Saturday, 18 May 2013

28. நாகமெய்த படலம்!

அனந்தகுண பாண்டியனுனின் ஆட்சியால் அமைதியாக இருந்த மதுரை நகரில் மீண்டும் சமணர்களின் ஆதிக்கம் வேரூன்ற துவங்கியது. அவர்கள் சைவ மன்னனான அனந்தகுண பாண்டியனை ஒழித்துக்கட்ட திட்டமிட்டனர்.
இதற்காக வைகை கரை ஓரம் மிகப்பெரிய யாகசாலை ஒன்றை அமைத்தார்கள். அனந்தகுன பாண்டியனை கொல்வதற்காக அபிசார ஹோமம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த ஹோமம் செய்யும்போது கெட்ட சக்தி ஒன்று வெளிப்படும். அந்த சக்தியை மன்னனின் மீது ஏவி அவனைக் கொல்வது சமணர்களின் திட்டம். யாகம் வெற்றிகரமாக துவங்கியது. சமணர்கள் எதிர்பார்த்தது போலவே கோரைப் பற்களும், கொடிய உருவமும், தீப்பொறி பறக்கும் விழிகளும் கொண்ட அரக்கன் ஒருவன் எழுந்தான். அவனது சிரிப்பொலி மதுரை நகரையே உலுக்கியது. அவன் சமணர்களை நோக்கி, எனக்கு கடுமையாக பசிக்கிறது. உடனடியாக எனக்கு உணவிடாவிட்டால் உங்களையே தின்று விடுவேன், என எச்சரித்தான். சமணர்கள் அவனிடம், அரக்கனே! உனக்கு மிகப்பெரிய விருந்து காத்திருக்கிறது. இந் நாட்டின் மன்னன் திடகாத்திரமானவன். அவனைப் போலவே திருநீறு அணிந்த பலர் இவ்வூரில் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அத்தனை பேரையும் சாப்பிட்டு உன் பசியை தீர்த்துக் கொள், என்றனர். அரக்கனின் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது. உடனடியாக புறப்படுகிறேன், என்று கூறி அவர்களிடம் விடைபெற்று, நாகத்தின் வடிவெடுத்து ஊருக்குள் புகுந்தான். கொடிய விஷம் கொண்ட நாகமாக அது இருந்தது.

அந்த பாம்பின் மூச்சுக்காற்று பட்டு மதுரையிலிருந்த அத்தனை நெல் வயல்களும், கரும்பு வயல்களும் பட்டுப்போயின. சாலையோரம் நடப்பட்டிருந்த மரங்கள் கருகிவிட்டன. அந்த பாம்பு தனது வாயை பிளந்தது. அது மிகப்பெரிதாக இருந்தது. வழியில் தென்பட்ட அத்தனை மிருகங் களையும் அது விழுங்கியது. அந்த பாம்பின் அட்டகாசம் குறித்து மன்னனுக்கு தகவல் சென்றது. மக்களும் மன்னனிடம் ஓடிச் சென்று தங்களுக்கு ஏற்பட்ட இன்னலை தெரிவித்தனர். அனந்தகுண பாண்டியன் அவர்களிடம், இதற்காக நீங்கள் அச்சப்படத் தேவையில்லை. நம் சோமசுந்தர பெருமான் ஆலகால விஷத்தையே அருந்தியவர். அவரது திருவடிகளை நம்பியிருக்கும் நாம் அவரையே சென்று பணிவோம். நானும் அந்த பாம்பை கொல்வதற்குரிய நடவடிக்கையை எடுக்கிறேன், என சொல்லி ஆயுதங்களுடன் புறப்பட்டான். படைகள் பின்தொடர்ந்தன. முதலில் மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் சென்றாலும் அம்பிகையை வணங்கி விட்டு, சுந்தரேசர் சன்னதிக்கு சென்று தன்னுடைய குறையை பணிவுடன் தெரிவித்தான். அப்போது பாண்டியனின் காதுக்கு மட்டும் கேட்கும் வகையில், பாண்டியனே! அந்த பாம்பைப் பற்றி எந்தக் கவலையும் வேண்டாம். நாகத்தை வெல்லும் ஆற்றலை உனக்கு அளிக்கிறேன். உடனடியாக புறப்படு, என்றார். மிகுந்த மகிழ்ச்சியுடன் பாண்டியன் அங்கிருந்து கிளம்பினான். அதற்குள் பாம்பு மதுரை நகரின் மேற்கு வாசலை எட்டிவிட்டது. சோமசுந்தரப் பெருமானின் திருவாக்கே கிடைத்துவிட்டதால், அனந்தகுணபாண்டியன் சற்றும் பயமின்றி அதை எதிர்கொள்ள அங்கு வந்து சேர்ந்தான். நாகாசுர பாம்பு அவனை நோக்கிப் பாய்ந்தது. பாண்டியன் தன் வில்லெடுத்து அம்பை அதன் மீது எய்தான்.

அது இரண்டு கூறாகப் பிளந்து கீழே விழுந்தது. ஆனால், அந்தக் கொடிய நாகம் வேறுவழியில் தன் வேலையை காட்டியது. தன் வாயைப் பிளந்து நஞ்சைக் கொட்டியது. நஞ்சுக்காற்று மதுரை நகரெங்கும் பரவியது. மக்கள் ஆங்காங்கே மயங்கி விழுந்தனர். அனந்தகுணபாண்டியனும் மயக்கநிலைக்கு வந்துவிடுவோமோ என்ற நிலையில், சற்று சுதாரித்துக் கொண்டு கோயிலுக்கு விரைந்து வந்து உள்ளே சென்றுவிட்டான். சோமசுந்தரர் சன்னதிக்குச் சென்று, நீலகண்டனே! அன்றொரு நாள் பாற்கடலை தேவர்கள் வாசுகி பாம்பு கொண்டு கடைந்தபோது, வெளிப்பட்ட விஷத்தை உண்டு அவர்களைக் காத்தாய். இன்று உன் ஆசியுடன் பாம்பை இரண்டாகப் பிளந்தும் கூட அதன் நஞ்சு எங்களைக் கொல்ல வருகிறது. நீயே காப்பாற்ற வேண்டும், என்று சரணடைந்தான். அப்போது ஒரு அதிசயம் நிகழ்ந்தது. சோமசுந்தரப் பெருமான் நேரில் அங்கு தோன்றினார். அவரது தலையைச் சாய்த்து, தான் சூடியிருந்த சந்திரப்பிறையில் இருந்து அமிர்தத் துளி ஒன்றைச் சிந்தினார். அது ஊரெங்கும் பரவியது. பாம்பின் விஷத்தை அமிர்தம் முறித்தது. அந்த விஷம் யார் பாம்பை ஏவினார்களோ அவர்களை நோக்கிப் பாய்ந்தது. மதத்தின் பெயரால், தங்களை உயர்ந்தவர்களாகக் காட்டிக் கொள்ள நினைத்த அவர்களில் பலர் அழிந்து போனார்கள். செய்தார்க்கே செய்தவினை என்ற சொற்றொடரை உறுதிப் படுத்திய சிவபெருமான் மறைந்து விட்டார். மக்கள் மயக்கம் தீர்ந்து எழுந்து, நடந்த அதிசயத்தைக் கேள்விப்பட்டு, சோமசுந்தரரின் சன்னதிக்குச் சென்று நன்றிக்கண்ணீர் வடித்தனர். பாம்பு விழுந்த இடமே நாகமலை என்ற பெயர் பெற்றது.

No comments:

Post a Comment

...Recently Published Post...

குளிக்கும் போது...

குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள். (கர்மம் செய்தபின்னும், மயானத்திற்க...