Saturday 18 May 2013

56. இடைக்காடன் பிணக்கு தீர்த்த படலம்!

இலக்கண, இலக்கியங்களில் கைதேர்ந்த குசேல வழுதி பாண்டியன், மதுரையை ஆண்டு வந்தான். அவன் சங்கப்புலவர்களுக்கு நிகராக செய்யுள் இயற்றும் திறமை பெற்றவன். ஒரு சமயம், சங்கப்புலவரான கபிலரின் நண்பர், இடைக்காடர் என்பவர் தான் இயற்றிய பிரபந்த நூல் ஒன்றை மன்னனிடம் படித்துக்காட்ட ஆசைப்பட்டார்.
மன்னனும் அவரை வரச்சொல்லி விட்டான். இடைக்காடர் தனது நூலை வாசிக்க ஆரம்பித்தார். அதைக் கேட்டுக்கொண்டிருந்த மன்னனின் கவனம் சிதறியது. சில இடங்களில், பாடல் வரிகள் மிகவும் ரசிக்கத்தக்கதாக அமைந்திருந்தது. ஆனால், மன்னன் அதை பெயரளவுக்கு கூட பாராட்டவில்லை. சில சமயங்களில், சுதாரித்துக் கொண்டு, தேவையில்லாத இடங்களில் சபாஷ் என பாராட்டினான். இதனால், இடைக் காடரின் மனம் மிகவும் வேதனைப் பட்டது. பாட்டு முடிந்ததும், அரசனிடம் சொல்லிக்கொள்ளக் கூட செய்யாமல், வெளியே சென்றுவிட்டார். மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சென்ற அவர், சுந்தரேஸ்வரப் பெருமானிடம்,இறைவா! எவ்வளவு கஷ்டப்பட்டு பாட்டெழுதி வந்தேன். ஆனால், மன்னன் அதைக் கவனிக்காமல் அலட்சியம் செய்து அவமானப் படுத்தி விட்டானே! இந்த அவமரியாதை எனக்கு ஏற்பட்டதல்ல! தமிழுக்கும், தமிழ் வளர்க்கும் மதுரையின் நாயகனான உனக்கும், அன்னை மீனாட்சிக்கும் ஏற்பட்ட அவமரியாதை! ஐயனே! இதற்காக, நீ பாண்டியனுக்கு பாடம் கற்பிக்க வேண்டும். புலவர்களை அவமானப்படுத்திய அந்த மன்னனின் பாடல்களில் பிழை ஏற்படச் செய்து, அவனை சங்கப் பலகையில் அமரவிடாமல் செய்ய வேண்டும், அவனது தவறை அவனுக்கு உணர்த்த வேண்டும், என்று கேட்டுக் கொண்டார். புலவரின் மனநிலையை பாண்டியனுக்கு உணர்த்த முடிவெடுத்தார் சுந்தரேஸ்வரர். வைகையின் தென்கரையில் ஒரு மண்டபத்தை எழுப்பும்படி தேவதச்சன் விஸ்வகர்மாவுக்கு உத்தரவிட்டார். விஸ்வகர்மாவும் அப்படியே செய்தார். அங்கிருந்த லிங்கத்தில் தன்னை மறைத்துக் கொண்டார் இறைவன். மறுநாள், மீனாட்சியம்மன் கோயில் நடை திறக்கப்பட்டது. அம்மன், சுவாமி சன்னதிகளைத் திறந்து அர்ச்சகர்கள் உள்ளே சென்றதும், ஐயோ! என அலறினர். அவரைப் பின்தொடர்ந்து சென்றவர்களும் ஆ...ஆ... இது என்ன விந்தை! என கதறினர்.

ஆம்...கருவறையில் அம்பாள் விக்ரகத்தையும், சிவலிங்கத்தையும் காணவில்லை என்றால், அதிர்ச்சியடைய மாட்டார்களா என்ன! அவர்கள் அரண்மனைக்கு விரைந்து சென்றனர். விஷயத்தைக் கேள்விப் பட்ட மக்களும் அதிர்ச்சியுடன் அவர்களைப் பின் தொடர்நது ஓடினர். பாண்டியனிடம் விஷயத்தை சொன்னதும், அவனுக்கு மயக்கமே வந்துவிட்டது. சோமசுந்தரா! சொக்கலிங்கப் பெருமானே! சுந்தரேஸ்வரா! அம்மா மீனாட்சி! எங்கள் தாயே! இதென்ன விளையாட்டு! நேற்று இரவு நடையடைக்கும் போது, உள்ளேயிருந்த நீங்கள், இப்போது காணாமல் போய்விட்டீர்கள் என்றால், நாங்கள் என்ன பாவம் செய்தோம்? எங்களை ஏன் உங்களுக்குப் பிடிக்கவில்லை? நாங்கள் என்ன தவறு செய்தோம்? கயிலைக்குச் சென்று விட்டாயா? மேருமலையை வில்லாக வளைக்க அங்கே போய்விட்டாயா? உங்களை அன்போடு வணங்கும் பக்தர்களின் மனதில் குடிபுகுந்து விட்டீர்களா? என்று புலம்பினான். அப்போது காவலர்கள் சிலர் வேகமாக ஓடிவந்தனர். மாமன்னரே! வைகையின் தென்கரையில் திடீரென ஒரு மண்டபம் தோன்றியிருக்கிறது. அதில் நம் சுந்தரேஸ்வரப் பெருமானின் திருவடிவமும், அன்னை மீனாட்சியின் அருள்வடிவமும் இருக்கக்கண்டு ஆச்சரியப்பட்டோம். தங்களிடம் விஷயத்தைத் தெரிவிக்கவே ஓடோடி வந்தோம், என்றனர். இதுகேட்ட மன்னன், மக்களுடன் மண்டபம் இருக்கும் திசை நோக்கி விரைந்தான். உள்ளே சென்ற அவன்,இறைவா! இது என்ன விளையாட்டு! அவ்வளவு பெரிய ஆலயத்தை விட்டு, இந்த சிறிய மண்டபத்துக்கு தாங்கள் பிராட்டியாருடன் எழுந்தருளிய காரணம் என்ன! நான் ஏதாவது தவறு செய்திருந்தால், அதை மன்னித்து, மீண்டும் தாங்கள் கோயிலுக்கு எழுந்தருள வேண்டும். நான் யாருக்கும் எந்த தீங்கும் செய்யவில்லையே! நிறைவாக தர்மம் செய்கிறேன். உன் ஆலயத்தில் எந்த ஒரு திருப்பணியையும் குறைவின்றி நிறைவேற்றி வைத்திருக்கிறேன்! சொக்கநாதா! நீ எனக்கு பதில் சொல்லாவிட்டால், இங்கிருந்து அகலமாட்டேன், என கண்ணீர் வழிய கெஞ்சினான். அப்போது அசரீரி ஒலித்தது.

குசேலவழுதி! இந்த மதுரை நகரில் ஏராளமான சுயம்புலிங்கங்கள் புதைந்திருக்கின்றன. அவற்றை தேவர்களும், முனிவர்களும், சித்தர்களும், ராட்சதர்களும், எனது பக்தர்களும் ஸ்தாபித்துள்ளனர். இவற்றில் 64 லிங்கங்கள் மிகச்சிறப் புடையவை. அந்த அறுபத்து நான்கில், எட்டு லிங்கங்களை திசைக் காவலர்களான அஷ்டதிக் பாலகர்கள் வழிபட்டனர். அவற்றில் வடக்கு திசைக்கு அதிபதியான குபேரன் பூஜித்த லிங்கம் இது. இப்போது, இதை நான் தேர்ந்தெடுத்து ஐக்கியமாகியுள்ளேன், என்றது. மன்னன், சுவாமியை நோக்கி, சுவாமி! இப்போது, தாங்கள் இந்த லிங்கத்திற்குள் எழுந்தருளவேண்டிய அவசியம் ஏன் வந்தது? அன்னையாரும் இங்கு வந்துவிட்டாரே! என்ன காரணமென சொல்லுங்கள்? என பதைபதைப்புடன் கேட்டான். அப்போது அசரீரி பதிலளித்தது. பாண்டிய மன்னா! நீ ஒரு பிழை செய்தாய். என் பக்தனும் புலவனுமான இடைக்காடனை அவமதித்தாய். பக்தனுக்கு மதிப்பில்லாத இடத்தில் நான் இருக்கமாட்டேன். அவன் எழுதிய பெருமை மிக்க அந்தாதிகளை அவன் வாசித்த போது, அலட்சியம் செய்தாயே! நினைவிருக்கிறதா! என்றார். மன்னன் இறைவனிடம் மன்னிப்பு கேட்டான். ஆம் தெய்வமே! நான் செய்தது பெரும்பிழை தான். ஒப்புக்கொள்கிறேன். இடைக்காடரை கவுரவித்து விழா எடுக்கிறேன். என்னை மன்னியுங்கள், என்று நெஞ்சுருக கெஞ்சினான். இறைவனும் அவனிடம், மன்னித்தேன். இப்போது, நீ அரண்மனைக்கு திரும்பு. நான் இங்கும் இருப்பேன், மதுரை கோயிலிலும் எழுந்தருள்வேன். இனி இந்தத்தலம் வடதிருவாலவாய் எனப்படும், என்றார். மன்னன் மீண்டும் இறைவன் மதுரைக் கோயிலில், எழுந்தருள்வதாகச் சொன்னது கேட்டு மகிழ்ந்தான். திருப்தியுடன் அரண்மனைக்கு சென்றான். இடைக்காடரை வரவழைத்து விழா எடுத்தான். இடைக்காடரிடமும் தன் தவறுக்கு மன்னிப்பு கோரினான். பிற்காலத்தில் அவனுக்கு ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு அரு மருத்தபாண்டியன் என்று பெயரிட்டான். தந்தைக்குப் பிறகு அவன் பட்டம் ஏற்றான்.

No comments:

Post a Comment

...Recently Published Post...

குளிக்கும் போது...

குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள். (கர்மம் செய்தபின்னும், மயானத்திற்க...