Friday 14 February 2014

பன்னிரண்டாம் நாள் போர்

தருமரை உயிருடன் பிடிக்க துரோணர் நேற்று செய்த அணைத்து முயற்சியும் பலனில்லாமல் போனது. காரணம் அர்ஜுனன் என்னும் கேடயம்.

தருமரை உயிருடன் பிடிக்க வெண்டுமெனில் அர்ச்சுனனை அவர் அருகில் இருக்க விடக்கூடாது. போரை வேறு திசைக்கு மாற்றி அர்ச்சுனனை அங்கு இழுக்க வேண்டும் எனத் திட்டம் தீட்டினர் கௌரவர்கள். திரிகர்த்த மன்னன் சுசர்மனும் அவனது சகோதரர்கள் சத்தியரதன், சத்தியவர்மன், சத்தியகர்மன் மற்றும் அவர்களது மகன்கள் 35 பேரும் அர்ஜுனனை கொள்வோம் அல்லது போரிட்டு மடிவோம் என சபதம் செய்தனர். தென்திசையிலிருந்து அர்ச்சுனனுக்கு சவால் விட்டனர். அர்ச்சுனன் பாஞ்சால நாட்டு மண்ணாகிய துருபதனின் சகோதரன் சத்யஜித்திடம் தருமரை பாதுகாக்கும் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, திரிகர்த்த மன்னனையும் அவருடைய சகோதரர்களையும் எதிர்த்துச் சென்றான்.

கடுமையாக நடைபெற்ற போரில் கண்ணனின் திறமையால் அர்ச்சுனன் தேர் எல்லா இடங்களிலும் சுழன்றது. தேர் ஓட்டுவதில் கண்ணுக்கு நிகர் ஒருவன் மட்டுமே. அவன் கௌரவ படையில் இருந்த சல்லியன் என்னும் மன்னன். பகைவர்களும் அர்ஜுனனிடம் 'வெற்றி அல்லது வீரமரணம்' என்று போரிட்டனர். திரிகர்த்த வேந்தனுக்குத் துணையாக அவன் சகோதரர்களையும் தவிர்த்து, பல்லாயிரக்கணக்கான வீரர்களும் சேர்ந்து போரிட்டனர். இலக்கு அர்ஜுனன் ஆயிற்றே, ஆயரம் ஆயிரம் வீரர்களை திரிகர்த்த வேந்தனுக்கு துணையாக அனுப்பினான் துரியோதனன். தருமாரோ அங்கு ஆபத்தில் இருக்கிறார், இங்கோ படை வீரர்கள் வந்த வண்ணமாகவே இருந்தனர். கண்ணனின் அறிவுரை படி அர்ச்சுனன் வாயுவாஸ்திரத்தை விடுத்து அனைவரையும் வீழ்த்தினான். சுசர்மன் மட்டும் தப்பினான்.

தென்திசைப்போரை முடித்துக் கொண்டு பார்த்திபன் தருமரைக் காக்கும் பொருட்டுத் துரோணரை எதிர்த்தான். ஆனால் துரோணரோ தருமரை உயிருடன் பிடிப்பதில் குறியாய் இருந்தார். அன்றைய போரில் துரோணரின் திறைமை அனைவரையும் கவர்ந்தது. துரோணரை முறியடிக்க திருஷ்டத்துய்மன் முயன்றான். தனது மரணம் இவனால் தான் என்பதை அறிந்த துரோணர் அவனைத் தவிர்க்கப் பார்த்தார். அப்போது துரியோதனனின் தம்பியருள் ஒருவனான் துர்முகன் திருஷ்டத்துய்மனைத் தாக்கி போரிட, துரோணர் அங்கிருந்து நகர்ந்தார். போர் செய்வதற்காகவே வேழ்வியில் இருந்து தோன்றிய திருஷ்டத்துய்மன் துர்முகனின் வில்லை முறித்து, தேரையும் தவிடுபொடி ஆக்கினான். துர்முகன், துச்சாதனனின் தேரில் ஏறி தஞ்சம் அடைந்தான்.

அதே நேரத்தில் சத்யஜித் தன் திறமையைக் காட்டி தருமரைக் காக்க முற்பட்டான். அவனுக்கும் துரோணருக்கும் நடந்த போர் தீவிரமாய் இருந்தது. துரோணர் மீது பல அம்புகளைச் செலுத்தினான் அவன். அதனால் கோபமுற்ற துரோணர் விட்ட அம்பு, அவன் தலையைக் கொய்தது. சத்யஜித் வீர மரணம் எய்தினான். சத்யஜித்தின் மரணம் கண்ட விராடனின் தம்பி சதானீகன் துரோணரை எதிர்க்க, அவனையும் அவர் கொன்றார். இவர்கள் இருவரின் மரணம் பாண்டவர்களுக்கு பேரிழப்பு தான்.

துரோணர் தருமரை சிறைப்பிடித்து விடுவாரோ என்னும் பயம் ஏற்பட, பீமன் அங்கு வந்தான். அவன் மீது பல யானைகளை ஏவினான் துரியோதனன். அவைகளை பந்தாடினான் பீமன். அபிமன்யூவும் கௌரவர் படையை எதிர்த்து போராடினான். இன்றும் அவன் துரியோதனனின் ஐந்து தம்பிகளை கொன்று அர்ஜுனனை கௌரவித்தான். அவன் ஆற்றல் கண்டு அர்ஜுனன் மகிழ்ச்சியின் உச்சியிற்கே சென்றான்.

துருபதன், சிகண்டி, கடோத்கஜன், சுவேதன், ஆகியோரை கர்ணனை கவனிக்கும் படி திருஷ்டத்துய்மன் வியூகம் வகுத்திருந்தான். அவர்களும் அவ்வாறே செய்தனர். கர்ணன் ஒரு மாவீரன். மகாரதன். அவன் ஆற்றல் சாதாரணமானதல்ல என்பதை இவர்கள் நன்கு அறிவார்கள். இருப்பினும் தங்கள் முழு திறனை கொண்டு அவனை எதிர்த்தனர். கடோத்கஜன் அரக்கியின் மகன் என்பதால் மாயங்கள் அறிந்தவன். அவன் செய்த மாயங்களை கர்ணன் சூரிய அஸ்திரம் கொண்டு சுலபமாய் தகர்த்தான். இவர்கள் நால்வரின் தாக்குதலையும் ஒருவனாய் நின்று எதிர்த்தான். இதை கண்ட அர்ஜுனனும் வியந்தான்.

அப்போது ப்ராக்ஜோதிஜ மன்னனான பகதத்தன் சுப்ரதீபம் என்னும் யானையில் வந்து பீமனுடன் போரிட்டான். அந்த யானை பீமனின் தேரை தகர்த்தது. பின் பீமனை தன் துதிக்கையால் பற்றி தூக்கி எறிய முற்பட்டது. பீமன் அதன் பிடியிலிருந்து தப்பி, அதன் மர்மஸ்தானத்தை தாக்கினான். அந்த வேதனையிலும் அது பீமனை மிதித்துத் தள்ளப் பார்த்தது. ஆயினும் பீமன் அதனிடமிருந்து தப்பினான். பின் அந்த யானை அபிமன்யூவின் தேரைத் தூள் தூளாக்கியது. சாத்யகியின் தேரும் அதே நிலையை எட்டியது. யானையின் அட்டகாசத்தை அறிந்த அர்ச்சுனன் விரைந்து வந்தான் அதனைக் கொல்ல.

அர்ச்சுனன் பகதத்துடன் கடும் போர் புரிந்தான். அர்ச்சுனன் எய்த ஒரு அம்பு யானையின் கவசத்தைப் பிளந்து மார்பில் ஊடுருவியது. யானை வீழ்ந்து மாண்டது. ஆத்திரம் அடைந்த பகதத்தன் சக்தி ஆயுதத்தை அர்ஜுனன் மீது செலுத்தினான். கண்ணன் அதை தன் மார்பில் தங்கியதால் அர்ஜுனன் உயிர் பிழைதான். பின் அர்ச்சுனன் செலுத்திய அக்னி அஸ்திரம் மாவீரன் பகதத்தனைக் கொன்று வீழ்த்தியது.

பின்னர் அர்ச்சுனன் திருதிராட்டிர மன்னனின் மைத்துனர்களான அசலன், விகுஷன் ஆகியோரைக் கொன்றான். சகோதரர்களின் மரணத்தை அறிந்த சகுனி மாயையால் இருள் பரவச் செய்தான். அர்ச்சுனன் ஒளிமய கணை ஒன்றால் அந்த இருளைப் போக்கினான். சகுனி பயந்து வேறிடத்திற்கு நகர்ந்தான். தருமரை பிடித்துவிடலாம் என்ற துரோணரின் கனவு தகர்ந்தது. கௌரவர்கள் கலங்க, பாண்டவர்கள் மகிழ அன்றைய போர் முடிவுக்கு வந்தது.

அன்றைய போர் கண்டு சினம் கொண்ட துரியோதனன் துரோணரிடம் சென்று கடுமையாகப் பேசினான். ' தருமரைப் பிடிக்கும் வாய்ப்பை தவற விட்டீர்கள். வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டீர். நீர் சொல்வது ஒன்று செய்வது ஒன்று ' என்றான்.

இதனால் துரோணர் கோபம் அடைந்து ' துரியோதனா உனக்கு பலமுறை சொல்லியுள்ளேன். அர்ச்சுனனைப் போரில் வெல்ல முடியாது. போர்க்களத்தில் அவன் எப்படி தருமரைப் பாதுகாத்தான் என்று பார்த்தாயா? எப்படியும் நாளை நான் உன்னத போர் முறை ஒன்றைக் கையாளப் போகிறேன். அர்ச்சுனனை நீ எப்படியாவது வெளியே கொண்டு செல்' என்றார். துரோணரின் பேச்சில் நம்பிக்கை வர துரியோதனன் சென்றான்.

ஆதவன் செவ்வாடை உடுத்த... அன்றைய போர் முடிவிற்கு வந்தது...

No comments:

Post a Comment

...Recently Published Post...

குளிக்கும் போது...

குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள். (கர்மம் செய்தபின்னும், மயானத்திற்க...