Saturday 18 May 2013

30.மெய் காட்டிட்ட படலம்!

பூஷணின் ஆட்சிக்காலத்தில், சேதிராயன் என்ற குறுநில மன்னன், பல பெரிய நாடுகளிலும் புகுந்து தன் ஆதிக்கத்தை நிலைநிறுத்தி, தன்னை பேரரசனாக மாற்றிக் கொள்ள திட்டமிட்டான். 15 பெரிய நாடுகள் மீது அவனுக்கு கண் இருந்தது. அதில் பாண்டிய நாடும் அடக்கம்.
இந்தத் தகவல் ஒற்றர்கள் மூலமாக குலபூஷணனுக்கு கிடைத்தது. அப்போது, பாண்டியநாட்டின் சேனாதிபதியாக சவுந்தர சாமந்தன் என்பவன் இருந்தான். சாமந்தன் மிகப்பெரிய வீரன். அவனது தலைமையில் பாண்டியப்படைகள் ஏதாவது ஒருநாட்டிற்குள் நுழைகிறது என்றால், அந்த நாட்டின் தலைவன், யாரும் சொல்லாமலே ஓடிவந்து சரணடைந்து விடுவான். அந்தளவுக்கு பலசாலியானாலும் பக்திமானாகவும் விளங்கினான் சாமந்தன். அவன் சிறந்த சிவபக்தன். கையில் வாளெடுத்து போர் செய்யும் கொடும் தொழிலுக்குச் சொந்தக்காரனாக இருந்தாலும், நெற்றி நிறைய திருநீறு அணிய அவன் மறந்ததில்லை. தினமும், மீனாட்சியம்மையையும், சொக்கநாதரையும் கோயிலுக்குச் சென்று வணங்கத்தவறியதில்லை. எங்கேனும் போர்க்களத்துக்கு சென்றுவிட்டால், அந்த இடத்தையே சொக்கநாதரின் கோயிலாக பாவனை செய்து வணங்குவான். அந்தளவுக்கு மகாபக்திமான் சவுந்தர சாமந்தன். அவனை அழைத்த குலபூஷணன், சேனாதிபதியாரே! குறுநில மன்னன் சேதிராயன் நம் நாட்டைத் தாக்கப் போவதாக தகவல் வந்துள்ளது. அவனது நால்வகைப் படையும் தயார் நிலையில் இருக்கிறதாம். அவன் வருவதற்குள் நாம் நமது படைபலத்தை மேலும் பெருக்க வேண்டும். இதற்கு பெரும் செலவு ஆகும். நீர் அரண்மனைக் கஜானாவிற்கு சென்று, வேண்டுமளவு பொருள் எடுத்துக் கொள்ளும். படைபலத்தைப் பெருக்க நடவடிக்கை எடும், என்றான். சாமந்தனும் அதை ஏற்று, அரசே! சேதிராயன் குறி வைத்துள்ள மற்றநாடுகளின் தலைவர்களிடமும் பேசுகிறேன். படைபலத்தை விரைவில் பெருக்குகிறேன், என்றான். கஜானவிற்கு சென்ற அவன் பை நிறைய பொன்னும் பொருளும் அள்ளிக் கொண்டான். வீட்டிற்கு வந்த அவன் பணமூட்டையைப் பிரித்துப் பார்த்தான்.

என்ன உலகம் இது! ஆயுதங்களை அதிகரிப்பதற்கும், பிறர் மீது படையெடுத்து அவரவர் நிலத்தை ரத்த பூமியாக்குவதற்குமா இந்த செல்வம் பயன்பட வேண்டும். எந்த நாடாக இருந்தாலும், படைபலத்திற்கு தானே அதிகம் செலவழிக்க வேண்டியுள்ளது! பாதுகாப்புக்காக செலவிடும் இந்தத் தொகையை ஆன்மிகம் தழைக்க செலவிட்டால், பலருக்கும் பல வசதிகள் கிடைக்குமே! உலகத்தில் அமைதி பொங்குமே! என எண்ணினான். ஆம்...இந்த பணத்தை படைபலம் பெருக்க பயன்படுத்தக்கூடாது. சிவனடியார்களின் தொண்டுக்கு பயன்படுத்துவோம், என முடிவே செய்து விட்டான். களஞ்சியத்திலுள்ள பொருளை எடுத்துக் கொண்டு, சிவனடியார்களை நோக்கிச் சென்றான் சாமந்தன். அவர்களுக்கு தேவைப் படுமளவு வாரி வழங்கினான். திருக்கோயில்களை சீரமைக்க பெரும் பணத்தை செலவிட்டான். மனநிறைவு பிறந்தது. படை திரட்டாமல் போனால், பாண்டியன் தரும் தண்டனையை ஏற்கவேண்டும் என்பது அவனுக்குத் தெரியும். அதற்காக அவன் கவலைப்படவில்லை. ஆனால், இந்த பணத்தை இவனே பதுக்கிக் கொண்டதாக கெட்ட பெயர் வருமே! அப்படி ஒரு கெட்ட பெயர் வந்தால், மக்கள் மத்தியில் நடமாட முடியாதே! எல்லோரும் தனக்கு அரசதுரோகி என்று பட்டம் கட்டிவிடுவார்களே! என்றெல்லாம் கவலைப்பட்டான். தன் மனக்கவலைக்கு மருந்து தேடி சுந்தரேஸ்வரர் சன்னதிக்குச் சென்றான். இறைவா! நீயே எனக்கு துணை, என வணங்கிவிட்டு வந்தான். சில மாதங்களுக்குப் பிறகு குலபூஷண பாண்டியன், சாமந்தனை அழைத்தான்.

சேனாதிபதி! சேதிராயனை எதிர்க்கும் படை திரட்டுவதற்காக களஞ்சியத்தில் இருந்து பெரும் பொருளை எடுத்துச் சென்றீர்! ஏறத்தாழ ஒரு ஆண்டாக படை திரட்டும் பணியில் ஈடுபட்டிருப்பீர்! அந்த பெரும்படையின் அணி வகுப்பை நான் காண வேண்டும். இங்கே நடக்கும் அணிவகுப்பு பற்றி அறிந்தவுடனேயே, சேதிராயன் ஒடுங்கி விட வேண்டும். நாளை மாலை நீர் இதுவரை சேர்த்துள்ள படையை என் முன் நிறுத்த வேண்டும். நான் அதைப் பார்வையிட வேண்டும், என உத்தரவிட்டான். சாமந்தனுக்கு தூக்கி வாரி போட்டது. எடுத்த பணத்தையெல்லாம் இறைப்பணிக்கு செலவிட்டோம். ஒரு நபரைக் கூட வேலைக்கு அமர்த்தவில்லை. இனி, அந்த சுந்தரேஸ்வரப் பெருமான் தான் எனக்குத்துணை! சொக்கநாதா! சோமசுந்தரக் கடவுளே! நீரே எனக்கு அபயமளிக்க வேண்டும். உன் அடியார்களுக்கே பணத்தை செலவிட்டேன். நீ குடியிருக்கும் இல்லங்களைச் சீரமைக்க பெரும் தொகையை தந்தேன். இப்போது, இக்கட்டில் சிக்கியிருக்கிறேன். என்னைக் காப்பாற்று, என்று கதறினான். அப்போது அசரீரி ஒலித்தது. சாமந்தா! கவலை கொள்ளாதே. நாளை மாலை மன்னனை மைதானத்துக்கு வரச்சொல். அங்கே, நாம் படைகளுடன் வருவோம், என அருள்வாக்கு பிறந்தது. சோமசுந்தரப் பெருமானே இவ்வாறு கருணை செய்துவிட்டதால், மகிழ்ச்சியடைந்த சாமந்தன், மறுநாள் மன்னனை வரச்சொல்லி விட்டு, மைதானத்தில் காத்திருந்தான். அணிவகுப்பைக் காண மக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இறைவனே வாக்குறுதி அளித்துவிட்டதால், சாமந்தன் நம்பிக்கையுடனும், பெருமிதத்துடனும் தனக்கே தெரியாத அந்த படையைக் காண தயாராக மன்னன் அருகில் நின்றான்.

குலபூஷணனும் ஆர்வமாயிருந்தான். சேனாதிபதியே! படைகளை வரச் சொல்லும், என்று ஆணையிட்டான். சாமந்தன் கண்களை மூடி சுந்தரேஸ்வரரை தியானித்தான்.சொக்கநாதப் பெருமானே! தாங்கள் எனக்களித்த வாக்குறுதிப்படி உடனே எழுந்தருளுங்கள், என்றான். அவ்வளவு தான்.... ஹோவென்ற பேரிரைச்சலுடன் மதுரை நகரே குலுங்கும் வண்ணம் படைகள் அணிவகுத்து வந்தன. நடுநாயகமாக, சொக்கநாதர் ஒரு வாலிபனின் வடிவில் வெள்ளைக்குதிரையில் ஏறி கம்பீரமாக தலைமை தாங்கி வந்தார். யானை, குதிரை, தேர்ப்படை, காலாட்படை என நால்வகைப் படைகளும் வந்தன. ஒன்றல்ல! இரண்டல்ல! சிவபெருமானைச் சூழ்ந்து 78 ஆயிரம் வீரர்கள்... அல்ல.. அல்ல... 78 ஆயிரம் சிவகணங்கள், மானிட வடிவெடுத்து படைவீரர்களைப் போல் சூழ்ந்து வந்தனர். அனைவரும் திருநீறு, ருத்ராட்சம் அணிந்து காட்சி தந்தனர். படைகள் எழுப்பிய புழுதிப்படலத்தில் நகரே மறைந்துவிட்டது. சாமந்தன் அதிசயத்து பரவசத்தில் நின்றான். மன்னன் குலபூஷணன் மகிழ்ச்சியில் திளைத்தான். அங்கம், வங்கம், கலிங்கம், சிங்களம், மாளவம், குலிந்தம், கொங்கணம், தெலுங்கு நாட்டுப் படைகள், சவுட, ஒட்டிய, கொல்ல, கூர்ச்சர நாடர் படைகள், விதேச, கடார, கேகய, மரகத, மராட்டியம், காஞ்சி நாட்டு வீரர்கள் பாரதமெங்கிலும் இருந்து படைகள் வந்து குவிந்தது கண்ட மன்னன், இப்போதே மலைநாட்டு மன்னன் சேதிராயன் தொலைந்தான் என வீரக்குரல் எழுப்பினான். சாமந்தனை பாராட்ட வார்த்தைகளே கிடைக்காமல், அவனை கட்டித் தழுவிக்கொண்டான். படைத்தலைவனாக வந்த ஈசனின் முகப்பொலிவை வைத்த கண் வாங்காமல் பார்த்தான். இவ்வளவு நேர்த்தியாக வந்த ஈசனை, சாதாரண மனிதனாகக் கருதி பொன்னும், பொருளும் வாரிக்கொடுத்தான். சாமந்தனுக்கும் அவ்வாறே பல பரிசுகளைத் தந்தான். நல்ல நேரம் வந்தால் மொத்தமாக வந்து மனிதனை திக்குமுக்காட வைத்துவிடும். இந்த இனிய நேரத்தில் ஒற்றன் ஒருவன் வந்து மன்னரை அடிபணிந்தான்.

பாண்டிய மாமன்னரே! தங்கள் சமூகத்துக்கு இனிய சேதி ஒன்று கொண்டு வந்துள்ளேன். நமது பகைவன் சேதிராஜன், காட்டுக்கு வேட்டைக்குச் சென்ற போது, புலி தாக்கி இறந்துவிட்டான், என்றான். மன்னன் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன், அந்த ஒற்றனுக்கு முத்துமாலைகள், நவரத்தினங்களைக் காணிக்கையாக்கினான். பின்னர் படை கொண்டு வந்த சோமசுந்தரரை நோக்கி,இப்போது படையெடுப்புக்கு அவசியமில்லாமல் போயிற்று. எதிரி மன்னன் மாண்டுவிட்டான். நீர் படைகளை பாசறைக்கு அழைத்துச் செல்லும். தேவைப் படும் போது இங்கு வரலாம், என்றான். அவ்வளவு தான்! படைத்தலைவரும் அங்கு நின்ற படைகளும் மறைந்து விட்டனர். மன்னன் திகைத்தான். சாமந்தன் தன் தன்மானம் காக்கப்பட்டது குறித்து மகிழ்வுடன் நின்றான். கஜானாவில் எடுத்த பணத்துக்கு சிவசேவை செய்தேனே தவிர படை திரட்டவே இல்லை. சோமசுந்தரரிடம் என் நிலையை எடுத்துச் சொன்னேன். அவரே வருவதாக அசரீரி ஒலித்தது. அதுபோல் வந்தார். சேதிராஜனின் ஆயுளையும் முடித்தார். படைகளுடன் மறைந்து விட்டார், என்றான்.ஆஹா... சேதிராஜனைக் கொல்வதற்கு சோமசுந்தரரை நம்பாமல், படைகளைத் திரட்ட சொன்னேனே! என்னே என் அறிவீனம்! அதே நேரம், சாமந்தனின் முயற்சியால் தானே கடவுளே இங்கு வந்து காட்சி தந்தார். மதுரை மக்களெல்லாம் அவரால் தானே இறைவனின் காட்சியைத் தரிசிக்க முடிந்தது, எனச் சொல்லி, தன் களஞ்சியத்திலுள்ள செல்வம் முழுவதையும் சாமந்தனிடமே ஒப்படைத்தான்.சிவசேவைக்கு அந்த பெருஞ் செல்வம் செலவிடப்பட்டது. மதுரையில் வைகை வற்றாமல் ஓடியது. அறநெறி தழைத்த அதே வேகத்தில், நம்மை விட சிவபக்தியில் சிறந்தவர் யாருமில்லை என்ற அகந்தையும் மன்னன் உள்ளத்தில் வேர் விட்டது. அதனால், வேதம் கற்ற அந்தணர்களைக் கூட மதிக்கத் தவறினான். இதன் விளைவாக பாண்டியநாட்டுக்கு மீண்டும் சோதனை வந்தது.

No comments:

Post a Comment

...Recently Published Post...

குளிக்கும் போது...

குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள். (கர்மம் செய்தபின்னும், மயானத்திற்க...