Saturday 18 May 2013

சங்கப் பலகை கொடுத்த படலம்!

வங்கியசேகரனின் ஆட்சி பாண்டியநாட்டில் நடந்தபோது, வடக்கே உள்ள காசியில் பிரம்மா பத்து அசுவமேத யாகங்களை செய்தார். யாகம் முடிந்த மறுதினம் அவர் தனது துணைவியரான சரஸ்வதி, சாவித்ரி, காயத்ரி ஆகியோருடன் கங்கையில் நீராடச் சென்றார். செல்லும் வழியில் ஒரு கந்தர்வக்கன்னி யாழ் மீட்டிக்கொண்டிருந்தாள். அந்த இனிய இசையைக் கேட்ட சரஸ்வதி,
தனது வீணை இசையைவிட அந்தக்கன்னியின் யாழிசை இனிமையாக இருந்ததால் தன்னை மறந்து அங்கேயே நின்றுவிட்டாள். இதைக் கவனிக்காத பிரம்மா மற்ற மனைவியருடன் கங்கைக்குச் சென்றுவிட்டார். அவர்களுடன் இணைந்து நீராடி கரையேறினார். இசையில் லயித்திருந்த சரஸ்வதி அந்தக்கன்னி தன் இசையை முடித்ததும் தன்னிலைக்குத் திரும்பினாள். கணவரும் மற்ற தேவியரும் தன்னைக் கவனிக்காமல் முன்கூட்டியே சென்றுவிட்டது பற்றி அவளுக்கு வருத்தம் ஏற்பட்டது. நீராடிவிட்டு கரையில் நின்ற அவர்கள் அருகே சென்ற சரஸ்வதி பிரம்மாவிடம், நான் அந்தப் பெண்ணின் இன்னிசை யில் மயங்கி அந்த இடத்தில் நின்றுவிட்டேன். நான் பின்னால் வருகிறேனா என்பதைக்கூட கவனிக்காமல் நீங்கள் மூவரும் சென்றுவிட்டீர்கள்.நான்வரும்வரை நீங்கள் கரையில் காத்திருந்திருக்கலாம். இணைந்தே நீராடியிருக்கலாம். ஆனால், சற்றும் என்னைப் பொருட்படுத்தாமல் நீங்கள் மட்டும் நீராடிவிட்டு கரையேறியது நியாயமா? என்று கேட்டாள். அவளது கோபத்தைக் கண்ட பிரம்மா, நீ சொல்வது வித்தியாசமாக இருக்கிறது. இசைக்கு ராணியே நீதான். நீ இன்னொரு பெண்ணின் இசையில் லயித்து நின்றாய் என்றால் என்னால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? மேலும் முன்னே செல்லும் கணவனின் பின்னால் வருவதுதான் ஒரு பத்தினிக்குரிய கடமை. அதை மறந்து நீ இசையை ரசித்தது மட்டுமல்லாமல் கோபப்படுவது முறையற்றது. எனவே கடமை மறந்த உனக்கு ஒரு சாபம் கொடுப்பேன்.

உனக்கு 48 வடிவங்கள் இருக்கின்றன. இந்த வடிவங்கள் அனைத்தும் பூலோகத்தில் புலவர்களாக பிறவி எடுக்கும். இந்த 48 பேருக்கும் பூலோகத்தில் உள்ள ஆலவாய் என்னும் மதுரை நகரில் உள்ள சுந்தரேஸ்வர பெருமான் தலைமைப்புலவராக இருப்பார். அவரது அருளால் உனது வடிவங்கள் ஒன்றிணைந்து மீண்டும் பிரம்மலோகத்திற்கு வருவீர்களாக, என்றார். பிரம்மாவின் சாபப்படி சரஸ்வதியின் 48 வடிவங்களும் மதுரையில் புலவர்களாக அவதரித்தனர். அவர்கள் 18 மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தனர். சுந்தரேஸ்வர பெருமானின் பக்தர்களாக அவர்கள் திகழ்ந்தனர். அந்தப் புலவர்களை சோதிக்கும் வகையில் சுந்தரேஸ்வர பெருமான் ஒருமுறை மற்றொரு புலவர் போல வேடமணிந்து அந்தப் புலவர்களின் முன்னால் தோன்றினார். புலவர்களே! உங்களைப் பார்த்தால் புலமையில் மிகவும் தேர்ச்சி பெற்றவர் களாக தெரிகிறது. நீங்கள் இப்போது என்ன பணியில் ஈடுபட்டிருக்கிறீர்கள்? என்று கேட்டார். அந்தப் புலவர்கள் அவரிடம், எங்களுக்கு ஒரு நல்ல தலைவரை தேடிக்கொண்டிருக்கிறோம். அவரது தலைமையில் நாங்கள் இதுவரை இயற்றிய நூல்களை அரங்கேற்றம் செய்ய முடிவு செய்துள்ளோம், என்றனர். அப்படியானால் என்னோடு வாருங்கள், என்ற புலவர் அவர்களை சுந்தரேஸ்வரரின் சன்னதிக்கு அழைத்துச் சென்றார். நேராக கருவறைக்குச் சென்றவர் அப்படியே லிங்கத்துடன் ஐக்கியமாகிவிட்டார். தங்களை அழைத்து வந்தது சுந்தரேஸ்வர பெருமானே என்பதை உணர்ந்த 48 புலவர்களும் அவரையே தங்கள் தலைவனாக ஏற்றனர். இதைப்பற்றி அறிந்த வங்கிய சேகர பாண்டியன், அந்தப் புலவர்களை தனது அவைக்கு வரவழைத்தான். அவர்கள் மன்னனை வாழ்த்தி பாமாலை பாடினர். இதைக் கேட்டு மகிழ்ந்த பாண்டியர் அவர்களுக்கு பொன்னும் பொருளும் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் கோயிலின் வடமேற்கு திசையில் மண்டபம் ஒன்றை கட்டிக் கொடுத்தான்.

அந்த மண்டபத்திற்கு சங்க மண்டபம் என்று பெயர் சூட்டப்பட்டது. 48 புலவர்களும் சங்கப் புலவர்கள் என அழைக்கப் பட்டார்கள். எங்கிருந்தோ வந்த புதிய புலவர்களுக்கு இப்படி சலுகைகள் அளிக்கப்பட்டது மதுரை நகரில் ஏற்கனவே இருந்த பழைய புலவர்களுக்கு பொறாமையை ஏற்படுத்தியது. எனவே வாதப் போட்டி ஒன்றுக்கு ஏற்பாடு செய்து புதியவர்களை தோற்கடிக்க பழையவர்கள் முடிவு செய்தனர். பாண்டியனும் வாதப்போட்டிக்கு ஏற்பாடு செய்தான். ஆனால், புதியவர்களின் வாதத்திறமையின் முன்னால், பழையவர்களின் வாதம் எடுபடவில்லை. அவர்கள் தோற்றோடினர். பின், சங்கப்புலவர்கள் அனைவரும் சுந்தரேஸ்வரரின் சன்னதிக்குச் சென்று தங்கள் புலமையை மேலும் வளர்க்க அருள்புரியும்படி வேண்டினர். சுந்தரேஸ்வரர் அவர்கள் முன் முன்னர் வந்த அதே புலவர் வடிவில் வந்தார். புலவர்கள் அவரை வணங்கினர். அவர் புலவர்களிடம் ஒரு பலகையைக் கொடுத்தார். புலவர்களே! இந்தப் பலகை பார்ப்பதற்கு குறுகியது. ஆனால், மந்திரசக்தி கொண்டது. ஒரு புலவர் தனது பாடலுடன் இந்தப் பலகையில் அமர வரலாம். பாடல் சரியாக இருந்தால் இது இடம் கொடுக்கும். அடுத்த புலவர் ஒரு சரியான பாடலுடன் வந்தால் இது சற்று நீண்டு அவருக்கும் இடம் கொடுக்கும். நீங்கள் அனைவருமே சரியான பாடலுடன் வந்தால் 48 பேருமே அமருமளவுக்கு இது வளரும். நீங்கள் மாற்றாருடன் பாடல் போர் செய்ய நேரிட்டால், உங்கள் பாடல் சரியானது தானா என்று அறிந்து கொள்ள ஒரு துலாக்கோல் (தராசு) போல இது உதவும், என்று சொல்லி மறைந்தார். சங்கப்புலவர்களான நக்கீரர், பாணர் போன்றவர்கள் இதில் சரியான பாடல்களுடன் முதலில் அமர்ந்தனர். மற்றவர்களும் வரிசையாக அமர பலகை இடம் கொடுத்தது. ஆனால், அனைவரது பாடலும் ஒரே பொருளைக் குறிப்பதாக அமையவே, ஒவ்வொருவரும் தங்கள் பாடல் எது என தெரியாமல் ஒருவருக்கொருவர் சண்டை போட்டனர். அப்போதும், சுந்தரேஸ்வரர் புலவர் வடிவில் வந்து, அவரவருக்குரிய சரியான பாடலைப் பிரித்துக் கொடுத்தார்.

No comments:

Post a Comment

...Recently Published Post...

குளிக்கும் போது...

குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள். (கர்மம் செய்தபின்னும், மயானத்திற்க...