறியாகும்.
  241. நாகப்பாம்பு வாகனம் எதை உணர்த்துகின்றது?
    நஞ்சு, மாணிக்கம், படமாகிய மூன்றையும் மறைத்து, வேண்டும்போது வெளிப்படுத்தும் திறமையுடையது நாகப்பாம்பு. அல்லாமலும் இது, தானும் மறைந்திருந்து வேண்டும்போது புற்றிலிருந்து வெளிவரும் தொழிலுடையது. எனவே நாகப்பாம்பு வாகனம் மறைத்தல் தொழிலாகிய ‘திரோபாவம்' என்பதற்கு அறிகுறியாகும். குண்டலி சக்தி, சுழுமுனை நாடி முதலியவற்றோடு ஒப்பிட்டும் தத்துவம் கூறுவர்.
  242. நந்தி வாகனக் காட்சி சிறந்த காட்சி ஆனதேன்?
    சிவனடியார்களுக்கு இறைவன் நந்தி வாகனாரூடராகவே காட்சி கொடுத்திருக்கிறான் என்று அறிகிறோம். நந்தி எவ்வகையான மாசும் அற்றது. சுத்த வெள்ளை நிறமுடையது. சமம் முதலிய நான்கு குணங்களைக் கால்களாக உடையது. ஆணவ மலத்தை ஒழித்து அருளொடு கூடிய அறிவைப் பணிவுடன் ஏற்று நிற்கின்றது. ஆன்மாக்கள் இங்ஙனம் ஆகும்போதுதான் இறைவன் பேரருள் சுரக்கிறான். ஆகையால் இக்காட்சி அருளல் காட்சியாயிற்று. எனவே இது சிறந்ததாம்.
  243. ஆறாம் திருவிழாவில் இறைவன் யானை மீது ஏறிவரும் காட்சியின் தத்துவம் என்ன?
    இது ‘லயக்கிரம ( ஒடுங்கும் முறை ) சிருஷ்டி கோலம்' ஆகும். மரம் படைத்தலை உணர்த்துவது போல விரிந்த பாகுபாடுகளெல்லாம் ஒடுங்கி ஒரே பிண்டமாகப் பருமனான உடம்பு கால்களையுடைய யானையைப் போல் ஒடுங்கிவிடுவது லயக்கிரமத்தில் கடைசிப் படியாகவுள்ள படைத்தலைக் குறிக்கிறது.
  244. கயிலாய மலை வாகனம் எதை உணர்த்துகிறது?
    இராவணன் ஆணவ மலம் நிறைந்த உயிர். இமயமலை பிரபஞ்சம், இராவணன் இமயமலையைத் தூக்க முயல்வது பிரபஞ்சத்தை அறிந்து இன்புற முயல்வதற்கு உவமையாகின்றது. இராவணன் அவ்வாறு தூக்கமுடியாமல் துன்பம் அடைந்தான். அவ்வாறே ஆணவமலம் நிறைந்த உயிரும் இறுதியில் ஆணவத்தை இழந்து, கடவுளைத் தியானித்து, வரம் பெற்று, இறைவன் திருவடி சார்ந்து இன்புறுகிறது. இதனையே இவ்வாகனம் உணரச் செய்கிறது.
  245. நடராசர் உற்சவத்தில் அடங்கிய தத்துவங்கள் எவை?
    நடராசர் திருவுருவத்தில் ஐந்தொழிலும் உள்ளனவென்பது. ‘தோற்றம் துடியதனில்' என்ற பாடல் மூலம் விளங்கும். அ•தாவது, படைத்தல் உடுக்கையிலும், காத்தல் அபயக்கரத்திலும், அழித்தல் எரிதாங்கிய கையிலும், மறைத்தல் ஊன்றிய காலிலும், அருளல் தூக்கிய காலிலும் குறியீடாக உள்ளனவென்று சிவஞான சாத்திரங்கள் கூறுகின்றன. இங்ஙனமே நடராசர் உற்சவத்திலும் ஐந்தொழில்கள் உள்ளன. சபையை விட்டுப் புறப்படுதல் படைத்தல், அபிடேகம் காத்தல், சாந்தணிதலும் அலங்கார தீபாராதனையும் அழித்தல், வெள்ளைச் சாத்துபடி மறைத்தல், வீதிவலம் வந்து மட்டையடி தரிசனம் அருளல்.
  246. தேரின் தத்துவங்கள் யாவை?
    தேரின் அமைப்பு பிண்டத்திற்குச் சமானம். விசுவ விராட் சொரூபமே எட்டு அடுக்குகளாகும். உச்சியிலிருக்கும் சோடசாந்தம், அதற்கடுத்த கீழடுக்கு துவாதசாந்தம், அதற்கடுத்தது மஸ்தக ஆதி ஸ்தானம், அதற்கடுத்தது மஸ்தக மத்திய ஸ்தானம், அதற்கடுத்தது மஸ்தக அந்தஸ்தானம், அதற்கடுத்தது புருவ மத்தியஸ்தானம், நடுவில் தாங்கும் குத்துக் கால்கள் தத்துவக் கால்கள், முன் மூன்று துறைகள் கண்கள், பின்னவை சிகையும் இடவலக் காதுகளுமாகும். இறைவன் எழுந்தருளியிருக்கும் கேடய பீடம் முப்பாழ், குதிரைகள் சூரிய சந்திர கலைகள், சாரதி அக்னிகலை, இவை நாசியாகும். அடுத்த அடுக்கு கண்டஸ்தானம், அதையடுத்த அடுக்கு இருதய ஸ்தானம், அதையடுத்த அடுக்கு நாபி, அதற்கடுத்த அடுக்கு கண்டலிஸ்தானம், பத்துச் சக்கரங்களும் தச வாயுக்கள், இறைவன் இதற்குக் கர்த்தா தான் ஒருவனே என்றுணர்த்தி இவ்வாறமைந்த பிண்ட தத்துவ சரீரமாகிய இரதத்தில் தசவாயுக்களாகிய சக்கரங்களை நிறுத்தி, அசைவற்ற மனத்தை உந்தி, குண்டலியிலிருந்து நாபிக்கும், அதிலிருந்து கண்டத்திற்கும், அதிலிருந்து வாய்க்கும் ஏற்றி லயப்படுத்தி, முறையே இரதக் குதிரையாம் நாசிக்கும் அங்கிருந்து கண் வழியாகவும், நடுவழியாகவும், மேல்நோக்கி ஆறாம் அடுக்காகிய புருவ மத்திக்கும் ஏற்றி லயப்பட்டு, சும்மாவிருந்தபடி இருக்கும் நித்திய சுகியாய் இருந்திடல் வேண்டும் என்ற லயக்கிரமத்தைக் காட்டுகிறது. மேலும் தேர் திரிபுராதிகளைச் சிவன் எரித்தது ஆன்ம கோடிகளைக் காப்பாற்றிய காத்தல் தொழிலுக்கும் அறிகுறியாகிறது.
  247. வாகனாதிகளின் அறிகுறி என்ன?
    முதல் நாள் விருக்ஷத்தடியில் சேவை. மாயை வித்துப் போன்று விருக்ஷத்திற்கும் கிளைகளுக்கும் இலைகளுக்கும் ஒத்த சர்வ லோகங்களுக்கும் காரண பூதமாயிருந்து சர்வ சாக்ஷியாய் இருப்பதை யுணர்த்தும். இதுசிருஷ்டியென அறிக.
    2-ம் நாள். சூரிய பிரபை சந்திரப் பிரபையில் எழுந்தருளி தரிசனந்தருவது, காண்பானாகிய ஆன்மாவுக்குக் காட்டுவான்தான் என்பதை யுணர்த்த காணுங்கண்ணுக்குக் கதிரொளியாய் நின்றதை உணர்த்தும். இது திதியென அறிக.
    3-ம் நாள். பூதவாகனம்: ஆன்மாக்களுக்குக் கன்மானு கூலமான மரணாவஸ்தை விதிக்கின்றோமென சம்ஹார கோலத்தைக் காட்டுகின்றது. அன்றி, பஞ்ச பூதங்களினின்றும் விளங்குவோன் தானே என்பதையும் காட்டும்.
    4-ம் நாள். கைலாசவாகனம் : ஆன்மாக்களின் ஆணவத்தைப் போக்கி நிரதிசயானந்த ஜோதிமயபர ஆகாசமாகிய பரசிவலோகம் எனப்படும் கைலாசத்தைக் கொடுத்தருளும் பரமபதி தானே என்பதைக் காட்டும்.
    5-ம் நாள். ரிஷபவாகம் : பசுபதி தான் என்பதையும் தர்ம தேவதையை இடமாகக் கொண்டவன் என்பதையும் உணர்த்தும். அன்றி, சதுஷ்பாதம்போன்றது அந்தக்கரணம். ரிஷபம் போன்றது ஆன்மா. இதன்மேல் பதியாகிய ஈசுவரன் விளங்குகின்றான் என்று அனுக்கிரகக் கோலத்தை காட்டும்.
    6-ம் நாள். யானைவாகம் : தும்பிக்கைபோன்ற சுழிமுனை நாடியின் வழியாய்த் தன்னைத் தரிசிக்கவேண்டும் என்பதைக் காட்டும். அன்றி, பிரணவதாரகன் தான் என்பதையுங் காட்டும்.
    7-ம் நாள். நந்திவாகனம் : ஆசாரியனை அதிட்டித்து நின்று ஆன்மாக்களைப் பரிபக்குவப் படுத்துவார் என்பதைக் காட்டும்.
    8-ம் நாள். குதிரை வாகனம் : வாசிநாடியில் சுவாசாகார அஸ்வசாரியைக் காட்டும். சுவாசம் மேலும் கீழும் செல்வது வாசியாகும்.
    9-ம் நாள். இரதம் விஸ்வவிராட் சொரூபமே எட்டடுக்குத் தத்துவமாய் உச்சிக்கலசம் சோடசாந்தமெனவும், அதனடுத்த கீழடுக்கு துவாதசாந்தமெனவும், அதனடுத்தது மஸ்தக ஆதிஸ்தானமென்றும், அதனடுத்தது மஸ்தகமத்தியஸ்தானமென்றும், அதனடுத்தது மஸ்தக அந்தஸ்தான மென்றும், ஐந்தாமடுக்கு லலாட மத்தியஸ்தான மென்றும், நடுவேதாங்கும் குத்துக் கால்கள் தத்துவக்கால்க ளென்றும், முன்மூன்று துறைகள் மூன்று கண்களென்றும், பின்னவை சிகையென்றும், இடம் வலம் காதுகளென்றும், ஈஸ்வரனெழுந்தருளியிருக்கும் கேடயபீடம் முப்பாழென்றும், சூரிய சந்திர கலைகளே வாசிகளென்றும், சாரதி அக்கினிக்கலை யென்றும் (இவை நாசியென்றும் ) எட்டாமடுக்குக் கண்டஸ்தானமென்றும் அதனடுத்தது இருதயஸ்தானமென்றும் அதனடுத்தது நாபிஸ்தானமென்றும், அதனடுத்தது குண்டலிஸ்தானமென்றும் தசசக்கரங்களும் தசவாயுவென்றும் காட்டி, கர்த்தா தானொருவனே யென்றுணர்த்தி இது அண்டதத்துவ சொரூபமாய், பிண்டதத்துவசரீரமாயும் விளங்கும் எனவும் உணர்த்தி, தசவாயுச்சகக்கரத்தை நிறுத்த மனது அசைவற்று அச்சுப்பட்டடை உந்திகுண்டலியிலிருந்து கீழப்பட்டடை நாபிக்கு ஏற்றி லயப்படுத்தி, அங்கிருந்து அதற்கடுத்த பட்டடையாகிய இருதயத்துக்கு ஏற்றி லயப்படுத்தி, அங்கிருந்து அதற்கடுத்த பட்டடையாகிய கண்டஸ்தானத்துக் கேற்றி லயப்படுத்தி, பின்னடுத்த பட்டடையாகிய வாய்க்கு ஏற்றி லயப்படுத்தி, பின்முறையே இரதக்குதிரையாம் நாசிக்கும் அங்கிருந்து இரண்டு கண் வழியாயும் நடுவழியாயும் மேல் நோக்கிஆறாம் அடுக்காகிய புருவமத்தியத்திற்கேற்றி லலாடம் முதல் துவாதசந்தம்வரை ஏற்றி லயப்படுத்தி, சும்மாயிருந்த படியிருக்கும் நித்தியசுகியாயிருந்திடல் வேண்டுமென்று லயக்கிரம கோலத்தைக் காட்டுகின்றது. அன்றிப் புராணவாயிலாகத் திரிபுரசம்ஹார கோலத்தையுங் காட்டும்.
    10-ம் நாள். பிக்ஷாடனமூர்த்தி : ஆவரணம் ஏழையு மொழித்துவிட திரோபவ கோலத்தைக் காட்டும்.
    11-ம் நாள். நடராஜகோலம் : அனுக்கிரகத்தைக் காட்டும். இவ்வுத்ஸவங்கள் தத்வார்த்தக்காட்சிகளாகியும் பஞ்சகிருத்திய ரகசிய தரிசனங்களாகவும் விளங்குமென்பது காமிகாதி ஆகமங்களாலும் சிவத்விஜர்களாலும் அறிந்திடுக.
  248. உத்ஸவமென்பதன் தாற்பரியமென்ன?
    திருஷ்டிமார்க்கத்தைக் குறிப்பதென்பது பொருள். இது பஞ்சகிருத்தியம் நடைபெறுவதை சூசிப்பிக்கும்.
  249. உத்ஸவமெத்தனை விதம்?
    ஆறுவிதம்: அவை பைத்ருகம், சௌக்கியம், ஸ்ரீகரம், பார்த்திவம், சாத்வீகம், சைவம் என அறிக.
  250. அவற்றினை முறையே விளக்குக?
    முறையே பன்னிரண்டு, ஒன்பது, ஏழு, ஐந்து, மூன்று நாட்களும் ஒரு நாளும் கொண்டாடுந் திருவிழாக்கள்.
  251. இன்னும் வேறுவிதங்க ளுளவோ?
    பதினொனறும், பதின்மூன்றும், பதினைந்தும், பதினேழும், இருபத்தொன்றும் மேற்பட்டதுமான நாட்கள் உத்ஸவம் செய்வதாம். அவை முறையே புக்தி, கௌமாரம், சாயுத்ரம், சாந்தரம், சௌரம், சாவரம் எனப் பெயர்பெறும்.
  252. இவ்வுத்ஸவங்களுக்குப் பலன் யாது?
    ஒருநாள் - ராஜவிர்த்தி, மூன்று - சிவத்தைச்சந்தோஷிப்பித்தல், ஐந்து - போகம், ஏழு - சிவப்பிரியம், ஒன்பது - சாந்திகம், பதினொன்று - புஷ்டி, பன்னிரண்டு - முத்தி, பதின்மூன்று - சர்வசித்தி, பதினைந்து - ஜனங்களுக்குச் சுகம், பதினேழு - புண்ணியப்பிரதம், இருபத்தொன்று - லோகவிரக்ஷை.
  253. உத்ஸவங்கள் செய்யாவிடின் குறைவென்ன?
    கிராமத்துக்கும் ஜனங்களுக்கும் க்ஷேங்கிடையாது.
  254. அயனாதி புண்ணியகாலங்களில் நடத்தும் உத்ஸவங்களின் பலனென்ன?
    அயனோத்ஸவம் - புண்ணியபலம், மாதோத்ஸவம் - இராஜதோஷநிவர்த்தி, அமாவாசை - தாரபத்திராதி இஷ்டகாமியசித்தி, பௌர்ணமி - சகலபாப நிவாரணம், கிர்த்திகை - சௌக்கியம், திருவாதிரை - சகலசம்பத்து, பூசம் - புஷ்டி, மகம் - சுஜனசிரேஷ்டத்துவம், பூரம்- சௌபாக்கியம், உத்திரம் - சீலம், சித்திரை - ரூபலாவண்யமனைவி, விசாகம் - விசேஷகாமபலன், மூலம் - ஆரோக்கியம், பரணி - ஆயுள்விருத்தி, திருவோணம் - சுகபோகங்கள் பலனாம். இவ்வாறு ஒவ்வொரு நக்ஷத்திரங்களுக்குள்ள பலனைக் காமிகாதி ஆகமங்களிற் காண்க.
  255. மலை, வனம், ஆறு, குளமுதலிய இடங்களுக்குச் செல்லும் உத்ஸவங்களின் பலனென்ன?
    அவ்வவ்விடங்களிலுள்ள நால்வகையோனி எழுவகைத் தோற்ற பேதங்களுக்குப் பலப்பிராப்தியுண்டாகும்.
  256. வாரோத்ஸவ பலன்களென்ன?
    ஞாயிறு - ருத்ரபதவி, திங்கள் - சௌக்கியம், செவ்வாய் - கிராமலாபம், புதன் - சர்வகாமியசித்தி, வியாழன் - சாஸ்திராதி வித்தை, வெள்ளி - விசேஷ செல்வம், சனி - அபமிர்த்தியுநாசம்.
  257. உத்ஸவ காலங்களிலே ஆலயங்களில் நடக்கும் கிரியைக ளெவை?
    விருஷயாகம், துவஜாரோகணம், ப்ரகத்தாளம், அங்குரம், யாகசாலை, அஸ்த்ரயாகம், பலிதானம், யானக்கிரமம், பரிவேஷம், நீராஜனம், கௌதுகம், தீர்த்தசங்கிரகணம், சூர்ணோத்ஸவம், தீர்த்தம், அவரோகணம், ஸ்நபனம், விவாகம், பக்தோத்ஸவம் என்னும் அஷ்டாதசக் கிரியையாம்.
  258. இவை பஞ்சகிருத்தியங்களை யெவ்வாறுணர்த்தும்?
    சிருஷ்டி அங்குரார்ப்பணம் விவாகம், துவஜாரோகணம், ரக்ஷாபந்தன மிவைகளாலும், திதி வாகனாதி யுத்ஸவம், ஓமம் பலியிவற்றாலும், சம்ஹாரம் சூர்ணோத்ஸவம், ரதாரோகணம், கிருஷ்ணகந்தோத்ஸவமிவற்றாலும் திரோபவம் - மௌனவுத்ஸவத்தாலும், அனுக்கிரகம் - சக்தியூடலாலும், உணர்த்தப்படுவதறிக. அன்றி சிருஷ்டி - அபிஷேகத்தாலும் திதி கௌதக பந்தனத்தாலும், சம்ஹாரம் - அகருதூபத்தாலும், திரோபவம் - கற்பூரதீபத்தாலும், அனுக்கிரகம் - கற்பூர அடுக்குத் தீபத்தாலும் சூசிப்பிக்கப்படும்.
  259. மகோத்ஸவ தினங்கள் பத்தினாலும் உணர்த்தப்படுவது யாது?
    முதல்நாள் - தூலநீக்கத்தையும், இரண்டாம்நாள் - ஸ்தூல சூக்குமநீக்கத்தையும், மூன்றாம்நாள் - மூவினை முக்குணம் முக்குற்றம் முப்பற்று முப்பிறப்பு நீக்கத்தையும், நான்காம்நாள் நாற்கரணம் நால்வகைத்தோற்ற நீக்கத்தையும், ஐந்தாம்நாள் ஐம்பொறி ஐந்தவத்தை ஐம்மல நீக்கத்தையும், ஆறாம்நாள் காம, குரோத, லோப, மோக, மத, மாச்சரிய மென்னும் ஆறுகுற்ற நீக்கத்தையும், ஏழாம்நாள் எழுவகைப்பிறப்பு நீக்கத்தையும், எட்டாம்நாள் எண்குண விளக்கத்தையும், ஒன்பதாம் நாள் நவபேத விளக்கத்தையும், பத்தாம்நாள் பரானந்தக் கடலிற் படிவதையும் உணர்த்தும்.
  260. உத்ஸவமூர்த்திக்குச் செய்யுந் திருவிழா சிவலிங்க மூர்த்திக்கு எவ்வாறு சேரும்?
    யோகம், போகம், வீரம் எனச்சக்திகள் மூன்று; அவற்றில் லிங்கபீடம் யோகசக்தி, விஸ்வயோநி போகசக்தி, உத்ஸவமூர்த்தி வீரசக்தி. ஆதலால் வீரசக்திக்கு உத்ஸவம் கொண்டாடுதலறிக.
  261. சிவாலயங்களில் கொண்டாடப்படும் உத்ஸவங்களெவை?
    நித்தியோத்ஸவம், வாரோத்ஸவம், பக்ஷோத்ஸவம், மாதோத்ஸவம், அயனோத்ஸவம், வருஷோத்ஸவம் என்பவைகளாம்.
  262. நித்தியோத்ஸவ மென்றால் யாது?
    தினந்தோறும் உமாசகிதராய்ச் சிவபெருமானை எழுந்தருளச் செய்வதாம்.
  263. வாரோத்ஸவ மென்றால் யாது?
    சுக்கிரவாரந்தோறும் உமையை எழுந்தருளச் செய்வதாம்.
  264. பக்ஷோத்ஸவமென்றால் யாது?
    பௌர்ணமி, அமாவாசை, பிரதோஷ தினங்களில் கொண்டாடப்படும் உத்ஸவம்.
  265. மாதோத்ஸவ மென்றால் யாது?
    மாதப்பிரவேசத்தன்று கொண்டாடப்படும் உத்ஸவமாம்.
  266. அயனோத்ஸவமென்றால் யாது?
    உத்தராயண தக்ஷிணாயன புண்ணிய காலங்களில கொண்டாடப்படும் உத்ஸவமாம்.
  267. வருஷோத்ஸவ மென்றால் யாவை?
    பிரமோத்ஸவம், தெப்போத்ஸவம், சைத்ரோத்ஸவம், வசந்தோத்ஸவம் முதலிய உத்ஸவங்க ளொவ்வொன்று பப்பத்துநாட்களில் கொண்டாடப்படும் உத்ஸவங்களாம்.
  268. ஆலயங்களிலே சிவலிங்கப்பெருமானுக்கெததனை காலங்களில் அபிஷேகாதி வைபவங்கள் நடத்தப்படுகின்றது?
    திருவனந்தல், காலைசந்தி, உச்சிக்காலம், சாயரக்ஷை, இராக்காலம், அர்த்தசாமம் ஆகிய ஆறுகாலங்களிலும், திருவனந்தல் சாயரக்ஷை யொழிந்து நாலுகாலங்களிலும் அவற்றிற்குக் குறைந்த காலங்களிலும் வரவுக்கேற்ப அபிஷேகாதி வைபவங்கள் நடத்தப்படுகின்றன.
  269. சிதம்பரத்தில் ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு வருஷத்தில் ஆறு அபிஷேகங்கள் நடத்துவதற்குக் காரணமென்ன?
    மனிதர்களுக் கொருவருஷங்கொண்டது தேவர்களுக் கொருநாளாகவே, ஸ்ரீ சிற்சபேசன் தேவர்கள் தேவனென்பது விளங்க பிராதஹ்காலத்துக்குச் சமமாகிய மாழ்கழி மாதத்துச் சிவரூபமாகிய திருவாதிரையன்று அபிஷேகமும் தரிசனங்கொடுத்தலும், காலைசந்திக்குச் சமமாக மாசிமாதம் பூர்வ பக்ஷசதுர்த்தசியிலும், உச்சிக்காலத்துக்குச் சமமாக சித்திரை திருவோணத்திலும், சாயரக்ஷை காலத்துக்குச் சமமாக ஆனிமாதத்தில் உத்திரத்திலும், இராக்காலத்துக்குச் சமமாக ஆவணி மாதத்தில் பூர்வபக்ஷ சதுர்த்தசியிலும், அர்த்தசாமத்துக்குச் சமமாக புரட்டாசிமாதத்தில் பூர்வபக்ஷ சதுர்த்தசியிலும், அபிஷேகமும் நடத்தலறிக.
  270. அவ்வவிஷேகங்கள் நக்ஷத்திரம் மூன்றிலும் சிறந்ததற்குக் காரணமென்ன?
    திருவாதிரை சிவநக்ஷத்திர மாதலாலுந் திருவோணம் அச்சுத நக்ஷத்திரமாதலாலும் உத்திரம் சூரிய நக்ஷத்திரமாதலாலும் சிறந்தமை காண்க.


    ஸ்தலவியல்

  271. புண்ணிய தலங்கள் என்பன எவை?
    திருஞானசம்பந்த சுவாமிகள், அப்பர் சுவாமிகள், சுந்தரமூர்த்தி சுவாமிகள் என்னும் சமயாசாரியர்கள் கட்டளை இட்டருளிய திருப்பதிகம் பெற்று விளங்கும் ஸ்ரீ கைலாச முதலிய ஸ்தலங்களுமாம்.
  272. மேற்கூறிய ஸ்தலங்களுக்கு இப்போது பதிகங்கள் இருக்கின்றனவா?
    274 ஸ்தலங்களுக்கு இருக்கின்றன. இந்த ஸ்தலங்கள் சோழநாட்டில் 190; பாண்டிய நாட்டில் 14; மலை நாட்டில் 1; ஈழநாட்டில் 2; கொங்குநாட்டில் 7; நடுநாட்டில் 22; தொண்டை நாட்டில் 32; துளுவநாட்டில் 1; வடக்கில் 5.
  273. ஆலயங்க ளிலிருக்கும் மூர்த்திகளிடமாய்ப் பரமசிவன் ஏதாவது மகத்துவம் விளக்கியிருக்கின்றாரா?
    விளக்கியிருக்கின்றார். புண்ணிய ஸ்தலங்களிலிருக்கும் ஆலயங்களிலெல்லாம் மகத்துவம் காண்பித்திருக்கிறார். ஆனால் சில புண்ணிய ஸ்தலங்களில் நடந்திருக்கிற மகத்துவமாத்திரம் பிரசித்தமாய் வழங்கப்பட்டிருக்கிறது.
  274. எந்த ஸ்தலங்களில்?
    திருக்கடவூரிலே மார்க்கண்டேயருக்காகச் சிவலிங்கத்தினிடமாய்த் தோன்றி யமனையுதைத்து அவருக் கென்றும் பதினாறு வயதாக அருளிச்செய்தார். காளத்தியில் கண்ணப்ப சுவாமிகளுக்குச் சிவலிங்கத்தினிடமாகத் தரிசனங் கொடுத்து மோக்ஷ மருளினார். திருவானைக்காவில் ஒரு சிலந்திப்பூச்சிக்குச் சிவலிங்கத்தினின்றுந் தரிசனமாகி ஒரு ராஜனாகப் பிறக்கும்படிக் கடாக்ஷிக்க, அப்படியே சோழ வம்சத்திற் பிறந்த கோச்செங்கட்சோழ நாயனாரென்பர் அநேகம் திருப்பணிகள் செய்து அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரானார். காஞ்சீரத்தில் தம்மைக் கல்லாலெறிந்த சாக்கிய நாயனாருக்குச் சிவலிங்கத்தி னிடமாய்த் தரிசனமாகி மோக்ஷங்கொடுத்தருளினார். திருவிடைமருதூரில் வரகுண பாண்டியருக்குச் சிவலிங்கத்தினிடமாகத் தரிசனமாகி அனுக்கிரகஞ் செய்தருளினார். திருவிரிஞ்சிபுரத்தில் ஒரு சிறிய பிராமணப்பிள்ளை தம்மைப் பூசிக்கும்படி திருமுடி சாய்த்தருளினார். திருவாலவாயனென்னும் மதுரையில் அநேகருக்குத் தரிசனமாகி அனுக்கிரகஞ் செய்திருக்கின்றார். இப்படிப் பூமியிலுள்ள புண்ணியதலங்களில் அன்பர்களை இரக்ஷிக்கும்படி அவர் காண்பித்திருக்கிற மகிமையை யெல்லாம் சொல்ல வேண்டுமானால் அளவுபடாது.
  275. பரமசிவன் அடியார்களுடைய வினையை நீக்கி இரக்ஷிக்கும் பொருட்டு, மனிதவுருவமாகி ஏதாவது மகத்வம் விளங்கச்செய்தாரா?
    அநேகஞ் செய்திருக்கிறார். மதுரையில் அவர் மனிதவுருவமாய் எல்லாம்வல்ல சித்தரென்னும் பெயருடையவராய் வந்தருளிக் கிழவர்களைக் குமரர்களாகச்செய்தும், மலடிகளைப் பிள்ளைபெறச் செய்தும், கூன், குருடு, செவிடு, ஊமை, நீக்கியும், நொண்டிகளுக்குக் கால்கூடச்செய்தும், கல்லானை கரும்பு தின்னச் செய்தும் இன்னுமநேக மகத்துவங்கள் விளங்கச் செய்தருளினார்.
  276. இன்னுமென்ன மகத்துவங்கள் விளங்கச் செய்தார்?
    திருவண்ணாமலையில் சந்ததியில்லாமல் நெடுநாளாக மனவருத்தப்படுத் தமக்கு அன்போடு பணிசெய்திருந்த வல்லாளராஜனுக்குக் குழந்தையாகிப் பிள்ளைக்கலி தீர்த்தருளினார். திருவிரிஞசிபுரத்தில் அம்மார்க்கமாகப் போன வைசியருக்கு வழித்துணையாய்ச சென்று காப்பாற்றி மார்க்கசகாயரென்னுந் திருநாமம் பெற்றருளினார். சிதம்பரத்தில் திருநீலகண்ட நாயனாரிடத்துக்கு மனிதவுருவமாக எழுந்தருளிவந்து அவரும் அவருடைய பத்தினியாரும் கிழத்தன்மை நீங்கி இளமை யடையும்படிக் கிருபை செய்தருளினார். சிறுத்தொண்டநாயனாரிடத்தில் வயிரவ சங்கம ரூபமாயெழுந்தருளி அவருடைய பிள்ளையைக் கறிசமைத்திடச் சொல்லி மறுபடியுமந்தப் பிள்ளையைப் பிழைக்கும்படிச் செய்து அவர்களுக்கு மோக்ஷமருளினார்.
  277. இத்தகைய பெருங்கருணையுள்ள பெருமானை வேதாகம விதிப்படி அன்புடன் தொழுது துதித்துப் பேறு பெற்ற அடியார்களுண்டோ?
    அநேகர் இருக்கிறார்கள். அவர்கள் அறுபத்துமூன்று நாயன்மார்களும் மாணிக்கவாசக சுவாமிகள் முதலானவர்களுமாம்.
  278. அவர்கள் திருப்பெயர்களைக் கூறும் தேவாரப் பதிகத்தை ஓதுக?
    ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகளருளிய
    திருத்தொண்டத்தொகை
    
    பண் - கொல்லிக்கௌவாணம்
    
    திருச்சிற்றம்பலம்
    
    தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
    திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்
    இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
    இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்
    வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்
    விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டர்க் கடியேன்
    அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்
    ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.    1
    
    இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தர்க் கடியேன்
    ஏனாதி நாதன்றன் அடியார்க்கு மடியேன்
    கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்க் கடியேன்
    கடவூரிற் கலயன்ற னடியார்க்கும் அடியேன்
    மலைமலிந்த தோள்வள்ளல் மானக்கஞ் சாறன்
    எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கு மடியேன்
    அலைமலிந்த புனல்மங்கை ஆனாயர்க் கடியேன்
    ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.    2
    
    *மும்மையா லுலகாண்ட மூர்த்திக்கு மடியேன்
    முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கு மடியேன்
    செம்மையே திருநாளைப் போவார்க்கு மடியேன்
    திருக்குறிப்புத் தொண்டர்தம் மடியார்க்கு மடியேன்
    மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க
    வெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினா லெறிந்த
    அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக் கடியேன்
    ஆரூரன் ஆரூரி லம்மானுக் காளே.    3
    (* விபூதி, ருத்திராக்ஷம், சடைமுடி. )
    
    திருன்ற செம்மையே செம்மையாக் கொண்ட
    திருநாவுக் கரையன்ற னடியார்க்கு மடியேன்
    பெருநம்பி குலச்சிறைதன் னடியார்க்கு மடியேன்
    பெருமிழலைக் குறும்பர்க்கும் பேயார்க்கு மடியேன்
    ஒருநம்பி அப்பூதி யடியார்க்கு மடியேன்
    ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கர்க் கடியேன்
    அருநம்பி நமிநந்தி யடியார்க்கு மடியேன்
    ஆரூரின் ஆரூரி லம்மானுக் காளே.    4
    
    வம்பறா வரிவண்டு மணம்நாற மலரும்
    மதுமலர்நற் கொன்றையா னடியலாற் பேணா
    எம்பிரான் சம்பந்த னடியார்க்கு மடியேன்
    ஏயர்கோன் கலிக்காம னடியார்க்கு மடியேன்
    நம்பிரான் திருமூல னடியார்க்கு யடியேன்
    நாட்டம்மிகு தண்டிக்கும் மூர்க்கர்க்கு மடியேன்
    அம்பரான் சோமாசி மாறனுக்கு மடியேன்
    ஆரூரன் ஆரூரி லம்மானுக் காளே.    5
    
    வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே
    மறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கு மடியேன்
    சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கு மடியேன்
    செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன்
    கார்கொண்ட கொடைக் கழறிற் றறிவார்க்கு மடியேன்
    கடற்காழிக் கணநாத னடியார்க்கு மடியேன்
    ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோ னடியேன்
    ஆரூரன் ஆரூரி லம்மானுக் காளே.    6
    
    பொய்யடிமை யில்லாத புலவர்க்கு மடியேன்
    பொழிற்கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழர்க் கடியேன்
    மெய்யடியான் நரசிங்க முனையரையர்க் கடியேன்
    விரிதிரைசூழ் கடல்நாகை அதிபத்தர்க் கடியேன்
    கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன்
    கழற்சத்தி வரிஞ்சையர்கோ னடியார்க்கு மடியேன்
    ஐயடிகள் காடவர்கோ னடியார்க்கு மடியேன்
    ஆரூரன் ஆரூரி லம்மானுக் காளே.    7
    
    கறைக்கண்டன் கழலடியே காப்புக்கொண் டிருந்த
    கணம்புல்ல நம்பிக்குங் காரிக்கு மடியேன்
    நிறைக்கொண்ட சிந்தையால் நெல்வேலி வென்ற
    நின்றசீர் நெடுமாற னடியார்க்கு மடியேன்
    துறைக்கொண்ட செம்பவளம் இருளகற்றுஞ் சோதித்
    தொன்மயிலை வாயிலா னடியார்க்கு மடியேன்
    அறைக்கொண்ட வேல்நம்பி முனையடுவார்க் கடியேன்
    ஆரூரன் ஆரூரி லம்மானுக் காளே.    8
    
    கடல்சூழ்ந்த உலகெலாங் காக்கின்ற பெருமான்
    காடவர்கோன் கழற்சிங்க னடியார்க்கு மடியேன்
    மடல்சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்கும் தஞ்சை
    மன்னவனாஞ் செருத்துணைத னடியார்க்கு மடியேன்
    புடைசூழ்ந்த புலியதள்மேல் அரவாட ஆடிப்
    பொன்னடிக்கே மனம்வைத்த புகழ்த்துணைக்கு மடியேன்
    அடல்சூழ்ந்த வேல்நம்பி கோட்புலிக்கு மடியேன்
    ஆரூரன் ஆரூரி லம்மானுக் காளே.    9
    
    பத்தராய்ப் பணிவார்க ளெல்லார்க்கு மடியேன்
    பரமனையே பாடுவா ரடியார்க்கு மடியேன்
    சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கு மடியேன்
    திருவாரூர்ப் பிறந்தார்க ளெல்லார்க்கு மடியேன்
    முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன்
    முழுநீறு பூசிய முனிவர்க்கு மடியேன்
    அப்பாலும் அடிச்சார்ந்த அடியார்க்கு மடியேன்
    ஆரூரன் ஆரூரி லம்மானுக் காளே.    10
    
    மன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல்
    வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கு மடியேன்
    தென்னவனாய் உலகாண்ட செங்கணார்க் கடியேன்
    திருநீல கண்டத்துப் பாணணார்க் கடியேன்
    என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன்
    இசைஞானி காதலன் திருநாவ லூர்க்கோன்
    அன்னவனாம் ஆரூர னடிமைகேட் டுவப்பார்
    ஆரூரி லம்மானுக் கன்பரா வாரே.    11
    
    திருச்சிற்றம்பலம்.
    
  279. பரமசிவம் அநேக ஸ்தலங்களில் திருக்கோயில் கொண்டு வீற்றிருக்கிறதற்குக் காரணமென்ன?
    தேசங்கள் பலவாயிருப்பதனால் அவ்வாறு திருக்கோயில் கொண்டிராவிட்டால் மனிதர்களுக்குச் சிவதரிசனஞ் சித்திப்பதருமை. பார்வதிதேவியார் பரமசிவத்தை நோக்கிப் பலவிடங்களில் திருக்கோயில் கொண்டு விற்றிருப்ப தென்னவென்று வினவினகாலத்துத் தேசங்கள் தோறும் பரவியிருக்கும் புண்ணியான்மாக்கள் அங்கங்குத் தரிசிக்கும் பொருட்டாக வீற்றிருப்பதாகப் பரமசிவம் கட்டளையிட்டருளினார்.
  280. சிவபுண்ணியமுண்டாவதற் கேதுவாகிய சிவஸ்தலங்களின்னவென்று எவ்வாறு தெரியும்?
    சைவபுராணம் பத்துக்குட்பட்ட ஸ்தலபுராணங்களினாலும் தேவாரப்பதிகங்களினாலும் தெரியும்.
  281. ஸ்தலமென்பது தெய்வத்தை வணங்குவதற்கான ஓரிடந்தானே, சிவஸ்தலங்களின் விசேஷமென்னை?
    இவை ஏனைய மதஸ்தர்கள் தங்களிஷ்டப்படிக் கட்டுகின்ற கோயில்போலன்றாம். ஒவ்வொரு ஸ்தலமும் மானதபூஜையின் உண்மையை விளக்கிச் சிவஞானத்தையுண்டாக்குங் கருவியாயிருத்தலையறிக. அவ்வாறே உத்ஸவங்களும் பஞ்சகிருத்தியங்களை யுணர்த்துவனவாம்.
  282. அற்றேல் சிவாலயங்களில் ஸ்தூலலிங்காதி வைபவங்கள் எதற்கு அறிகுறி?
    குண்டலிஸ்தானம் ஸ்தூலலிங்க கோபுரவாயில் (மூலாதாரம்), உந்திஸ்தானம் பலிபீடம் (சுவாதிஷ்டானம்), ஹிருதயஸ்தானம் துவஜஸ்தம்பம் (மணிபூரகம்), கண்டஸ்தானம் நந்திபீடம் (அநாகதம்), வாக்குஸ்தானம் சூக்ஷ்மலிங்கம் உட்கோபுரவாயில் (விசுத்தி) நாசிஸ்தானம் துவாரபாலகர், புருவ மத்தியஸ்தானம் மகாகாரணலிங்க அந்த்ராள கோபுரவாயில் (ஆக்ஞை) இடதுகண் ஸ்தானம் சுப்பிரமணியர் சந்நிதி, வலது கண் ஸ்தானம் கணபதி சந்நிதி, இடதுகானம் சண்டேசுரர் சந்நிதி, வலதுகாது ஸ்தானம் தக்ஷிணாமூர்த்தி சந்நிதி, மஸ்தகமத்திய ஸ்தானம் நடேசர் சந்நிதி, இடதுபாக மஸ்தக மத்திய ஸ்தானம் பார்வதி சந்நிதி, பிர்மரந்திரம் சிவலிங்க மூலஸ்தானம் என அறிக. பலிபீடம் வரையில் பிருதிவி மண்டலம், துவஜஸதம்பமும் நந்தியும் அப்புமண்டலம், துவாரபாலகர்வரையில் வாயுமண்டலம், கணபதிவரையில் அக்கினி மண்டலம், மேல் ஆகாயமண்டலமென அறிக. அன்றி, சிவலிங்கம் - பதி, இடபம் - பசு, பலிபீடம் - பாசம் எனவுமறிக.
  283. சிவஸ்தலங்களுள் விசேஷத் தலங்கள் யாவை?
    நடனத்தலங்கள், சப்த தியாகஸ்தலங்கள், ஆறாதாரஸ்தலங்கள், பிண்டஸ்தலங்கள், பஞ்சஸ்தலங்கள், நாடிஸ்தலங்கள் எனப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை விசேஷமாம்.
  284. நடன ஸ்தலங்கள் யாவை?
    “ஓங்குலகந் துயர்தீர நடம்புரியு முயர்தான முரைப்பங்கேள் நீ 
    பாங்குதருங் கயிலாயஞ் சிவலோகம் பனிவரைநூல் பரவுஞ்சொர்க்க
    தீங்ககல்பத் திரபீடம் நேபாளம் கங்கைநதி சிறந்த காசி
    கோங்கலருந் தடங்காம ரூபமொடு நைமிசமேகுருவின் தானம்.
    
    மந்தரமால் வரைகமலா நந்தவரை யுங்ககுல வரையே மாசு
    சிந்துசுராட் டிரங்கதலித் தானமலி கேதாரந் திருவால்மிக்கு
    முந்துபரி யாத்திரஞ்சந் திரத்தானஞ் சுமிந்தரஞ்சுந் தரமாமூசு
    சந்துமலி தருமரா புரந்தாமே விசாலாக்ஷம் நடம்பொன் மேரு.
    
    சண்பகமா வனம்போட மாடவியோ டாமிரதஞ் சாரதைப்பீடம்
    மண்பரவுந் துளசிவன மயவந்தி சூல்வரைசி கண்ட மற்றும்
    விண்பயிலு மாசோத மஞ்சரிகாம் பீரியமா விர்த்த மேலோர்
    எண்பதமாம் பிரமாண்ட மயிராவதி மாயூரம்சித்தி ரசேனாகம்.
    
    புட்கரணி பாதாள மந்திராச் சிரமமணி பொழிபொற் கூடம்
    கட்கமழும் கமலமணி சிவாச்சிரமம் சித்தராச் சிரம ரூப
    நட்புறுசித் திரகூட மல்லிகார்ச் சுனங்கங்கா நதித்து வாரம்
    புட்பயிலும் புஷ்பரத முதயவரை புன்னாக வனமு மற்றும்.
    
    நந்திபுர மாமாங்கம் சாளரத்தம் சிரபுரஞ்சோம் பீட நாறும்
    சந்தணிகேத் திரஞ்சாளக் கிராமமிட பாசலமே தமைந்த தீமை
    சிந்துசரச் சுவதிமறைத் தெளிவாகுஞ் சிதம்பரமாந் திகழுந்தானம்
    இந்தியமைந்தடக்கினர் தம்மிதையத்தும் நடம்புரிவமியலா லென்றும்"
    என்றபடி அறுபத்து நான்குமாம்.
    
  285. இவற்றுள் சிதம்பரம் மேலானதற்குக் கரண மெனன?
    இங்குச் செய்யும் நடனம் ஆன்மாக்களுக்கு ஆணவவிருளைப் போக்கிப் பேரின்பமாகிய ஆனந்தத்தை அருளும் ஆநந்த நடனமாதலால் விசேஷமென அறிக.
  286. சப்த தியாக ஸ்தலங்கள் யாவை?
    திருவாரூர், திருநாகைக்காரோணம், திருக்கோளிலி, திருநள்ளாறு, திருக்காறாயில், திருவாய்மூர், திருமறைக்காடு என்னும் ஏழுமாம்.
  287. இந்தத் தலங்களிலுள்ள தியாகர்களின் திருநாமங்களையும் நடனங்களையும் சொல்லுக?
    1. திருவாரூர், வீதிவிடங்கர் - அசபாநடனம்.
    2. திருநாகைக்காரோணம், சுந்தரவிடங்கர் - அலைநடனம்.
    3. திருக்கோளிலி, அவனிவிடங்கர் - பிரமரநடனம்.
    4. திருநள்ளாறு, நகவிடங்கர் - உன்மத்தநடனம்.
    5. திருக்காறாயில், ஆதிவிடங்கர் - குக்குடநடனம்
    6. திருவாய்மூர், நீலவிடங்கர் - கமலநடனம்.
    7. திருமறைக்காடு, புவனிவிடங்கர் - அமிர்தநடனம்.
  288. ஆறாதார ஸ்தலங்கள் யாவை?
    (மூலாதாரம்) திருவாரூர், (சுவாதிஷ்டானம்) திருவானைக்கா, (மணிபூரகம்) திருவண்ணாமலை, (அநாகதம்) சிதம்பரம், (விசுத்தி) திருக்காளத்தி, (ஆக்ஞை) காசி என்னும் ஆறுமாம். (கயிலையை சஹஸ்ரதளமாகவும், மதுரையை துவாதசாந்தமாகவும் கூறுவர்.)
  289. பிண்ட ஸ்தலங்கள் யாவை?
    (சிரசு) ஸ்ரீபர்வதம், (லலாடம்) கேதாரம், (புருவ மத்தியம்) காசி, (இருதயம்) சிதம்பரம், (மூலாதாரம்) திருவாரூர், (குதஸ்தானம்) குருக்ஷேத்திரம் என்னும் ஆறுமாம்.
  290. பஞ்சபூத ஸ்தலங்கள் யாவை?
    (பிருதுவி) திருவாரூர், (அப்பு) திருவானைக்கா, (தேயு) திருவண்ணாமலை, (வாயு) திருக்காளத்தி, (ஆகாயம்) சிதம்பரம் என ஐந்துமாம்.
  291. நாடி ஸ்தலங்கள் யாவை?
    இலங்கை - இடைகலை, இமயம் - பிங்கலை, தில்லை - சுழுமுனை எனவறிக.
  292. சிவாலயங்களிலே நடக்கும் மாத விசேஷ உத்ஸவங்கள் எவை?
    சித்திரை மாதத்தில் விஷுபுண்ணிய காலோத்ஸவம் பிரமோத்ஸவம் சைத்திரோத்ஸவம், ஸ்ரீ நாவுக்கரசு சுவாமிகள் மகோத்ஸவம், வைகாசியில் வசந்தம் ஸ்ரீ ஞானசமபந்த சுவாமிகள் மகோத்ஸவம், ஆனி மாதத்தில் திருமஞ்சனம் ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள் மகோத்ஸவம், ஆடிமாதத்தில் ஆடிப்பூர உத்ஸவம், ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள் மகோத்ஸவம், ஆவணிமாதத்தில் ஸ்ரீ விநாயக உத்ஸவம், ஆவணி மூலமகோத்ஸவம், புரட்டாசி நவராத்திரி மகோத்ஸவம், ஐப்பசி ஸ்கந்தோத்ஸவம், கார்த்திகை தீப மகோத்ஸவம், மார்கழி திருவெம்பாவை உத்ஸவம், ஸ்ரீ ஆருத்திராதரிசன மகோத்ஸவம், தை உத்தராயணபுண்ணியகால மகோத்ஸவம் பூச மகோத்ஸவம், மாசி மகோத்ஸவம் சிவராத்திரி மகோத்ஸவம், பங்குனி தெப்போத்ஸவம் உத்திர உத்ஸவம் ஆகிய இவைகளாம்.
  293. சிவராத்திரி யாவது யாது?
    பிரம விஷ்ணுக்கள் ஒரு கற்பத்திலே தான் பிரமம் தான் பிரமமென்று தருக்குற்ற காலையில் ஸ்ரீ பரமேஸ்வரன் ஸ்தாணு ரூபமாய் நின்ற அவதாரமென்றும், மகாபிரளயத்துக்கப்பால் ஆன்மகோடிகள் மாயையிலொடுங்கிநிற்க ஏகாதச ருத்திரர்கள் பெருமானை ஏகாந்தமாய்ப் பூஜித்த காலமென்றும், பின்னொரு கற்பத்தில் சர்வசம்ஹாரகாலத்தினிறுதியில் உமைகேள்வன் ஸ்ரீ பராசத்தியாருடன் வீணாகானம் செய்துகொண்டிருந்தகாலையில் அம்மையார் ஆணவ கேவலத்தில் கட்டுண்டு கிடக்கும் ஆன்மகோடிக ளனைத்தையும் பக்குவப்படுத்தி நிரதிசயானந்தப் பெருவாழ்வைத் தருவான் வேண்டி மீட்டும் பஞ்சகிருத்தியந் தொடங்கியருள வேண்டுமென்று பிரார்த்தித்து ஸ்ரீ பரமேஸ்வரனை அபிஷேகாதி வைபவங்களால் மகிழ்விக்கச் செய்த இரவு என்றுங் கூறுவர் மேலோர்.


    வேதாகம புராணங்கள்

  294. சைவர்களின் புனித நூல்கள் எவை?
    திருமறை எனப்படும் வேதமும், திருமுறைகளும், சிவாகமங்களும், புராணங்களும் மிகப் போற்றப்படும் நூல்களாகும். பல அருளாளர்கள் இயற்றிய பிற நூல்களும் உள.
  295. வேதங்கள் எவை?
    இருக்கு, யஜுர், சாமம், அதர்வணம் என்ற நான்காகும்.
  296. இவை உணர்த்தும் பொருளென்ன?
    இறைவனைப் பொது நிலையில் போற்றுவன திருமறைகள். இவை இறைவனுடைய பல்வேறு செயல் வடிவங்களைப் போற்றுவன. (இவற்றில் இந்திரன், அக்கினி, வருணன், உருத்திரன் என வருவன பல தெய்வ வழிபாடன்று. இறைவன்ஒருவனின் பல இயல்புகளே என உணரவேண்டும். அப்பொழுது தான் "ஒன்றே பொருள். அது பலவாறாகச் சொல்லப்படுகின்றது" என்பது போன்ற வேத மந்திரங்களின் பொருள் தெளிவடையும். மேலும் விவரங்கட்கு)
  297. வேத சாகைகள் என்றால் என்ன?
    சாகை என்றால் கிளை என்று பொருள். நான்கு வேதங்களும் பயிலப்படும் மரபு பற்றிப் பல சாகைகள் கொண்டு அமைந்துள்ளன. (திருமுறை ஆசிரியர்கள் "சாகை ஆயிரம் உடையார், சாமம் ஓதுவதுடையார்", "சந்தோக சாமம்" என இவற்றைக் குறித்துள்ளனர்.)
  298. வேத அங்கங்கள் என்பன யாவை?
    வேதங்களின் உறுப்பிக்களாக அமைவன. சிக்ஷை, வ்யாகரணம், சந்தஸ், ந்ருத்தம், ஜ்யோதிஷம், கல்பம் - என்பன இவ்வாறு.
  299. வேதங்கள் ஏன் நான்காக உள்ளன?
    அமைப்பு மற்றும் பயன்பாடு கருதி நான்காக உள்ளன.
  300. ஆகமங்களின் தேவை என்ன?
    வேதங்கள் பொது வகையில் எடுத்து ஓதிய இறைவனை ஆகமங்கள் சிறப்பு முறையில் சிவபெருமானே அப்பரம்பொருள் என்று அப்பெருமானை வழிபட்டு உணரும் நிலை தருகின்றன.
  301. ஆகமங்கள் எத்தனை?
    சிவாகமங்கள் 28 ஆகும். (28 ஆகமங்கள் பற்றிய செய்திகள்).
  302. புராணங்களின் தேவை என்ன?
    வேத முதல்வனாக மனம் வாக்கிற்கு அப்பார்பட்டு நிற்கும் இறைவனின் திருவருட் செய்லகளைக் கூறுவதன் மூலம் உயிகளை வழிப்படுத்தி நிற்பன புராணங்கள் ஆகும். இப்புராணங்கள் இறைவனாகிய சிவபெருமானின் திருவருளைப் பலவாறு போற்றி நிற்கும். ஆங்காங்கு அப்பெருமானின் திருவருள் பெற்ற தேவர்களையும் உபசார வழக்காகப் போற்றும்.
  303. புராணங்கள் எவை எவை?
    புராணங்கள் 18 ஆகும். அவை சைவம், பவிஷ்யம், மார்க்கண்டம், இலிங்கம், ஸ்காந்தம், வராஹம், வாமனம், கூர்மம், ப்ரம்மாண்டம், காருடம், நாரதீயம், விஷ்ணு, பாகவதம், ப்ரம்மம், பத்மம், ஆக்னேயம், ப்ரம்மகைவர்த்தம் என்பன.


    தமிழ் வேத இயல்

  304. சைவ சமயிகள் ஓதவேண்டிய தமிழ் வேதங்கள் எவை?
    தேவாரம், திருவாசகம் இரண்டுமாம்.
  305. தேவாரம் செய்தருளினவர் யாவர்?
    திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார் என்னும் மூவர்.
  306. திருவாசகம் செய்தருளியவர் யாவர்?
    மாணிக்கவாசக சுவாமிகள்.
  307. திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் எங்கே திருவவதாரம் செய்தருளினார்?
    சோழ நாட்டில் உள்ள சீர்காழியிலே திருவவதாரம் செய்தருளினார்.
  308. திருநாவுக்கரசு நாயனார் எங்கே திருவவதாரம் செய்தருளினார்?
    திருமுனைப்பாடி நாட்டில் உள்ள திருவாமூரிலே திருவவதாரம் செய்தருளினார்.
  309. சுந்தரமூர்த்தி நாயனார் எங்கே திருவவதாரம் செய்தருளினார்?
    திருமுனைப்பாடி நாட்டில் உள்ள திருநாவலூரிலே திருவவதாரம் செய்தருளினார்.
  310. மாணிக்கவாசக சுவாமிகள் எங்கே திருவவதாரம் செய்தருளினார்?
    பாண்டி நாட்டில் உள்ள திருவாதவூரிலே திருவவதாரம் செய்தருளினார்.
  311. திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் முதலிய நால்வரும் எவ்வாறு பெயர் பெறுவார்கள்?
    சைவசமயக் குரவர்கள் எனப் பெயர் பெறுவார்கள்.
  312. யாது காரணத்தினால் இவர்கள் சைவ சமயக் குரவர்கள் எனப் பெயர் பெறுவார்கள்?
    சைவத்தின் வழி உய்வு பெற வழியினைத் தம் பாடல்கள் மூலம் அருளிப் பல அற்புதங்களைக் கொண்டு சைவ சமயமே மெய்ச் சமயம் என்று நிலைநாட்டியமையால் சைவ சமயக் குரவர்கள் (குருமார்கள்) எனப் பெயர் பெறுவார்கள்.
  313. திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் இடத்தில் விளங்கிய அற்புதங்கள் சில கூறுக?
    மூன்றாம் வயதிலே உமாதேவியார் கறந்து பொற்கிண்ணத்தில் ஊட்டிய திருமுலைப்பாலை உண்டது.
    சிவபெருமானிடத்திலே பொற்றாளமும், முத்துப் பல்லக்கும், முத்துச் சின்னமும், முத்துக் குடையும், முத்துப் பந்தரும், உலவாக்கிழியும், படிக்காசும் பெற்றது.
    திருமறைக்காட்டிலே வேதங்களினாலே பூட்டப்பட்டுத் திருநாவுக்கரசு நாயனாருடைய திருப்பதிகத்தினாலே திறக்கப்பட்ட திருக்கதவு அடைக்கப் பாடினது.
    பாலை நிலத்தை நெய்தல் நிலம் ஆகும்படி பாடினது.
    பாண்டியனுக்குக் கூனையும், சுரத்தையும் போக்கினது.
    சமணர்கள் எதிரே தேவாரத் திருவேட்டை தீயிலே போட்டுப் பச்சையாக எடுத்தது.
    வைகை ஆற்றிலே திருவேட்டைப் போட்டு எதிர் ஏறும்படி செய்தது.
    புத்த நந்தியுடைய தலையில் இடி விழச் செய்தது.
    ஆற்றிலே தாமும் அடியவர்களும் ஏறிய ஓடத்தைத் திருப்பதிகத்தினாலே கரை சேர்த்தது.
    ஆண் பனைகளைப் பெண் பனைகளாக ஆக்கினது.
    விடத்தினால் இறந்த வணிகனை உயிர்ப்பித்தது.
    விடத்தினால் இறந்த பெண்ணுடைய எலும்பைப் பெண் ஆக்கியது.
    தமது திருக்கல்யாணம் தரிசிக்க வந்தவர்கள் எல்லாரையும் தம்மோடு தீயிலே புகுவித்து முத்தியிலே சேர்த்தது.
  314. திருநாவுக்கரசு நாயனார் இடத்தில் விளங்கிய அற்புதங்கள் சில கூறுக?
    சமணர்களாலே ஏழு நாள் சுண்ணாம்பு அறையிலே பூட்டப்பட்டு இருந்தும் வேவாது பிழைத்தது.
    சமணர்கள் கொடுத்த நஞ்சு கலந்த பாற் சோற்றை உண்டும் சாவாது பிழைத்தது.
    சமணர்கள் விடுத்த யானையினால் வலம் செய்து வணங்கப் பட்டது.
    சமணர்கள் கல்லிலே சேர்த்துக் கட்டிக் கடலிலே இடவும், அக்கல்லே தோணியாகக் கரை ஏறினது.
    சிவபெருமானிடத்தில் படிக்காசு பெற்றது.
    திருமறைக்காட்டிலே வேதங்களால் பூட்டப்பட்ட திருக்கதவு திறக்கப்பாடினது.
    விடத்தினாலே இறந்த பிள்ளையை உயிர்ப்பித்தது.
    கயிலைக்குச் செல்லும் வழியில் ஒரு தடாகத்தின் உள்ளே முழுகித் திருவையாற்றில் ஒரு வாவியின் மேலே தோன்றிக் கயிலைக் காட்சி கண்டது.
  315. சுந்தரமூர்த்தி நாயனார் இடத்தில் விளங்கிய அற்புதங்கள் சில கூறுக?
    செங்கற்களைப் பொன்னாகப் பெற்றுக் கொண்டது.
    சிவபெருமான் கொடுத்தருளிய பன்னீராயிரம் பொன்னை விருத்தாசலத்தில் உள்ள மணி முத்தாறு ஆற்றிலே போட்டுத் திருவாரூரில் உள்ள குளத்திலே ( கமலாலயம் ) எடுத்தது.
    சிவபெருமான் திருவருளால் இழந்த இரு கண்களின் பார்வையையும் மீண்டும் பெற்றது.
    சிவபெருமானையே பரவையார் மனைக்குத் தூதராக்கியது.
    காவேரி ஆறு பிரிந்து வழிவிடச் செய்தது.
    முதலை விழுங்கிய பிள்ளையை அம்முதலை வாயினின்று அழைத்துக் கொடுத்தது.
    வெள்ளை யானையில் ஏறிக்கொண்டு திருக்கயிலாயத்திற்கு எழுந்தருளினது.
  316. மாணிக்கவாசக சுவாமிகள் இடத்தில் விளங்கிய அற்புதங்கள் சில கூறுக?
    சிவபெருமானே நரியைக் குதிரை ஆக்கிக் கொண்டு வரும்படிக்கும், மண் சுமந்து அடி படும்படிக்கும் பெற்றுக் கொண்டது.
    புத்தர்களை வாதினில் வென்று ஊமைகள் ஆக்கிப் பின் ஊமம் தீர்த்துச் சைவர்கள் ஆக்கியது.
    பிறவி தொடுத்து ஊமையாய் இருந்த ஒரு பெண்ணை ஊமம் தீர்த்துப் புத்தர்கள் வினாவிய வினாக்களுக்கு விடை சொல்லும்படி செய்தது.
    தம்முடைய திருவாசகத்தையும் திருக்கோவையாரையும் சிவபெருமானே எழுந்தருளி வந்து எழுதும்படி பெற்றுக் கொண்டது.
    எல்லாரும் காணப் பொற்சபையின் உள்ளே புகுந்து சிவத்தோடு கலந்தது.
  317. இந்த அற்புதங்களினாலே யாது விளங்குகின்றது?
    சைவ சமயமே மெய்ச் சமயம் என்பது நன்றாக விளங்குகின்றது.
  318. தமிழ் வேதத்தை எப்படி ஓதல் வேண்டும்?
    சுத்தம் செய்யப்பட்ட இடத்தில் பீடத்தின் மேலே தமிழ் வேத புத்தகத்தை வைத்து அருச்சித்து, வழிபாடு செய்து, இருந்து கொண்டு அன்புடனே ஓதுதல் வேண்டும். புத்தகத்தை நிலத்திலேனும், ஆசனத்திலேனும், படுக்கையிலேனும், மடியிலேனும் வைக்கல் ஆகாது.
  319. தமிழ் வேதத்தை அன்புடனே நியமமாக ஓதினவர் யாது பெறுவர்?
    எல்லா நலனும் பெற்று, சிவபெருமானுடைய திருவடிக் கீழ்ப் பேரின்பத்தை அனுபவிப்பர்.


    தமிழ் ஆகம இயல்

  320. ஞானகாண்டப் பொருளைச் சுருக்கி இனிது விளக்கும் தமிழ்ச் சித்தாந்த சாத்திரங்கள் எவை?
    திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார், சிவஞான போதம், சிவஞான சித்தியார், இருபா இருபது, உண்மை விளக்கம், சிவப்பிரகாசம், திருவருட் பயன், வினா வெண்பா, போற்றிப் ப•றொடை, கொடிக்கவி, நெஞ்சுவிடு தூது, உண்மைநெறி விளக்கம், சங்கற்ப நிராகரணம் என்னும் பதினான்குமாம்.
  321. திருவுந்தியார் அருளிச் செய்தவர் யார்?
    உய்யவந்த தேவ நாயனார்.
  322. திருக்களிற்றுப்படியார் அருளிச் செய்தவர் யாவர்?
    திருக்கடவூர் உய்யவந்த தேவ நாயனார். இவர் திருவுந்தியார் அருளிச் செய்த உய்யவந்த தேவ நாயனாருடைய சீடராகிய திருவியலூர் ஆளுடைய தேவ நாயனாருடைய சீடர்.
  323. சிவஞான போதம் அருளிச் செய்தவர் யாவர்?
    திருவெண்ணெய் நல்லூர் மெய்கண்ட தேவர். இவருக்குச் சுவேதவனப் பெருமாள் என்பது பிள்ளைத் திருநாமம்.
  324. சிவஞான சித்தியார், இருபா இருபது என்னும் இரண்டும் அருளிச் செய்தவர் யாவர்?
    சகலாகம பண்டிதர் என்னும் காரணப்பெயர் பெற்ற திருத்துறையூர் அருணந்தி சிவாச்சாரியார். இவர் மெய்கண்ட தேவருடைய சீடர் நாற்பத்தொன்பதின்மருள்ளே தலைவர்.
  325. உண்மை விளக்கம் அருளிச் செய்தவர் யாவர்?
    திருவதிகை மனவாசகங் கடந்தார். இவர் மெய்கண்ட தேவருடைய சீடர்களுள் ஒருவர்.
  326. எஞ்சி நின்ற சிவப்பிரகாசம் முதலிய எட்டும் அருளிச் செய்தவர் யாவர்?
    கொற்றவன்குடி உமாபதி சிவாச்சாரியார். இவர் தில்லைவாழ் அந்தணர்களுள் ஒருவர். இவர் அருணந்தி சிவாச்சாரியாருடைய சீடராகிய திருப்பெண்ணாகட மறைஞானசம்பந்தரின் சீடர்.
  327. மெய்கண்ட தேவர், அருணந்தி சிவாச்சாரியார், மறைஞான சம்பந்த சிவாச்சாரியார், உமாபதி சிவாச்சாரியார் என்னும் நால்வரும் எவ்வாறு பெயர் ªறுவர்?
    திருக்கயிலாய பரம்பரைச் சந்தான குரவர் எனப் பெயர் பெறுவர்.
  328. மெய்கண்ட தேவருக்கு ஆசாரியார்கள் யாவர்?
    திருக்கயிலாய மலையினின்றும் தேவ விமானத்தின் மேற்கொண்டு எழுந்தருளி வந்த பரஞ்சோதி மாமுனிவர்.
  329. பரஞ்சோதி மாமுனிவருக்கு ஆசாரியார் யாவர்?
    சத்தியஞான தரிசனிகள்.
  330. சத்தியஞான தரிசனிகளுக்கு ஆசாரியார் யாவர்?
    சனற்குமார மாமுனிவர்.
  331. சனற்குமார மாமுனிவருக்கு ஆசாரியார் யாவர்?
    திருநந்தி தேவர்.
  332. திருநந்தி தேவருக்கு ஆசாரியர் யாவர்?
    திருநீலகண்ட பரமசிவன்.


    புராண இயல்

  333. சிவபெருமான் சந்திரனைச் சடைமுடியில் ஏன் தரித்துக்கொண்டிருக்கிறார். அதுவும் ஒருகலையுள்ளதாயிருக்கினறதேயல்லது சோடசகலை யுள்ளதாகயிருக்கவில்லையே?
    தக்கன் தன்னுடைய இருபத்தேழு பெண்களையும் சந்திரனுக்கு விவாகஞ்செய்து கொடுத்தபோது இவர்களெல்லாரிடத்திலும் ஒரே தன்மையான இஷ்டமுள்ளவனாய் இரு என்று சொல்லி அவ்வண்ணமாகயிருந்த சந்திரன் தன் ஸ்திரீகளுள் மிகுந்த சவுந்தரியமுள்ள கார்த்திகை உரோகணி யென்னும் இரண்டு ஸ்திரீகளிடத்தில் மாத்திரம் மிகுந்த இஷ்டமுள்ளவனாய் மற்ற இருபத்தைந்து ஸ்திரீகளிடத்திலும் இட்டமில்லாதவனாயிருந்தான். அவர்கள் மனம்வருந்தித் தக்கனிடத்தில் சொல்லிக்கொண்டார்கள். அவன் கோபங்கொண்டவனாய்ச் சந்திரனுடைய சோடசகலைகளும் அழிவுறும்படிச் சபித்தான். அந்தச்சாபத்தின்படி தினம் ஒவ்வொரு கலையாகப் பதினைந்து கலை குறையக்கண்ட சந்திரன் துயரங்கொண்டு தேவேந்திரனிடத்தில் சொல்ல, இந்தச்சாப மென்னால் நீக்கத்தக்கதல்ல வென்னப் பிரமதேவனிடத்தில் போய்ச் சொல்லிக்கொண்டான். “நான் சொன்னாலுந் தக்கன் இந்தசாபத்தை நிவர்த்தி செய்யமாட்டான். நீ வைகுந்தத்துக்குப் போய் விண்டுவிடத்தில் விண்ணப்பஞ்செய்துகொள்" எனச் சந்திரன் அப்படியே செய்ய, தன்னால் முடியாது ஸ்ரீ கைலாசகிரிக்குப்போய்ப் பரமசிவனிடத்தில் விண்ணப்பஞ்செய்துகொண்டால் இந்தச் சாபம் நிவர்த்தியாகுமென்று விண்டு சொல்ல, அதைக் கேட்டுக்கொண்டு சந்திரன் ஸ்ரீகைலாயகிரிக்குப்போய், பரமசிவனைப் பணிந்து தோத்திரம் செய்தான். பரமசிவன் கிருபை கூர்ந்து சந்திரனிடத்தி லிருந்த ஒரு கலையினையுந் தமது முடியில் தரித்துக்கொண்டு இது உன்னிடத்திலிருந்தால் தக்கன் சாபம் இதனையுமழித்துவிடும். இனி நம்முடைய திருமுடியிலிருக்கிற கலையைத் தொடராது. இந்தக் கலையழியாமலிருப்பதனால் உனக்கு முன்னிருந்ததுபோல நாளுக்கு நாளொவ்வொரு கலையாக வளர்ந்து சோடசகலைகளும் நிறைவுபடும். அப்படி நிறைந்தாலும் வளர்ந்ததுபோல மறுபடி குறைவுபடுகிறதும் வளருவதுமாக இருக்குமென்று அநுக்கிரகஞ் செய்தார். சந்திரன் சந்தோஷத்துடன் சுவாமியைத் தோத்திரஞ்செய்து விடைபெற்றுக்கொண்டு தன் பதவியிற்போய் சேர்ந்தான்.
  334. பரமசிவன் ஒரு திருக்கரத்தில் மான் தரித்துக் கொண்டிருப்பதற்குக் காரண மென்ன?
    அந்த மான் தாருகாவனத்து ரிஷிகளால் அனுப்பப்பட்டது. அவர்களேன் அனுப்பினார்களெனில் பரமசிவன் பிக்ஷாடன மூர்த்தமாகத் தாருகாவனத்துக் கெழுந்தருளினபோது ரிஷிபத்தினிகள் கண்டு மோகித்துத் தங்கள் கற்பு குலைந்தார்கள். அதைக்கண்டு தாருகாவனத்து ரிஷிகள் கோபமுடையவர்களாய் ஒரு வேள்விசெய்து அதிலுண்டான புலியை நோக்கிச் சிவனைக் கொல்லும்படியேவ அதனைக்கொன்று தோலை யாடையாக அணிந்து கொண்டார். பின்னுமந்த வேள்வியில் மானுண்டாகிவர அதனை யிடக்கையில் வைத்துக்கொண்டருளினார். பின்பு மழுவுண்டாய்வந்தது. அதனை ஆயுதமாக வைத்துக்கொண்டனர். பின்பு சர்ப்பங்களுண்டாய்வர அவைகளை ஆபரணமாகத் தரித்துக்கொண்டார். பின் முயலகனென்னு மசுரனுண்டாகிவர அவனைக் கீழேதள்ளி முதகிலேறி நின்றார். மந்திரங்களை யேவினார்கள்; அவகைள் டமருக ரூபங்கொண்டு வர திருக்கரத்தில் வைத்தருளினார்.
  335. மீன் கண், ஆமையோடு, பன்றிக்கொம்பு, எலும்புமாலை, கையில் கபாலம் இவைகளை ஏன் தரித்துக்கொண்டிருக்கிறார்?
    விஷ்ணு கடலில் மச்சாவதாரங்கொண்டு வேதங்களை யபகரித்துக்கொண்டுபோன ஒரு அசுரனை வதைத்த இரத்த வெள்ளங்குடித்து மயக்கமுற்று உலகம் வருந்தும்படிக் கடலைக் கலக்கியபோது தேவர்கள் கயிலையிற்சென்று தாங்கள்வந்த காரியத்தை விண்ணப்பஞ் செய்துகொள்ளச் சுவாமி கிருபை கூர்ந்து ஒரு வயிரவரையனுப்ப அவர்போய் வலைவீசி யந்த மீன்கண்களைப் பெயர்த்துக் கொண்டுவர அவைகளைத் தேவர்கள் வேண்டுதலினால் தமது ஸ்ரீபாதங்களிலே தரித்துக் கொண்டருளினார். அமிர்தமுண்டாகும்படித் தேவர்கள் பாற்கடலில் மந்தரகிரியை மத்தாக நாட்டி வாசுகியாகிய பாம்பினைத் தாம்பாகச் சுற்றி வலிக்கும்போது அந்த மந்தரகிரி கடலிலாழ அதைக்கண்டு தேவர்கள் விஷ்ணுவைத் தோத்திரஞ்செய்ய அவர்வந்து ஆமையாகி மந்தரகிரி தன்முதுகில் நிற்கும்படித் தாங்கின காலத்தில் மமதை கொண்டு கடலைக் கலக்க அதைக்கண்ட தேவர்கள் கயிலாயபதிக்கு விண்ணப்பம் பண்ணிக்கொண்டார்கள். சுவாமி கிருபைகூர்ந்து விநாயகரையனுப்ப அவர்போய்த் தம்முடைய துதிக்கையை நீட்டிக் கடநீரை யெல்லாம் உறிஞ்சுகையில் ஆமையும் அந்தத் துதிக்கைக்குள் போய் விட்டது. பின்பு விநாயகர் நீரைச்சிந்தினார். அந்த நீருடன் ஆமையும் வெளிவந்து விழுந்து மதிமயங்கிக்கிடக்க அதை விநாயகர்கண்டு அதன் ஓட்டினைத் தன்னுடைய தந்தத்தினால் பெயர்த்துக் கொண்டுவந்து சுவாமிக்குக் காணிக்கையாகக் கொடுக்கக்கண்டு மகிழ்ந்து தேவர்கள் வேண்டுதலினால் தலை மாலையுடன் அந்த ஆமையோட்டையும் மார்பில் தரித்துக் கொண்டருளினார். ரணியாட்சனென்னும் ஒரு அசுரன் பிரமதேவனை தோத்தித் தவஞ்செய்து வரம்பெற்றுக்கொண்டு போகிறவன் பூமியைக் கவர்ந்து கொண்டு போய்விட்டான். அதையறிந்து விஷ்ணு வராக அவதாரஞ்செய்து அவனைக்கொன்று மமதையடைய, தேவர்கள் கயிலாயபதிக்கு விண்ணப்பம் பண்ணிக்கொண்டார்கள். பரமசிவன் திருவுளமிரங்கிச் சுப்பிரமணியரையனுப்ப அவர்போயந்தப் பன்றியின் தலையை வேலினால் குத்தி யமுக்கி யதன் கொம்பினைப் பறித்துக்கொண்டு வந்து சுவாமியினிடத்தில் வைக்க அதை முன்போலத் தரித்துக்கொண்டார். பிரம விஷ்ணுக்களை யுண்டாக்கி யவர்களில் பிரமனைக் கொண்டு சிருட்டித்தும் விஷ்ணுவைக் கொண்டு இரக்ஷித்தும் பின்பு சங்கரித்தும் பலவாறு இம் முத்தொழில்களைச் செய்கையில் பிரம விஷ்ணுக்களை முடிவான காலத்தில் சங்கரித்து அவர்கள் எலும்புகளையும் சிரங்களையும் மாலையாக அணிந்தருளினார். அவர்களுக்கு நன்மையுண்டாக வேண்டுமென்று தரித்துக் கொண்டதேயல்லது பெருமை பாராட்டுக்காகத் தரித்துக்கொண்டதேயல்ல. முன்பொரு கற்பமுடிவில் இவர்களையெல்லாம் நெற்றிக்கண் பொறியால் நீறுபடுத்தி யந்தப்பொடியைத் தமது திருமேனியில் தரித்துக்கொண்டருளினார். இதுவும் அவர்களுக்கு நன்மையுண்டாக வேண்டுமென்கிற காருண்யமேயாம்.
    முன்னொருகாலம் பிரமா அகந்தைகொண்டிருக்க அதை யடக்கும் பொருட்டு அவருக்கிருந்த ஐந்து தலையில் நடுத்தலையைக்கிள்ளிக் கையிற் கபாலமாக வைத்தருளினார். அது முதல் பிரமனுக்குச் சதுர்முகனென்று பெயராயது. பரமசிவன் சிரமாலை யணிந்திருப்பதனால் சிரமாலியென்றும் கபாலந்தரித்துக்கொண் டிருப்பதனால் கபாலியென்றும் பெயருண்டாயது.
  336. கண்டத்தில் விஷம் பொருந்தி யிருப்பதற்குக் காரணமென்ன?
    தேவர்கள் அமிர்த முண்டாவதற்காகப் பாற்கடல் கடைந்தபோது ஆலகாலவிஷமுண்டாயது. அதைக் கண்டு தேவர்கள் முறையிட அவர்களை இரக்ஷிக்கும் பொருட்டு விஷத்தைக் கண்டத்தில் வைத்தருளினார். இந்தக் காரணத்தினால் காளகண்டன், கறைமிடற்றன், நீலகண்டன் எனப்பெயர்பெறுவர்.
  337. பரமசிவனுக்கு ரிஷபவாகன முண்டானதற்குக் காரணமென்ன?
    தருமதேவதையானது பிரமவிஷ்ணு முதலானவர்களெல்லாம் அழிந்துபோவதைக்கண்ட தானவ்வாறு மாண்டுபோகாமல் என்றும் நித்தியமாயிருக்கவேண்டும்மென்கிற எண்ணங்கொண்டு ரிஷபரூபமாகிப் பரமசிவனிடத்திற்சென்று பணிந்து “கர்த்தனே! நானிறவாமலிக்கும்படி அடியேனை வாகனமாகக் கொண்டருள வேண்டு" மென்று தோத்திரஞ் செய்ய சுவாமி கிருபைகூர்ந்து அதனைத் தமக்கு வாகனமாகக் கொண்டருளினார்.
  338. இன்னும் யார் ரிஷப மானது?
    விஷ்ணு திரிபுரசம்ஹாரகாலத்தில் ரிஷபமாகிக் கயிலாயபதி தன்னை வாகனமாகக் கொண்டருளும் பேறுபெற்றார்.
  339. பரமசிவன் வீணாதண்டம் வைத்திருக்கக் காரணமென்ன?
    விஷ்ணு வாமனாவதாரத்தில் விஸ்வரூபம் கொண்டபோது மமதையடைந்து உலகினையழிக்க முயலுகையில் சிவபெருமான் திருவுளமிரங்கி வைரவரையனுப்ப, அவரந்த விஸ்வரூபத்தைச் சம்ஹாரம் செய்து அதன் வீணாதண்டத்தைக் கொண்டுவந்து எம்பெருமானிடத்தில் வைக்க, சுவாமி அதனைத் தனக்கு ஒரு கோலாக வைத்துக்கொண்டார்.
  340. பரமசிவனுக்குச் சிம்ஹாசனம் இருப்பதற்குக் காரணம் என்ன?
    இரணியனைக் கொல்லவந்த விஷ்ணு நரசிம்மாவதாரம் செய்து அவனைக்கொன்று மமதையடைய, தேவர்கள் கயிலாயபதிக்கு விண்ணப்பித்துக்கொள்ள, அவர் சரபரூபமெடுத்து அச்சிம்மத்தின் தலையைப்பிளந்து இரத்தத்தைக் குடித்துக்கொன்றனர். தேவர்களதன் தோலையுரித்துச் சுவாமிக்குத தவிசாக வைத்துச் சுவாமியை வேண்டிக்கொள்ள அவரும் அவ்வாறே அங்கீகரித்தனர்.
  341. பரமசிவன் யானைத்தோல் போர்த்திருப்பதற்குக் காரணமென்ன?
    யானைரூபமாகத் தோற்றிய கஜாசுரனென்பவன் பிரமதேவனை நோக்கித் தவஞ்செய்து தேவர்களையெல்லாம்வென்று ஜயம்பெற வேண்டுமென்கிற வரங்கேட்டான். பிரம தேவன் அப்படியே வரங்கொடுத்துப், பரமசிவனெதிரில் போகாதே, போனால் இந்த வரமழிந்துபோமென்று சொல்லக் கேட்டுக்கொண்டு போனவன் தேவேந்திரன் முதலானவர்களுடன் யுத்தஞ்செய்து வென்று திரியும்போது, முனிவர்கள் கண்டு பயந்து ஓடிக் காசி சேர்ந்தார்கள். அங்குமவர்களைத் தொடர்ந்து சென்றான். அவர்கள் கண்டு பயந்து மணிகர் நிகையென்னும் ஆலயத்துக்குப் போய்ப் பரமசிவனைச் சரணாகதியடைந்தார்கள். கஜாசுரனுக்குக் காலமுடிவு நேரிட்டதனால் பிரமதேவன் சொன்னதை மறந்து அங்குஞ் சென்று முனிவர்களைக் கொல்லவேண்டுமென்று உறுமுகிறபோது சுவாமி கோபத்துடன் உக்கிரமூர்த்தியாய்க் கஜாசுரன் மத்தகத்தை மிதித்து உடலைக் கிழித்துத் தோலையுரித்துப் போர்த்தருளினார்.
  342. சிவபெருமான் கொக்கிறகைத் தரிக்கக் காரணமென்ன?
    குரண்டாசுரனென்னும் ஓரசுரன் கொக்கு ரூபமாயிருந்து அண்டமனைத்துங் கொரித்துக்கொரித்து, தேவர்களை வருத்தி வந்தமையால் சிவபெருமான் அவனைச் சம்ஹாரம் செய்து அவனது இறகை யணிந்தருளினார்.
  343. இவைகளுக் கெல்லாம் பிரமாணங்களுண்டோ?
    உபநிஷத்துப் பிரமாணங்களன்றி மஹாபிஷ்ணுவின் அவதாரமாகிய ஸ்ரீ வியாச பகவான் செய்தருளிய புராணங்களும் பிரமாணங்களாம்.


    உயிர் இயல்

  344. ஆன்மாக்களாவார் யாவர்?
    என்றும் உள்ளவராய், வியாபகமாய்ச், சேதனமாய்ப், பாசத்தடை உடையோராய்ச், சார்ந்ததன் வண்ணமாய் உடல் தோறும் வெவ்வேறாய் வினைகளைச் செய்து வினைப்பயன்களை அனுபவிப்போராய்ச், சிற்றறிவும் சிறுதொழிலும் உடையோராய்த் தமக்கு ஒரு தலைவனை உடையவராய் இருப்பவர். ( சேதனம் - அறிவுடைய பொருள் ).
  345. ஆன்மாக்கள் எடுக்கும் உடல்கள் எத்தனை வகைப்படும்?
    தூல உடம்பு, சூக்கும உடம்பு என இரண்டு வகைப்படும்.
  346. தூல உடம்பாவது யாது?
    நிலம், நீர், நெருப்பு, காற்று என்னும் ஐந்து பூதமும் கூடிப் பரிணமித்த உருவுடம்பு. ( பரிணமித்தல் - உருத்திரிதல் ).
  347. சூக்கும உடம்பாவது யாது?
    ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் என்னும் காரண தன் மாத்திரை ஐந்தும், மனம், புத்தி, அகங்காரம் என்னும் அந்தக்கரணம் மூன்றும் ஆகிய எட்டினாலும் ஆக்கப்பட்டு ஆன்மாக்கள் தோறும் வெவ்வேறாய், அவ்வவ்வான்மாக்கள் போகம் அனுபவித்தற்குக் கருவியாய் ஆயுள் முடிவின் முன்னுடம்பு விட்டு மற்றோருடம்பு எடுத்தற்கு ஏதுவாய் இருக்கும் அருவுடம்பு.
  348. ஆன்மாக்கள் எப்படி பிறந்து இறந்து உழலும்?
    நல்வினை, தீவினை என்னும் இருவினைக்கு ஈடாக நால்வகைத் தோற்றத்தையும், ஏழுவகைப் பிறப்பையும், எண்பத்து நான்கு நூறாயிர யோனி பேதத்தையும் உடையவைகளாய் பிறந்து இறந்து உழலும்.
  349. ஆன்மாக்கள் வினைகளைச் செய்வதற்கும் வினைப் பயன்களை அனுபவித்தற்கும் இடம் எவை?
    இருவினைகளைச் செய்வதற்கும் இருவினைப் பயன்களை அனுபவித்தற்கும் இடம் பூமி. நல்வினைப் பயனை அனுபவித்தற்கு இடம் சுவர்க்க முதலிய மேலுலகங்கள். தீவினைப் பயனை அனுபவித்தற்கு இடம் இருபத்தெட்டுக் கோடி நரகங்கள்.
  350. பூமியிலே பிறந்த ஆன்மாக்கள் சரீரத்தை விட்டவுடனே யாது செய்யும்?
    நல்வினை செய்த ஆன்மாக்கள் தூல உடலை விட்டவுடனே, சூக்கும உடலோடு பூதசார உடலாகிய தேவ உடலை எடுத்துக்கொண்டு, சுவர்க்கத்திலேயே போய் அந்நல்வினைப் பயனாகிய இன்பத்தை அனுபவிக்கும். தீவினை செய்த ஆன்மாக்கள் தூல உடலை விட்டவுடனே, சூக்கும உடலோடு பூத உடலாகிய, யாதனா உடலை எடுத்துக்கொண்டு, நரகத்திலே போய் அத்தீவினைப் பயனாகிய துன்பத்தை அனுபவிக்கும். இப்படியன்றி, ஒரு தூல உடலை விட்டவுடனே, பூமியிலே தானே ஒரு யோனி வாய்ப்பட்டு, மற்றொரு தூல உடலை எடுப்பதும் உண்டு.
  351. சுவர்க்கத்திலே இன்பம் அனுபவித்த ஆன்மாக்கள் பின்பு யாது செய்யும்?
    தொலையாது எஞ்சி நின்ற கன்ம சேடத்தினாலே திரும்பப் பூமியில் வந்து மனிதர்களாய் பிறக்கும்.
  352. நரகத்திலே துன்பம் அனுபவித்த ஆன்மாக்கள் பின்பு யாது செய்யும்?
    தொலையாது எஞ்சி நின்ற கன்ம சேடத்தினாலே திரும்பப் பூமியில் வந்து முன்பு தாவரங்களாயும், பின்பு நீர் வாழ்வனவாயும், பின்பு ஊர்வனவாயும், பின்பு பறவைகளாயும் பின்பு விலங்குகளாகவும் பிறந்து, பின்பு முன் செய்த நல்வினை வந்து பொருந்த மனிதர்களாய்ப் பிறக்கும்.
  353. எழுவகைப் பிறப்பினுள்ளும் எந்தப் பிறப்பு அருமையுடையது?
    பசுபதியாகிய சிவபெருமானை அறிந்து வழிபட்டு முத்தி இன்பம் பெற்றுய்தற்குக் கருவியாதலால் மனிதப் பிறப்பே மிக அருமையுடையது.
  354. மனிதப் பிறப்பை எடுத்த ஆன்மாக்களுக்கு எப்பொழுது அம்முத்தி சித்திக்கும்?
    அவர்கள், தங்கள் தங்கள் பக்குவத்துக்கு ஏற்ப, படி முறையினாலே, பிறவி தோறும் பௌத்தம் முதலிய புறச்சமயங்களில் ஏறி ஏறி, அவ்வச் சமயத்துக்கு உரிய நூல்களில் விதிக்கப்பட்ட புண்ணியங்களைச் செய்வார்கள். பின்பு அப்புண்ணிய மேலீட்டினாலே வைதிக நெறியை அடைந்து, வேதத்தில் விதிக்கப்பட்ட புண்ணியங்களைச் செய்வார்கள். பின்பு அப்புண்ணிய மேலீட்டினாலே சைவ சமயத்தை அடைவார்கள். சைவ சமயத்தை அடைந்து, சிவாகமத்தில் விதிக்கப்பட்ட சரியை, கிரியை, யோகங்களை விதிப்படி மெய்யன்போடு அனுட்டித்தவருக்குச் சிவபெருமான் ஞானாசாரியாரை அதிட்டித்து வந்து சிவஞானம் வாயிலாக உண்மை முத்தியைக் கொடுத்தருளுவார்.
  355. புறச்சமயங்களின் வழியே ஒழுகினவர்களுக்கு யாவர் பலன் கொடுப்பர்?
    புறச்சமயிகளுக்கு, அவ்வவரால் உத்தேசித்து வழிபடப்படும் தெய்வத்தைச் சிவபெருமானே தமது சத்தியினாலே அதிட்டித்து நின்று அவ்வவ் வழிபாடு கண்டு, பலன் கொடுப்பார்.
  356. சரியையாவது யாது?
    சிவாலயத்துக்கும் சிவனடியார்களுக்கும் தொண்டு செய்தல்.
  357. கிரியையாவது யாது?
    சிவலிங்கப் பெருமானை அகத்தும் புறத்தும் பூசித்தல்.
  358. யோகமாவது யாது?
    விடயங்களின் வழியே போகாவண்ணம் மனத்தை நிறுத்திச், சிவத்தைத் தியானித்துப் பின்பு தியானிப்போனாகிய தானும் தியானமும் தோன்றாது தியானப் பொருளாகிய சிவம் ஒன்றே விளங்கப் பெறுதல்.
  359. ஞானமாவது யாது?
    இறை, உயிர், தளை என்னும் முப்பொருள்களின் இலக்கணங்களை அறிவிக்கும் அறிவு நூல்களைக் கேட்டுச் சிந்தித்துத் தெளிந்து, நிட்டை கூடல்.
  360. சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கினாலும் அடையும் பலன்கள் யாவை?
    சரியையினால் அடையும் பலன் சிவனுலகமும் ( சாலோகம் ), கிரியையினால் அடையும் பலன் சிவனருகில் இருத்தலும் ( சாமீபம் ), யோகத்தினால் அடையும் பலன் சிவ உருவமுமாம் ( சாரூபம் ) இம்மூன்றும் பதமுத்தி : ஞானத்தினால் அடையும் பலன் சிவமாய் இருந்து ஆனந்தித்தலாகிய பரமுத்தி.


    தளை இயல்

  361. பாசமானவை யாவை?
    ஆன்மாக்களைப் பந்தித்து நிற்பவைகளாம். ( பந்தித்தல் - கட்டுதல் ). பாசம், மலம் என்பவை ஒரு பொருட் சொற்றகள்.
  362. தளை எத்தனை வகைப்படும்?
    ஆணவம், கன்மம், மாயை என மூவகைப்படும். இம்மூன்றோடு மாயேயம், திரோதாயிஎன இரண்டும் கூட்டி தளை ஐந்து என்று கொள்வது உண்டு.
  363. ஆணவமாவது யாது?
    செம்பில் களிம்புபோல் உயிர்களில் அநாதியே உடன்கலந்து நிற்பதாய், ஒன்றேயாய், ஆன்மாக்கள் தோறும் வெவ்வேறாகி அவைகளுடைய அறிவையும் தொழிலையும் மறைத்து நின்று தத்தங்கால எல்லையிலே நீங்கும் அநேக சத்திகளையுடையதாய்ச் சடமாய் இருப்பது.
  364. கன்மமாவன யாவை?
    ஆன்மாக்கள் மனம், வாக்கு, காயம் என்னும் மூன்றினாலே செய்த புண்ணிய பாவங்கள், இவை எடுத்த பிறப்பிலே செய்யப்பட்ட பொழுது, ஆகாமியம் எனப் பெயர் பெறும். பிறவி தோறும் இப்படி ஈட்டப்பட்டுப் பக்குவப்படும் வரையும் புத்தி தத்துவம் பற்றுக்கோடாக மாயையிலே கிடக்கும் பொழுது சஞ்சிதம் எனப் பெயர் பெறும். இச்சஞ்சித, கன்மங்களுக்குள்ளே பக்குவப்பட்டவை, மேல் எடுக்கும் உடம்பையும் அது கொண்டு அனுபவிக்கப்படும் இன்ப துன்பங்களையும் தந்து பயன்படும் பொழுது, பிராரத்தம் எனப் பெயர் பெறும்.
  365. மாயாகாரியமாகிய தனு கரண புவன போகங்களைச் சிவபெருமான் ஆன்மாக்களுக்குக் கொடுப்பது எதன் பொருட்டு?
    ஆன்மாக்களைப் பந்தித்த ஆண்வ மலமும், கன்ம மலமும் ஆகிய நோய்களைத் தீர்த்துச் சிவானந்தப் பெரும்பேற்றைக் கொடுக்கும் பொருட்டு.
  366. தனு கரணம் முதலியவைகளும் மலமன்றோ? மலம் என்பது அழுக்கன்றோ? ஆணவமாகிய அழுக்கை, மாயா மலமாகிய அழுக்கினாலே எப்படிப் போக்கலாம்?
    வண்ணான், கோடிப் புடவையிலே சாணியையும் உவர் மண்ணையும் பிசறி, மிகக் கறுத்தது என்னும்படி செய்து, முன்னையதாகிய அழுக்கோடு பின்னையதாகிய அழுக்கையும் போக்கி, அப்புடவையை மிக வெண்மையுடையதாகச் செய்வன். அதுபோலவே சிவபெருமான் ஆன்மாவினிடத்தே மாயா மலத்தைக் கூட்டி, அநாதி பந்தமாகிய ஆணவமலத்தோடு ஆதிபந்தமாகிய மாயா மலத்தையும் போக்கி, அவ்வான்மாவைச் சிவமாம் தன்மைப் பெருவாழ்வுடையதாகச் செய்வார்.


    இறுவாய்

  367. இந்து சமயம் என்பது யாது?
    இந்துசமயம் என்பது பொதுவாகக் கூறப்பட்டாலும் உண்மையில் அது சைவ சமயமே ஆகும். இந்து சமயம் இந்தியா முழுவதும் மட்டும் அன்றி உலகிம் முழுமையும் பரவி இருந்தது. இந்தியாவின் வட எல்லை ஆகிய காச்மீரம் முதல் தென் எல்லையாகிய கன்னியாகுமாரி வரை சைவசமயம் உள்ளது.
    உலகெங்கும் சிவவழிபாடு உள்ளது; என்றாலும், தென்னாடாகிய தமிழ்நாட்டில் அவ்வழிபாடு பன்னிரு திருமுறைகளோடு துளங்குகின்றது. தென்னாட்டில் சிவனாக வழிபடப்படும் கடவுளே பிற நாடுகளில் இறைவனாக இலங்கின்றான் இதனாலேயே,
    “தென்னாடுடைய சிவனே போற்றி
     என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி"
    
    என்று மணிவாசகப் பெருந்தகை அருளியுள்ளார்.
    தென்னாட்டுச் சிவன்கோயில்களில் சிவபெருமான் சிவலிங்க வடிவில் மூலவராக இருக்கிறார். இந்தச் சிவலிங்கவடிவிலிருந்து தோன்றியனவே பிற வடிவங்களாகிய கணபதி, முருகன், அம்மை, திருமால் முதலிய மூர்த்தங்கள் ஆகும். இந்துசமயம் வழிபடும் எல்லா இறை வடிவங்களையும் சைவசமயம கொண்டிருக்கிறது. எனவே, இந்து சமயம் வேறு - சைவசமயம் வேறு அல்ல; இந்துசமயம் என்றால் அது சைவ சமயத்தையே குறிக்கும்.
  368. இந்து சமயத்தில் சிறு தெய்வ வழிபாடுகளும் உள்ளனவே இவை எப்படி ஏற்பட்டன?
    சிறு தெய்வ வழிபாடு பயனற்றது. அதனால் ஆன்மாக்களுக்குள்ள துன்பங்களைப் போக்கிக்கொள்ள முடியாது. இதனாலேயே நம்முடைய பன்னிரு திருமுறை ஆசிரியர்கள் அனைவரும் சிறுதெய்வ வழிபாட்டைக் கண்டித்திருக்கிறார்கள். இவ்வுண்மை, அறியாத பாமரர்கள் மட்டுமல்லாமல் படிப்பறிவு உள்ளவர்களும் சிறுதெய்வ வழிபாடு செய்வதற்கக் காரணம் அவர்கள் சைவசித்தாந்தம் பயிலாததானலேயே ஆகும்.
    சிறு தெய்வ வழிபாடு எப்போது ஏற்பட்டது என்பதற்கான ஆதாரம் ஏதும் இல்லை. அது மக்களின் அறியாமையாலும் திரிபாலும் ஏற்பட்டது என்றே கொள்ளவேண்டும்.
  369. திருமுறைகளில் இடம் பெற்றுள்ள புராண வரலாறுகள் உண்மையாக நடைபெற்றவை தாமா?
    திருமுறைகளில் இடம் பெற்றுள்ள புராண வரலாறுகள் இரண்டுவிதமாகப் பகுத்துப் புரிந்து கொள்ளவது வல்லது.
    தத்துவ விளக்கங்களைக் கூறும் செய்திகள், அவற்றுள் ஒரு வகை மற்றொரு வகை உண்மையாக நடந்தவை. எடுத்துக்காட்டுக்காகச் சிலவற்றை இங்குக் காணலாம்.
    சிவமகா புராணத்தில் ஒரு தலைப்பு எவ்வாறு சிறு சிவ புண்ணியம் செய்த கேடான நிலையில் இருந்தவனும் உய்வு பெற்றனன் எனக்கூறும். அதற்கு அடுத்த தலைப்பே எவ்வாறு ஒரு நல்ல சிவபக்தர் செய்த சிறு சிவ அபராததிற்காகப் பெற்ற கேடு குறித்துக் கூறும். இவை சிறிதளவேனும் சிவ புண்ணியம் செய்ய வேண்டும், செய்யும் பணியைக் கவனத்துடன் குற்றமின்றிச் செய்ய வேண்டும் என்னும் தத்துவங்களை உணர்த்த என்று கொள்ளாமல் உள்ளவாறே கொண்டால் குழப்பமே கிட்டும்.
    இவ்வாறு புராண வரலாறுகளைப் பகுத்தறிந்து புரிந்து கொள்வதே நல்லது
  370. திருமுறைகளை எவ்வாறு படனம் (பாராயணம்) செய்ய வேண்டும்?
    பண்ணோடு பாடத் தெரிந்தவர்கள் அவற்றிக்கு எனக் குறிப்பிடப்பட்டுள்ள பண்ணில் பாடுவதே நல்லது - பண்ணோடு பாடத்தெரியாதவர்கள் தங்களுக்குத் தெரிந்த இராகத்தில் சற்று இசைத்துப்பாடலாம். எப்படிப் பாடினாலும் திருமுறைகளை வாய்விட்டுப் பாடவேண்டும் மனத்திற்குள்ளேயே படனம் செய்வதோ முணுமுணுத்துக் கொண்டு படனம் செய்வதோ கூடாது. அதற்குக் காரணம் திருமுறைகளில் உள்ள சொற்களுக்கு மந்திர ஆற்றல் உண்டு. அந்த ஆற்றல் சொற்களை வாய்விட்டுப் பாடும்போது ஒலி அலைகளாகச் சென்று நம்மைச் சுற்றி ஒரு பேரறற்றலை ஏற்படுத்துகின்றது. திருமுறை பாடுபவர்களைக் கெட்ட ஆவிகள் அணுகுவதற்கு அஞ்சுகின்றன; சிறிய நச்சுப் பிராணிகள் கூட அவர்கள் நெருங்குவதில்லை. திருமுறைச் சொற்களிலுள்ள மந்திர ஆற்றல் திருமுறைப் படனம் செய்பவர்களை அணுகவிடாமல் அவைகளைத் தடுக்கின்றன.
    எனவே திருமுறைகளை வாய்விட்டு சிறிதளவு குரல் வெளிப்படுமாறு படனம் செய்வதே முறையாகும்.
    குறிப்பு :- இன்னும் பல சைவசித்தாந்த நுட்பங்களை நூல்களைக் கற்கும்போது இன்னும் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

1 comment:

...Recently Published Post...

குளிக்கும் போது...

குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள். (கர்மம் செய்தபின்னும், மயானத்திற்க...