Saturday 18 May 2013

52.தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம்!

மதுரையில் தமிழ் வளர்ந்த நேரத்தில் வங்கியசேகர பாண்டியனின் மகன் வங்கிய சூடாமணி பாண்டியன் ஆட்சிப் பொறுப்பேற்றான். இந்த மன்னன் தான் மீனாட்சியம்மன் கோயிலில் நந்தவனம் அமைத்தவன். பல மரங்களையும், மலர்ச்செடிகளையும் அதில் நட்டான். அதில் பூத்த மலர்களே அம்பாளுக்கும், சுவாமிக்கும் மாலை கட்ட பயன்படுத்தப்பட்டன.
குறிப்பாக செண்பக மலர்கள் இந்த நந்தவனத்தில் பூத்து மணம் பரப்பின. இதனால் இந்த நந்தவனத்தை செண்பகத்தோட்டம் என மக்கள் அழைத்தனர். சுந்தரேஸ்வரருக்கு செண்பகமாலையை அணிவித்து செண்பக சுந்தரர் என்று செல்லப் பெயர் இட்டனர். தங்கள் மன்னனுக்கு செண்பகப்பாண்டியன் என்று புனைப்பெயர் சூட்டி அழைத்தனர். மரம் நட்டதற்காக பட்டப்பெயர் பெற்ற முதல் மனிதன் பூமியில் இவன் தான் போலும்! ஒரு சமயம், அந்த செண்பகவனத்தில் அருகில் இருந்த சந்திரகாந்த சலவை மண்டபத்திற்கு மன்னன் தன் ராணியுடன் வந்தான். மலர்களின் மணம் நாசியைத் துளைத்தது. அதை இன்பமாக நுகர்ந்தபடியே தன் ராணியுடன் கொஞ்சி மகிழ்ந்திருந்தான். அவளது கூந்தலை வருடினான். இந்த மணம் தோட்டத்தில் இருந்து வருகிறதா! இல்லை! என் தேவியின் கூந்தலில் இருந்து வீசுகிறதா! அப்படியானால், பெண்களின் கூந்தலுக்கும் இயற்கையாகவே மணம் உண்டோ? இருக்க முடியாதே... இவளும் செண்பகம், மல்லிகை என பல மலர்களை கூந்தலில் சூடுவாள். அந்த மணம் கூந்தலில் இருக்கத்தானே செய்யும்! அந்த மணம் இங்கே பரவுகிறதோ! என்று சிந்தித்தான். தன் சந்தேகத்தை மனைவியிடமே கேட்டான். மாமன்னரே! திடீரென இதென்ன சந்தேகம்! சந்தேகம் மனிதர்களுக்கு ஆகாது. அதை உடனடியாகத் தீர்த்துக் கொள்ளுங்கள். எனக்கு இந்த சந்தேகத்திற்குரிய விடை தெரியவில்லை. மலர்கள் சூடுவதாலும் வாசனை வரலாம்! இயற்கையாகவும் இருக்கலாம்! எனவே, நீங்கள் இதுபற்றி உங்கள் தமிழ்ச்சங்க புலவர்களிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள், என்றாள். பாண்டியன் அமைச்சர்களை அழைத்து, அமைச்சர்களே! பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா என்ற சந்தேகம் என் மனதில் எழுந்துள்ளது. இதைத் தீர்த்து வைப்பவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு தருகிறேன்.

பரிசுத்தொகையை பட்டு முடிப்பில் கட்டி, நமது தமிழ்ச்சங்க வாசலில் அறிவிப்பு பலகையுடன் தொங்கவிடுங்கள், என்று உத்தரவிட்டான். அமைச்சர்களும் உடனடியாக அதைச் செய்து முடித்தனர். அத்துடன் ஊரெங்கும் இதுபற்றி முரசும் அறையப்பட்டது. அவ்வளவு தான்! அரண்மனை முன்னால் பெரும் கூட்டம் குவிந்தது. வந்தவர்களெல்லாம் தங்கள் வாய்க்கு வந்ததையெல்லாம் மன்னனிடம் சொன்னார்கள். மன்னனுக்கு திருப்தியில்லை. தெளிவான பதில் தெரியவேண்டும், என்று சொல்லி அனுப்பிவிட்டான். மக்களும் ஓய்ந்து போனார்கள். மதுரை நகரில் தருமி என்னும் பெயருடைய ஆதிசைவர் ஒருவர் வசித்து வந்தார். அவருக்கு பெற்றோர் இல்லை, மனைவி இல்லை, சகோதர உறவிலும் யாருமில்லை. அனாதையாகத் திரிந்த அவருக்கு திருமணத்தின் மூலமாக ஒரு பந்தத்தை உருவாக்கிக் கொள்ளும் ஆசை இருந்தது. அனாதையாக இருந்தால் பரவாயில்லை... ஆகாரத்துக்கு கூட வழியில்லாதவனுக்கு யார் பெண் கொடுப்பார்கள்! தருமிக்கு பெண் கொடுக்க யாரும் முன் வரவில்லை. தருமி சுந்தரேஸ்வரரின் தீவிர பக்தர். பெருமானே! மன்னர் ஒரு போட்டி அறிவித்திருக்கிறார். அதில் அறிவிக்கப்பட்ட பரிசு எனக்கு கிடைத்தால், நானும் ஒரு மனிதனாவேன். ஆயிரம் பொன்னுக்கு அதிபதியானால், எனக்கும் ஒரு அழகு மங்கை மணவாட்டியாகக் கிடைப்பாள். நீ தான் அந்தப் பரிசு கிடைக்க அருள வேண்டும், என்று உருக்கமாக வேண்டினார். அப்போது, அங்கே ஒரு புலவர் வந்தார். வந்தவர், சுந்தரேஸ்வரப் பெருமான் என்பது தருமிக்கு எப்படி தெரியும்! அவர் தருமியின் கையில், ஒரு ஓலைச் சுவடியைத் திணித்தார். தருமியே! நீர் மன்னனிடம் இந்த ஓலையுடன் செல்லும்! இதிலுள்ள பாடலை அவரிடம் வாசியும். மன்னனின் சந்தேகமும் தீரும்! உமக்கு பரிசும் கிடைக்கும்! நீர் கேட்ட அழகு மங்கையும் கிடைப்பாள், என்றார். தனக்கு பரிசை அள்ளித் தரப்போகும் பாட்டு கிடைத்ததோ இல்லையோ, தருமி தன் முன்னால் லிங்கவடிவில் இருந்த சுந்தரேஸ்வரரையே மறந்துவிட்டார். பணம் இருந்தால் போதும்! கடவுள் எதற்கு? என்று கேட்பவர்கள், அன்றும், இன்றும், என்றும் இருப்பார்கள் போல் தெரிகிறது. நமக்கு இந்த பணமெல்லாம் திறமையால் வந்தது என்று மார்தட்டிக் கொள்பவர்கள், அந்தத் திறமை யாரால் வந்தது என்பதைச் சிந்திக்க மறந்து விடுகிறார்கள். தருமியும், தனக்குத் தேவையானது கிடைத்ததும், தன்னை ஒரு திறமைசாலியாகக் கருதிக் கொண்டு செண்பகப் பாண்டியன் முன்போய் நின்று, வணக்கம் தெரிவித்தார். மன்னனின் கேள்விக்குரிய விடை அந்தப் பாடலில் இருப்பதாகச் சொன்னதும், மன்னன் மகிழ்ச்சியடைந்து அதை வாசிக்கச் சொன்னான்.

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத்தும்பி
காமஞ்செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழிஇய நட்பின் மயிலியிற்
செறியெயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே

என்று பாடினார். மன்னன் பெரிய தமிழறிஞன். பாடலின் உட்கருத்தை அறிந்த அவன், மிகுந்த மகிழ்ச்சியடைந்தான். பெண்களுக்கு இயற்கையிலேயே கூந்தலில் மணம் உண்டு என்பது இந்தப் பாடல் உணர்த்திய கருத்தாக இருந்தது. அத்துடன், அவனது கருத்தும், பெண்களுக்கு கூந்தலில் இயற்கை மணமுள்ளது என்பதாக இருந்ததால், தருமிக்கு பரிசுப்பொருளைக் கொடுக்க உத்தரவிட்டான். தருமிக்கு ஏக சந்தோஷம்! யாரோ ஒருவர் கொடுத்த பாட்டிற்கு, ஆயிரம் பொற்காசு பரிசு, அடுத்து திருமணம், குழந்தை குட்டிகள், வீடு, வாசல், தூரத்து சொந்தங்கள் கூட காசைக் கண்டதும் ஓடி வரும் நிலைமை... இதையெல்லாம் நினைத்து பரவசத்தில் மகிழ்ந்து நின்றார். தருமியைக் காவலர்கள் தமிழ்ச் சங்க மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்த தலைமை புலவர் நக்கீரர், விஷயத்தைக் கேள்விப்பட்டு தருமியின் கையில் இருந்த ஓலையை வாங்கிப் படித்தார். பின்னர் மன்னனும் அங்கு வர, மன்னா! தருமியின் பாட்டிலுள்ள சொற்களில் பிழையேதும் இல்லை. ஆனால், அதன் பொருள் பிழையானதாக உள்ளதே! இதற்கு தாங்கள் பரிசு அறிவித்திருப்பது ஆச்சரியமாக உள்ளது, என்று சர்ச்சையைக் கிளப்பினார். இந்த சர்ச்சைக்கு பதிலளிக்க தருமி ஒன்றும் தமிழ்ப்புலமை மிக்கவர் இல்லையே! அதிலும் புகழ்மிக்க நக்கீரருடன் வாதம் செய்யும் திறமை யாருக்கு இருக்கிறது! மன்னனும், ஏதும் பேசாமல் நிற்கவே, தருமியிடம் ஓலை திரும்ப நீட்டப்பட்டது. தருமிக்க அழுகை பொத்துக்கொண்டு வந்தது. அதை அடக்கிக்கொண்டே சுந்தரேஸ்வரர் சன்னதிக்கு ஓடினார். பெருமானே! என் கையில் யாரோ ஒருவர் கொண்டு வந்த தந்த ஓலை கிடைத்ததும், உன்னையே மறந்து பொருளாசையில் அரசவைக்கு ஓடினேனே! அதற்கு தகுந்த தண்டனை கிடைத்துவிட்டது. இனி, என் ஆசை எப்படி நிறைவேறும்! நான், அனாதையாக வாழ வேண்டுமென்பது தான் என் விதி போலும்! எனக்கு இப்படி ஒரு பிழையான பாட்டை ஏன் கிடைக்கச் செய்தாய்? என்று புலம்பினான்.

தன் பக்தனின் குரல் கேட்டும், தன் பாடலிலேயே குற்றம் கண்டுபிடித்த நக்கீரருடன் வாதம் செய்யவும் எண்ணிய சுந்தரேஸ்வரர், மீண்டும் புலவர் வடிவில் தருமி முன் தோன்றினார். தருமி நடந்த விஷயங்களை அவரிடம் சொல்ல, ஏதுமறியாதவர் போல் கேட்ட அந்தப் புலவர் கோபத்துடன், தமிழ்ச்சங்கத்துக்கு விரைந்தார். தங்கள் முன்னால் ஒரு புலவர் செந்நிற முகத்துடன், ஜோதிவடிவமாய் நிற்பதைக் கண்டு செண்பகப்பாண்டியன் வியந்தான். அவரது தோற்றம் அவனைத் தடுமாறச் செய்தது. புலவர் சிங்கம் கர்ஜிப்பது போல் பேசினார். எனது பாட்டில் பிழையிருப்பதாகச் சொன்னீர்களாமே! எனக்கென்ன இலக்கணம் தெரியாதா? என்று கேட்டார். அப்போது நக்கீரர், புலவரே! உமது பாட்டின் சொற்களில் குற்றமில்லை, பொருளில் மட்டுமே குற்றமிருப்பதாகச் சொன்னேன், என்றார். அவருக்கு வந்திருப்பது சாதாரணப் புலவரல்ல! இறைவனே என்பது அவரது தோற்றப்பொலிவில் இருந்தே விளங்கிவிட்டது. இருப்பினும், தமிழ் மீது தான் கொண்ட பற்று காரணமாக ஈசனிடமே வாதிடத் தொடங்கி விட்டார். சுந்தரேஸ்வரர் அவரிடம், கற்புக்கரசிகள், தேவலோகப் பெண்கள் ஆகியோருக்கு கூட கூந்தலில் இயற்கை மணம் இல்லையோ எனக் கேட்டார். நக்கீரர் அவரிடம், நிச்சயமாக இல்லை, என மறுத்தார். சரி.. நீர் தினமும் வணங்கும் காளஹஸ்தீஸ்வரரின் துணைவியான ஞானப்பூங்கோதை அம்மைக்கும் அப்படித்தானோ, என்றார். ஆம்...என் அன்னை உமையவளுக்கும் கூட அப்படித் தான், என்று அடித்துச் சொன்னார் நக்கீரர். அப்போது சுந்தரேஸ்வரர் ஆக்ரோஷமானார். தன் நெற்றிக்கண்ணை அவர் திறக்க நக்கீரர் நடுங்கவில்லை. நீர் இறைவனாகவே இருந்தாலும், உம் பாடலின் பொருள் தவறானது தான், என்று துணிச்சலுடன் வாதிட்டார். அப்போது, சுந்தரேஸ்வரர் தன் கண்களிலிருந்து தீப்பொறிகளை அவர் மீது பாய்ச்ச, நக்கீரர் பொற்றாமரை குளத்தில் போய் விழுந்தார். சுந்தரேஸ்வரர் மறைந்து விட்டார்.

No comments:

Post a Comment

...Recently Published Post...

குளிக்கும் போது...

குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள். (கர்மம் செய்தபின்னும், மயானத்திற்க...