Saturday, 16 April 2016

21.கல் யானைக்கு கரும்பு தந்த படலம்!

அமைச்சர்களே! முனிவர்களும் சித்தர்களும் ஆண்டவனையே தங்கள் பணியைச் செய்யும்படி கட்டளையிடும் சக்தி பெற்றவர்கள். சாதாரண மன்னனான என்னை அவர் இருக்கும் இடத்திற்கு வரச்சொன்னதில் என்ன ஆச்சரியம் இருக்கப்போகிறது? அவரை நானே சென்று பார்க்காமல், இங்கே வரவழைக்கச் சொன்னது என் தவறு தான். இதோ புறப்படுகிறேன், என்றவன், மீனாட்சியம்மன் கோயிலுக்கு மந்திரி பிரதானிகளுடன் விரைந்தான்.
சித்தரைச் சுற்றி நின்ற மக்கள் மன்னனைக் கண்டதும் விலகி மரியாதையுடன் கைகட்டி நின்றனர். சித்தர் அவன் வந்ததைக் கண்டுகொள்ளவே இல்லை. சித்தரிடம் சென்ற மன்னன், மாபெரும் சித்தரே! நான் மதுரையின் மன்னன் அபிஷேகப் பாண்டியன். தாங்கள் யார்? எங்கள் மக்களுக்கு இத்தகைய சித்துவேலைகளைக் காட்டுவதன் மூலம் அவர்களிடம் என்ன எதிர்பார்த்து வந்திருக்கிறீர்! மேலும், என்னால் உமக்கு ஆக வேண்டியது ஏதுமிருக்கிறதா! என்றான். சித்தர் கலகலவெனச் சிரித்தார். மன்னா! எனது ஊர் காசி. அங்கே விஸ்வநாதரைத் தரிசித்த நான், தெற்கிலுள்ள புண்ணியம் வாய்ந்த மதுரையம்பதி பற்றி அறிந்து இங்கு வந்தேன்.

இந்தத் தலம் முக்தி ÷க்ஷத்திரம் என்பதை அறிவேன். வாழும் காலத்தில் பெரும் செல்வத்தையும், வாழ்விற்கு பிறகு பிறப்பற்ற நிலையாகிய முக்தியையும் தரும் இந்த ÷க்ஷத்திரத்திற்கு வருவோர் அடையும் பலன்கள் பற்றி கேள்விப்பட்டு இங்கு வந்து தங்கியுள்ளேன். எனக்கு ஏதாவது வேண்டுமா என்றாயே! நான் கேட்பதைத் தரும் வல்லமை உன்னிடம் இருக்கிறதா! நான் நினைத்தால் விண்ணுலகை இந்த மண்ணுக்கும், மண்ணுலகை விண்ணுக்கும் மாற்றி விடுவேன். அப்படிப்பட்ட சக்தி மிக்க என்னிடம், உனக்கு ஏதாவது வேண்டுமானால் கேள், தருகிறேன். உன் மக்கள் என்னிடம் என்ன கேட்கிறார்களோ அதை அவர்களுக்கு தருவது போல், உனக்கும் நீ கேட்பது கிடைக்கும், என்றார். சித்தர் சொன்னதைக் கேட்ட மன்னன் திகிலடைந்தான். இருப்பினும் அவரை சோதிக்க நினைத்த அவன், அங்கு நின்ற ஒருவர் வைத்திருந்த கரும்பைக் கையில் வாங்கினான். சித்தரே! நீர் வல்லமை மிக்கவர் என்பது உண்மையானால், இந்தக் கரும்பை, எங்கள் சுந்தரேஸ்வரரின் இந்திர விமானத்தை தாங்கி நிற்கும் இந்தக் கல் யானை சாப்பிடுகிறதா என பார்க்க வேண்டும். உம்மால் அது முடியுமா? என்றான். சித்தர் சிரித்தார். மன்னா! என்னைச் சோதித்துப் பார்க்க நினைக்கிறாயோ! என்றவர், கல்யானையை நோக்கி கண்ஜாடை செய்தார். அவ்வளவுதான்! கல் யானையின் கண்கள் நிஜக்கண்களாயின. அது சுற்றுமுற்றும் பார்த்தது. அதன் தும்பிக்கை அசைந்தது. மேலும், கோயிலே நடுங்கும் வகையில் பிளிறியது. மன்னனின் கையில் இருந்த கரும்பைப் பிடுங்கித் தின்ற போது, கரும்புச்சாறு அதன் வாயில் இருந்து ஒழுகியது. சுற்றி நின்ற மக்கள் ஆரவாரம் செய்தனர்.

மன்னன் என்ன செய்வதென தெரியாமல் விழித்தான். சித்தராக வந்த சுந்தரேஸ்வரர் அத்துடன் மன்னனை விட்டாரா என்ன! கல்யானையை நோக்கி அவர் மீண்டும் கண்ஜாடை காட்டினார். அந்த யானை மன்னனின் கழுத்தில் கிடந்த முத்துமாலையைப் பிடித்து இழுத்தது. கண் இமைக்கும் நேரத்தில் வாயில் போட்டு விழுங்கிவிட்டது. மன்னனுக்கு கடும் ஆத்திரம். அவனது ஏவலர்கள் வேல்கம்புகளுடன் சித்தரைத் தாக்க ஓடினர். தன்னை தாக்க வந்தவர்களை சித்தர் ஒரு பார்வை தான் பார்த்தார். அவ்வளவு தான். அனைவரும் கற்சிலை போல் அந்தந்த இடங்களில் நின்று விட்டனர். சித்தரின் அருமையை அபிஷேகப் பாண்டியன் புரிந்து கொண்டான். தனது தவறைப் பொறுக்கும்படி சித்தரின் திருவடிகளில் விழுந்து வேண்டினான். சித்தர் அவனை மன்னித்ததுடன், பாண்டிய மன்னா! அறியாமல் நீ செய்த பிழையைப் பொறுத்துக் கொண்டேன். உனக்கு வேண்டும் வரம் கேள், என்றார். என் குலப்பெருமை துலங்கும் படியாக எனக்கொரு மகன் பிறக்க வேண்டும், என பாண்டியன் அவரிடம் வேண்டிக்கொள்ளவே, அவ்வாறே குழந்தை பிறக்கும் என ஆசிர்வதித்தார் சித்தர். பின்னர் கல்யானை தான் விழுங்கிய மாலையை மன்னனிடமே ஒப்படைத்தது. அதைக் கண்டு அதிசயித்த மன்னன், அதைக் கண்களில் ஒற்றிக்கொண்டு நிமிர்ந்து பார்த்தான். அங்கே சித்தரைக் காணவில்லை. சிலை போல் நின்ற காவலர்கள் உயிர் பெற்று என்ன நடந்ததென தெரியாமல் திகைத்து நின்றனர். சித்தராக வந்தது சோம சுந்தரப்பெருமானே என்பதை அறிந்த அனைவரும் அவரது சன்னதிக்கு சென்று வணங்கினர். சில காலம் கழித்து அபிஷேகப் பாண்டியனுக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்தது. குழந்தைக்கு விக்ரமன் என பெயர் சூட்டினர். அவன் பல கலைகளும் கற்றான். அவன் இருபது வயதை எட்டியதும் பட்டாபிஷேகம் செய்து வைக்கப் பட்டது. பின்னர் அபிஷேகப் பாண்டியன் இந்தப் பூவுலக வாழ்வை நீத்தான்.

No comments:

Post a Comment

...Recently Published Post...

குளிக்கும் போது...

குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள். (கர்மம் செய்தபின்னும், மயானத்திற்க...