Saturday 18 May 2013

41. விறகு விற்ற படலம்!

வரகுணபாண்டியனின் ஆட்சிக்காலத்தில், வடநாட்டைச் சேர்ந்த ஹேமநாதன் என்ற யாழ் இசைக்கலைஞர் மதுரை வந்தார். அவரை வரவேற்ற வரகுணன், அவர் பல நாடுகளிலுள்ள யாழிசை விற்பன்னர்களை எல்லாம் வென்றவர் என்பதை அறிந்தார். தனது அரண்மனையில் தங்கிச்செல்ல கேட்டுக்கொண்டார். பாண்டியனின் உபசரிப்பால் மகிழ்ச்சியடைந்த ஹேமநாதனும் அதற்கு சம்மதித்தார்.ஹேமநாதன் இசையில் யாருக்கும் சளைத்தவர் அல்ல என்றாலும், அந்த திறமையே அவருக்கு அகந்தையையும் வளர்த்து விட்டிருந்தது.
அவர் தன்னோடு வந்த சீடர்களை பாண்டிய நாடெங்கும் அனுப்பி, யாழ் வாசிக்கச் சொன்னார். அவர்களது இசை நாட்டு மக்களைக் கவர்ந்தது. ஹேமநாதனின் புகழ் எங்கும் பரவியது. இயற்கையிலேயே அகந்தை மிக்க ஹேமநாதனுக்கு, இந்தப் புகழ் மேலும் கண்ணை மறைத்தது. மன்னரைப் பார்க்க அரண்மனைக்கு வரும்போது கூட அலட்சியமாக நடந்து கொண்டார். அவரது செருக்கை அடக்க முடிவெடுத்தான் வரகுணபாண்டியன். அவ்வூரில் பாணபத்திரர் என்ற யாழிசைக் கலைஞர் இருந்தார். அவரை அழைத்த வரகுணன், பாணபத்திரரே! இங்கே வந்துள்ள ஹேமநாதன் அகந்தை மிகுதியால் என்னையோ மற்ற கலைஞர்களையோ மதிப்பதில்லை. அவரது ஆணவத்தை அழிக்க நீரே தகுதியான நபர். நீர் இசைக்கும் யாழிசையின் முன்னால், அவரது இசை எடுபடாமல் போக வேண்டும். அவர் முன்னால் யாழிசைக்க நான் ஏற்பாடு செய்கிறேன், என்றான். பாணபத்திரரும் ஒப்புக்கொண்டார்.

மன்னா! சோமசுந்தரப் பெருமானின் அருளாசியுடன் அந்தக் கலைஞனின் செருக்கை அடக்கியே தீருவேன். அவர் பெற்றுள்ள விருதுகள், வாங்கிய பரிசுகளை எனக்கு உரிமையுள்ளதாக செய்வேன், என சபதம் செய்தார். சபதம் செய்துவிட்டு அரண்மனையை விட்டு வெளியே வந்த பாணபத்திரனின் காதுகளில், தேனாறு பாய்வது போல யாழிசை கேட்டது. அதை வாசிப்பது யார் என எட்டிப் பார்த்தான். அனைவரும் ஹேமநாதனின் சீடர்கள். இப்போது தான் அவர் யோசிக்க ஆரம்பித்தார். அவசரப்பட்டு மன்னனிடம் சபதம் செய்து விட்டோமே! ஹேமநாதனின் சீடர்களே இவ்வளவு இனிமையாக பல புதுமைகளைப் புகுத்தி யாழ் மீட்டுகிறார்கள் என்றால், ஹேமநாதனிடம் எவ்வளவு திறமை ஒளிந்திருக்கும்! இவர்களின் அளவுக்கு என்னிடம் திறமை இல்லையே! என்ன செய்யலாம்? அவரை பயம் பிடித்து ஆட்டியது. அதே நேரம் இறைவனின் நினைவு வரவே, அவர் சுந்தரேஸ்வரர் கோயிலுக்குச் சென்றார். பெருமானை வணங்கி, ஐயனே! நீ ஆளும் பாண்டியநாட்டின் பெருமையை உலகறியச் செய்வது உன் பொறுப்பே, என்று மெய்யுருகி வணங்கி விட்டு சென்று விட்டார். அந்த பக்தனுக்காக தன் கால் நோக நடந்து, கை நோக விறகு வெட்டி, தலைநோக அதைச் சுமந்து சென்று விற்க தயாராகி விட்டார் சுந்தரேஸ்வரர். விறகு வெட்டியாக வேஷம் பூண்டு மதுரை நகர தெருக்களில் அலைந்தார். ஒரு கிழிந்த ஆடையை உடுத்திக் கொண்டு, தலையில் இருந்த பிறைச்சந்திரனை அரிவாள் போல் ஆக்கி இடுப்பில் செருகி வைத்திருந்தார் அவர். கால்களில் ஒரு தேய்ந்த மரச்செருப்பு இருந்தது. பழைய யாழ் ஒன்றை அவரது தோளில் மாட்டிக் கொண்டார். விறகுக்கு அநியாய விலை சொல்லிக்கொண்டு யாருக்கும் விற்க மறுத்து, மாலை வரை நேரத்தை ஓட்டினார். பின், ஹேமநாதன் தங்கியிருந்த அரண்மனை போன்ற வீட்டுத் திண்ணையில் அமர்ந்தார். விறகு கட்டை இறக்கி வைத்து விட்டு, தன்னிடமிருந்த யாழை எடுத்து மீட்டத் துவங்கினார். ஆஹா... தேனினும் இனிய இசை அந்தப் பகுதியை நிறைத்தது. ஹேமநாதனின் சீடர்கள் இந்த இசை கேட்டு எழுந்தோடி வந்து தங்களை மறந்து ரசித்தனர். ஹேமநாதனையும் அந்த இசை ஈர்த்தது. உறங்க இருந்த அவர் விரைந்து வந்து அந்த இசையை ரசித்தார். தன்னை மறந்து யாழிசைத்து முடித்த விறகுவெட்டியிடம் சென்ற அவர், தம்பி, நீ யாரப்பா? விறகு விற்கும் உன்னிடமா இவ்வளவு பெரிய இசை புதைந்துள்ளது. நீ இசைத்தால் பொருட்கள் அசைவதையும், இசையை நிறுத்தினால் உயிர்களே அசைவில்லாமல் போய் விடுவதையும் கவனித்தேன். இப்படிப்பட்ட அரிய இசையை யாரிடம் கற்றாய்? என்றார்.

ஐயா! நான் ஒரு காலத்தில் இவ்வூரிலுள்ள யாழிசைக் கலைஞரிடம் பாடம் படித்தேன். எனக்கு வாசிக்கவே தெரியவில்லை என அவர் என்னை விலக்கி விட்டார். அவ்வப்போது, அவரிடம் படித்த பாடத்தை நினைவுபடுத்தி ஏதோ வாசிப்பேன். வயிற்றுக்காக விறகு விற்கிறேன், என்று ஏதுமறியாதவர் போல் சொன்னார் சுந்தரேஸ்வரப் பெருமான். ஹேமநாதர் கோபத்துடன், உன்னை வகுப்பில் இருந்து விலக்கிய அந்த முட்டாள் புலவன் யார்? என்றார். ஐயனே! அப்படியெல்லாம் சொல்லாதீர்கள். அவர் தனது இசையால் இறைவனின் மனதையே தன் வசமாக்கி விடுபவர். யாழிசை மேதை, என்று அப்பாவியாய் சொன்னார் சொக்கநாதர். யார் அந்த புலவர் திலகம்? என்று விறகுவெட்டியிடம் ஹேமநாதன் கேட்கவே, அவர் பெயர் பாணபத்திரர். அரசவை யாழிசைக் கலைஞர், என்று சிவபெருமான் கூறவே அரண்டுவிட்டார் ஹேமநாதன். இந்த விறகுவெட்டியிடமே இவ்வளவு திறமை இருந்தால், இவனது குருவிடம் எந்தளவுக்கு திறமை இருக்கும் என நினைத்தவர், பாணபத்திரருக்கு என் திறமை அனைத்தும் சமர்ப்பணம். என் பரிசுப் பொருட்களை இங்கேயே விட்டுச்செல்கிறேன். அவற்றை அவரிடமே ஒப்படையுங்கள், என எழுதிக் கொடுத்து விட்டு சீடர்களுடன் இரவோடு இரவாக கிளம்பிச் சென்றுவிட்டார். மறுநாள் அவையே பரபரப்பாக இருந்தது. ஹேமநாதன் காணாமல் போனது தான் அன்றைய சூடான விவாதமாக இருந்தது. இதற்குள் எம்பெருமான் பாணபத்திரரின் இல்லத்துக்குச் சென்று நடந்ததைச் சொல்லி மறைந்தார். தனக்காக விறகு சுமந்த அண்ணலை வணங்கி, மன்னரைக் காணச் சென்றார் பாணபத்திரர். அவரது பாதங்களில் விழுந்த மன்னன், இறைவனே உமக்காக பாதம் நோக பணிசெய்கிறார் என்றால், அவருக்கு பிடித்தமான உமது பாதங்கள் எனது வணக்கத் திற்குரியவை. இனி, நீர் என்னைப் புகழ்ந்து இசை மீட்டாமல், இறைவனின் புகழையே பாட வேண்டும், என கேட்டுக்கொண்டான். பாணபத்திரரும் அவ்வாறே செய்து வந்தார்.

No comments:

Post a Comment

...Recently Published Post...

குளிக்கும் போது...

குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள். (கர்மம் செய்தபின்னும், மயானத்திற்க...