Friday 17 May 2013

63. சமணரைக் கழுவேற்றிய படலம்!

சம்பந்தர் இறைவனிடம், சைவத்துக்கு இடைஞ்சல் செய்பவர்களைத் தண்டிக்க வேண்டுமென வேண்டிக்கொண்டார். இதனிடையே மன்னனின் நோயைக் குணப்படுத்த முடியாமல் வீடு திரும்பிய சமணர்களை அவர்களது மனைவிமார் கேவலமாகப் பேசினார்கள். இதனால் சமணர்களுக்கு அவமானமாகப் போய்விட்டது.
மனைவி கூட மதிக்க மறுக்கிறாளே என்று கோபபப்பட்ட அவர்கள் சம்பந்தரை ஒரு போட்டிக்கு அழைக்க முடிவு செய்தனர். அவைக்கு வந்து மன்னன் முன்னிலையில், இளம் பாலகனே! உன் மந்திரம் பெரிதா? எங்கள் மந்திரம் பெரிதா? என முடிவு கட்டவே இங்கு வந்துள்ளோம். நாம் இருதரப்பும் எழுதிய மந்திரங்களை அனலில் போடுவோம். அது எரியாமல் இருக்கிறதோ, அதுவே உயர்ந்த மந்திரம். இதுதான் போட்டி, என்றனர்.சம்பந்தர் தான் எழுதிய பாடல் ஏட்டைப் பிரித்து அதனிடையே கயிறைப் போட்டார். போகமார்த்த பூண்முலையாள் பொன்னகலம் என்று துவங்கும் திருநள்ளாற்றுப் பதிகம் கிடைத்தது. (ஏழரைச்சனி, அஷ்டமத்துச் சனியால் துன்பம் அனுபவிப்போர் இதைப் பாடுவது வழக்கம்) அதை அக்னி குண்டத்தில் போட்டார். சமணர்களும் தங்கள் மந்திரச் சுவடிகளைப் போட்டார்கள். குண்டம் அணைந்ததும் சமணர்களின் ஏடு சாம்பலாகி இருந்ததையும், திருநள்ளாற்றுப் பதிகம் முன்பை விட புதிய பொலிவுடன் இருந்ததையும் கண்டனர். இதுகண்டு மக்கள் ஆரவாரம் செய்தனர். சமணர்கள் விடவில்லை. நம் இருவரின் மந்திரங்களையும் வைகை ஆற்றில் விடுவோம். யாருடைய ஏடு நீரை எதிர்த்துச் செல்கிறதோ, அவரே வென்றவர், என்றனர். உடனே அமைச்சர் குறுக்கிட்டார். சமணர் களை கருவறுக்க இதுதான் தக்க சமயமென்பதை உணர்ந்து, சரி... தொடர்ந்து நீங்கள் தோற்று வருகிறீர்கள். இந்தப் போட்டியிலும் தோற்றால் என்ன செய்ய வேண்டும், என்று கேட்டார். வடைக்காக ஆசைப் பட்டு எலி, ஒரு பொறியில் சிக்கிக் கொள்வது போல, சமணர்கள் தங்கள் வாயாலேயே தங்கள் ஆயுளை நிர்ணயித்துக் கொண்டனர்.

அப்படி ஒருவேளை நாங்கள் தோற்றால் எங்களை கழுவில் ஏற்றிக் கொல்லுங்கள், என்றனர். கழு என்பது உடலைக் குத்தி இரண்டாகக் கிழிக்கும் அமைப்பு கொண்ட கருவி. மரத்தால் செய்யப்பட்டிருக்கும். அனைவரும் வைகைக் கரைக்குப் புறப்பட்டனர். மழைக்காலம் என்பதால், வெள்ளம் கரை புரண்டு ஓடிக்கொண்டிருந்தது ஏடுகளை ஆற்றில் போடுங்கள், என மன்னன் உத்தரவிட்டான். அத்திநாத்தி என்னும் பெயர் கொண்ட தங்கள் கொள்கைகள் அடங்கிய ஏடுகளை ஆற்றில் போட்டனர். அவ்வளவு தான்! பெரும் வெள்ளத்தில் அது அடித்துச் செல்லப் பட்டது. சமணர்கள் தங்கள் உயிரை இழந்தோம் என கலங்கி நின்றனர். ஆசனத்தில் இருந்த சம்பந்தர் எழுந்தார். வாழ்க அந்தணர் வாழ்க ஆவினம் என்று எழுதப்பட்ட பாடல்களைக் கொண்ட பதிக ஏட்டை பக்தியுடன் ஆற்றில் இட்டார். கையில் விழுந்த ஏடு, தண்ணீரைக் கிழித்துக் கொண்டு எதிர்த்துச் சென்று ஓரிடத்தில் மாயமாய் மறைந்தது. அந்த இடத்தில் ஒரு வில்வமரம் இருந்தது. அந்த மரத்தடியில் சிவபெருமான் லிங்க வடிவில் தோன்றி சம்பந்தருக்கு காட்சியளித்தார். உடனே சம்பந்தர் வன்னியமும் மத்தமமும் என்ற பாடலைப் பாடினார். சுயம்புலிங்கத்தை பலமுறை வலம் வந்து போற்றினார். அப்போது, சிவபெருமான் ஒரு முதியவர் வடிவத்தில் அங்கு வந்தார். சம்பந்தரை மார்போடு தழுவி, நீ எனது இளைய பிள்ளையைப் போல் இருக்கிறாய் என்றார். சம்பந்தர் அவரிடம்,ஐயனே! எனது ஏட்டை ஆற்றில் இட்டேன், அது இவ்விடத்தில் மறைந்து விட்டது. அரியபாடல்கள் கொண்ட அந்த ஏட்டைத் தந்தருள வேண்டும், என்றார். முதியவரும் அந்த ஏட்டை அவரிடம் கொடுத்து, சம்பந்தா! நீ பல தலங்களுக்குச் சென்று எம்மைப்பாடி மகிழ்ச்சிப்படுத்திய பின் என் திருவடி நிழலை வந்தடைவாய், என்று சொல்லி மறைந்து விட்டார். சம்பந்தரும் சைவத்தைக் காப்பாற்றிய மகிழ்ச்சியுடன் மன்னனிடம் விடைபெற்று கிளம்பினார்.

No comments:

Post a Comment

...Recently Published Post...

குளிக்கும் போது...

குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள். (கர்மம் செய்தபின்னும், மயானத்திற்க...