Saturday 16 April 2016

19.நான் மாடக்கூடலான படலம்!

வருணனுக்கோ தன் சக்தி எடுபடாமல் போனது குறித்து வருத்தமும், கோபமும் ஏற்பட்டது. எப்படியும் தன் சக்தியை வெளிப்படுத்த வேண்டுமே என்ற எண்ணத்தில், கடல் நீரை உறிஞ்சிச் சென்ற மேகங்களைத் தடுத்து, மேகங்களே! நீங்கள் உறிஞ்சிய நீரை மழையாகக் கொட்டுங்கள்.
ஒருவருக்கொருவர் மோதி பெரும் மின்னலையும், இடியையும் உண்டாக்குங்கள். நீங்கள் எழுப்பும் ஓசை கேட்டு மதுரையே நடுங்க வேண்டும். என்ன! நான் சொல்வது புரிகிறதா! என கர்ஜித்தான். தங்கள் எஜமானனின் உத்தரவை நிறைவேற்ற வேண்டிய நிலையில் இருந்த மேகங்கள், அவன் சொன்னதை அப்படியே செய்தன. கடல் அலைகளில் சிக்கி எழுந்த மக்களெல்லாம், ஐயோ! இந்த மதுரைக்கு இப்படி ஒரு சோதனையா? சொக்கநாதா! சோமசுந்தரப்பெருமானே! அம்மா மீனாட்சி! எங்களைச் சோதிப்பதே உங்கள் வாடிக்கையா? கடலில் மூழ்கி தப்பி எழச்செய்தீர்கள். இப்போது காற்றும், புயலும், மழையும் பிடித்துக் கொண்டதே! வெட்டும் கொடிய மின்னல் எங்கள் கண்களைப் பறித்து விடும் போலிருக்கிறது! இடிச்சத்தம் கேட்டு நாகங்களே நடுங்கும் போது, எங்கள் வீட்டில் இருக்கும் இளம் குழந்தைகளின் நிலையைக் கேட்க வேண்டுமா ஒடுங்கி அஞ்சிக் கிடக்கிறார்களே! எங்களைக் காப்பாற்றியருள், என்று கெஞ்சி அழுதனர்.

மனம் கலங்காத அபிஷேகப் பாண்டியனே கூட, தனக்கு வந்த தொடர் சோதனையால் ஸ்தம்பித்துப் போனான். அவனது நிலை கண்ட சொக்கநாதர், மகனே! கலங்காதே! மதுரைக்கு எத்தகைய சோதனை வந்த போதும் காப்பது என் கடமை, என்று அருளினார். உடனடியாக தனது ஜடாமுடியில் இருந்த நான்கு மேகங்களை கீழே இறக்கி, மேகங்களே! வருணனால் அனுப்பப்பட்ட மேகங்கள் சிந்தும் மழை நீரை நீங்கள் உறிஞ்சி எடுத்து, மதுரையின் நான்கு புறங்களையும் சூழ்ந்து நின்று, நகருக்குள் தண்ணீர் விழாதபடி தடுப்பீர்களாக! என்று உத்தரவிட்டார். அதன்படியே நான்கு மாடங்களையும் மேகங்கள் சூழ்ந்து நின்று மழை நீரை உறிஞ்சி விட்டன. வருணனால் அனுப்பப் பட்ட ஏழு மேகங்களும் தங்கள் சக்தியை இழந்தன. இதுகண்டு வருணன் கலங்கிப் போனான். நான்கு மாடங்களையும் மேகங்கள் சூழ்ந்து நின்ற நான்மாடக்கூடலான மதுரை நகருக்கு அவன் வந்தான். சொக்கநாதப் பெருமானை வணங்கி, எந்தையே! என்னை மன்னியும்! இந்திரன் உம்மை பூசிக்க வந்து அயர்வுடன் நகர் திரும்பினார்.

அப்போது நான் என்னை வாட்டும் வயிற்று நோய் தீர வழி உண்டா? என்று கேட்டேன். உம்மைத் தொழுது வேண்டியருளும்படி கூறினான். உமது மகிமை அறியாது, நான் ஏளனம் செய்தேன். அதற்கு இந்திரன் உண்மை அறிய உம்மை சோதிக்கும்படி என்னிடம் கூறினான். அதனால் உம்மை சோதிக்கவே இந்த இழிசெயலில் ஈடுபட்டு விட்டேன். எனது தவறை பொறுத்தருளும் என மன்னிப்பு கேட்டான். அவனை வாழ்த்திய சொக்கநாதர், வருணா! இது உன்னால் நிகழ்ந்ததல்ல! என்னால் நிகழ்ந்தது. உன் வயிற்றுவலி இன்றோடு நீங்கும், என அருள்பாலித்தார். வலி நீங்கிய வருணன், பொற்றாமரைக் குளத்தில் நீராடி எம்பெருமானை மலர்களால் அர்ச்சித்தான். பின் தன் இருப்பிடம் போய் சேர்ந்தான் வருணன். வருணன் விடுத்த மேகங்களைத் தடுக்கும் பொருட்டு சிவபெருமானது திருச்சடையினின்றும் நீங்கிய மேகங்கள் நான்கு மலைகள் போல் உயர்ந்தன. அவையே நான்கு மாடங்களாய் கூடுதலினாலே அன்று முதல் மதுரைக்கு நான்மாடக்கூடல் என்ற பெயர் உண்டாயிற்று.

No comments:

Post a Comment

...Recently Published Post...

குளிக்கும் போது...

குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள். (கர்மம் செய்தபின்னும், மயானத்திற்க...